பிரதமர் அலுவலகம்

சுதந்திரப் போராட்டத்தின் அதிகம் அறியப்படாத நாயகர்களின் கதைகளை முன்னணிக்குக் கொண்டு வருமாறு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை மனதின் குரலில் பிரதமர் கேட்டுக்கொண்டார்

Posted On: 30 AUG 2020 3:04PM by PIB Chennai

சுதந்திரப் போராட்டத்தின் அதிகம் அறியப்படாத நாயகர்களின் கதைகளை முன்னணிக்குக் கொண்டு வருமாறு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை மனதின் குரலின் சமீபத்திய உரையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார்

 

ஒருவர் தமது வாழ்க்கையின் வெற்றிகளைப் பற்றி எண்ணும் போது, அவர்களது மனங்களில் அவர்களுடைய ஏதாவது ஒரு ஆசிரியர் பற்றிய நினைவு கண்டிப்பாக நிழலாடும் என்று பிரதமர் கூறினார். கொரோனா ஆசிரியர்கள் முன்பாக ஒரு சவாலை உருவாக்கியது என்றும், ஆனால் அவர்கள் அதை ஒரு நல்வாய்ப்பாகவே மாற்றி, படிப்பில் தொழில்நுட்பத்தையும், புதிய வழிமுறைகளையும் கையாண்டு, தங்கள் மாணவர்களுக்கும் கற்பித்தார்கள் என்றும் அவர் கூறினார். புதிய கல்விக் கொள்கையின் ஆதாயங்களை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதில் நமது ஆசிரியர்கள் பெரும்பங்கு வகிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக இருக்கிறது என்று அவர் கூறினார்.

 

2022-ஆம் ஆண்டில் நமது நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை நிறைவு செய்ததைக் கொண்டாட இருக்கிறது என்று குறிப்பிட்ட பிரதமர், நமது இன்றைய மாணவர்களுக்கு சுதந்திரப் போராட்டத்தில் நமது நாட்டின் நாயகர்கள் பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும்என்பது மிக

அவசியமானது என்றார். தங்களுடைய பகுதிகளில், சுதந்திரப் போராட்டக்காலத்தில் என்ன நடந்தது, எப்படி நடந்தது, யாரெல்லாம் உயிர்த்தியாகம் செய்தார்கள், யாரெல்லாம் எத்தனை காலம் வரை சிறையில் கிடந்து வாடினார்கள் என்ற விவரங்களை நமது மாணவர்கள் தெரிந்து கொண்டால், அவர்களுடைய ஆளுமையிலும் இதன் தாக்கம் தென்படும் என்று அவர் கூறினார்.

 

அவர்கள் வாழும் மாவட்டத்தில் சுதந்திரப் போராட்டத்தின் போது நடந்த சம்பவங்களைப் பற்றி மாணவர்கள் ஆய்வு மேற்கொள்ளலாம் என்று பிரதமர் ஆலோசனை தெரிவித்தார். சுதந்திரப் போராட்டத்தோடு
தொடர்பு கொண்ட ஏதாவது ஒரு இடத்திற்கு மாணவ மாணவியரைக்
கூட்டிச் செல்ல திட்டமிடலாம். சில பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆனதைக்
குறிக்கும் விதத்தில், தங்களுடைய பகுதியில் வாழ்ந்த நமது சுதந்திர இயக்கத்தின் 75 நாயகர்கள் பற்றிய கவிதைகளையும், நாடகங்களையும் எழுதுவோம் என்று உறுதி எடுத்துக் கொள்ளலாம் என்று அவர் கூறினார்.

 

லட்சக்கணக்கான அதிகம் அறியப்படாத சுதந்திரப் போராட்ட
நாயகர்களைப் பற்றி உலகம் அறிந்துக்
கொள்ள இத்தகைய முயற்சிகள் உதவும் என்று பிரதமர் குறிப்பிட்டார். செப்டம்பர் 5 அன்று ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்படவிருப்பதால், இதற்கான ஒரு சூழலை ஏற்படுத்தும் பணிகளையும் தயாரிப்புகளையும் தொடங்குமாறு ஆசிரியர்களை பிரதமர் கேட்டுக்கொண்டார்.

 

                            *******


(Release ID: 1650279) Visitor Counter : 258