பிரதமர் அலுவலகம்
ஜான்சியில் அமைந்துள்ள ராணி லட்சுமிபாய் மத்திய வேளாண்மைப் பல்கலைக்கழக கல்லூரி மற்றும் நிர்வாகக் கட்டடங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொளி மூலம் திறந்து வைத்தார்
வேளாண்மை நிலையங்கள் மாணவர்களுக்குப் புதிய வாய்ப்புகளை அளிக்கும், ஆராய்ச்சி மற்றும் நவீன தொழில்நுட்பங்களை வேளாண் தொழில் செய்பவர்களுக்குக் கொண்டு சேர்க்கும் என்றார் பிரதமர்
தற்சார்பு இந்தியா இயக்கத்தை வெற்றிகரமானதாக ஆக்க மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்
பண்டல்காண்ட் பிராந்தியத்தில் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான 500 நீர் தொடர்பான திட்டங்களுக்கு ஒப்புதல்; ரூ.3000 கோடி மதிப்பிலான திட்டங்களில் ஏற்கெனவே பணிகள் தொடங்கிவிட்டன
Posted On:
29 AUG 2020 3:13PM by PIB Chennai
ஜான்சியில் அமைந்துள்ள ராணி லட்சுமிபாய் மத்திய வேளாண்மைப் பல்கலைக்கழக கல்லூரி மற்றும் நிர்வாகக் கட்டடங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். பல்கலைக்கழகத்தின் மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார்.
அனைவருக்கும் பிரதமர் பாராட்டுகள் தெரிவித்துக் கொண்டார். இந்தப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறும் மாணவர்கள், வேளாண்மைத் துறையில் நாட்டின் வல்லமையை இன்னும் அதிகரிப்பதில் பங்களிப்பு செய்வார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். புதிய கட்டடங்கள் உருவாக்கப்பட்டதால் கிடைத்துள்ள புதிய வசதிகள், கடுமையாக உழைப்பதற்கு மாணவர்களை ஊக்குவித்து, உத்வேகம் தருவதாக இருக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
``எனது ஜான்சியை நான் விட்டுத்தர மாட்டேன்'' என்று ராணி லட்சுமிபாய் கூறியதை மேற்கோள் காட்டிய பிரதமர், ஜான்சி மற்றும் பண்டல்காண்ட் பகுதி மக்கள், தற்சார்பு இந்தியா திட்டத்தை வெற்றிகரமானதாக ஆக்கிட பங்களிப்பு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதில் வேளாண்மைத் துறைக்கு முக்கிய பங்கு உள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். விவசாயிகளை உற்பத்தியாளர் மற்றும் தொழில்முனைவோராக மாற்றுவது தான் வேளாண்மைத் துறையில் தற்சார்பை எட்டுவதாக அர்த்தம் என்று அவர் கூறினார். இந்த உத்வேகத்தை மனதில் கொண்டு, வேளாண்மைத் துறையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டிருப்பதாக பிரதமர் தெரிவித்தார். மற்ற தொழில் துறைகளைப் போல, இப்போது விவசாயிகளும் தங்கள் விளைபொருள்களை நல்ல விலை கிடைக்கக் கூடிய, நாட்டின் எந்தப் பகுதியிலும் விற்கலாம். தொகுப்புத் தொழில் நிறுவனம் தொடங்கும் அணுகுமுறையின் அடிப்படையில் வேளாண்மைத் துறைக்கு நல்ல வசதிகள் உருவாக்குதல் மற்றும் ஊக்குவித்தலுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்பு நிதியம் உருவாக்கப் பட்டிருப்பதாகப் பிரதமர் தெரிவித்தார்.
நவீன தொழில்நுட்பத்துடன் வேளாண்மையை இணைப்பதற்கான சீரான முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன என்று அவர் குறிப்பிட்டார். ஆராய்ச்சி நிலையங்களும் வேளாண்மைப் பல்கலைக்கழகங்களும் இதில் முக்கிய பங்காற்ற வேண்டியுள்ளது என்று அவர் தெரிவித்தார். 6 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் ஒரு மத்தியப் பல்கலைக்கழகம் மட்டுமே இருந்த நிலையில், இப்போது மூன்று மத்திய வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள் உள்ளன என்று பிரதமர் கூறினார். அத்துடன், ஜார்க்கண்ட், அசாமில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்கள், பிகாரில் மோட்டிஹரியில் மகாத்மா காந்தி ஒருங்கிணைந்த வேளாண்மை நிலையம் என மூன்று தேசிய நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். இந்தக் கல்வி நிலையங்கள் மாணவர்களுக்குப் புதிய வாய்ப்புகளை அளிப்பதுடன், தொழில்நுட்பத்தின் பயன்கள் விவசாயிகளைச் சென்று சேருவதற்கு அவர்களுடைய திறன்களை அதிகரிக்க உதவிகரமாகவும் இருக்கும் என்று பிரதமர் கூறினார்.
வேளாண்மை தொடர்பான சவால்களைச் சந்திப்பதில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது பற்றிக் குறிப்பிட்ட அவர், சமீபத்திய வெட்டுக்கிளிகள் தாக்குதல் கட்டுப்படுத்தப்பட்டதை நினைவுகூர்ந்தார். வெட்டுக்கிளிகள் படையெடுப்பு மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதற்கு, போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கைகள் எடுத்தது என்று அவர் தெரிவித்தார். பல நகரங்களில் டஜன் கணக்கிலான கட்டுப்பாட்டு அறைகள் அமைத்து, முன்கூட்டியே விவசாயிகளுக்கு எச்சரிக்கைகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது என்றும், ஆளில்லா பறக்கும் சாதனங்கள் மூலம் மருந்து தெளிக்கப்பட்டது என்றும், வெட்டுக்கிளிகளைக் கொல்வதற்கான மருந்து தெளிப்பதற்கு டஜன் கணக்கிலான நவீன மருந்துத் தெளிப்பு இயந்திரங்கள் வாங்கி விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது என்றும் பிரதமர் விவரித்தார்.
கடந்த ஆறு ஆண்டுகளில் ஆராய்ச்சி நிலையங்களுக்கும், வேளாண்மைக்கும் இடையில் தொடர்பை ஏற்படுத்துவதற்கு அரசு முயற்சி எடுத்துள்ளது என்று கூறிய அவர், கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு ஆராய்ச்சியாளர்களின் ஆலோசனைகள் சென்றடைய ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகத் தெரிவித்தார். வேளாண்மை சார்ந்த அறிவு மற்றும் நிபுணத்துவம் வேளாண் தொழில் செய்பவர்களுக்கு அடிமட்ட நிலையில் சென்று சேருவதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதில் பல்கலைக்கழகங்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
வேளாண்மை தொடர்பான அறிவையும், அதன் செய்முறைப் பயன்களையும் பள்ளிக்கூட கல்வி நிலையிலேயே கற்பிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். கிராமங்களில் நடுநிலைக் கல்வி நிலையிலேயே வேளாண்மையை ஒரு பாடமாக அறிமுகம் செய்ய முயற்சிகள் எடுக்கப்படுவதாகப் பிரதமர் தெரிவித்தார். இதனால் இரண்டு பயன்கள் கிடைக்கும். மாணவர்களிடம் வேளாண்மை குறித்த புரிதலை உருவாக்கும் என்பது முதலாவது விஷயம். அடுத்தது, வேளாண்மை குறித்த தகவல்களை, வேளாண்மையில் நவீன உத்திகள் மற்றும் சந்தைப்படுத்தல் குறித்த விஷயங்களைக் குடும்பத்தினரிடம் மாணவர்கள் எடுத்துக் கூறுவார்கள். இதனால் நாட்டில் வேளாண் - தொழில்முனைவு நிலை மேம்படும் என்று பிரதமர் கூறினார்.
கொரோனா வைரஸ் தாக்குதல் காலத்தில் மக்களின் பிரச்சினைகளைக் குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பற்றிப் பேசிய பிரதமர், உத்தரப்பிரதேசத்தில் கோடிக்கணக்கான ஏழை மற்றும் கிராமப்புறக் குடும்பங்களுக்கு இலவச ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். பண்டல்காண்ட் பகுதியில் சுமார் 10 லட்சம் ஏழைப் பெண்களுக்கு, இந்தக் காலக்கட்டத்தில் இலவசமாக எரிவாயு சிலிண்டர்கள் அளிக்கப்பட்டுள்ளன என்றார் அவர். கரீப் கல்யாண் வேலைத் திட்டத்தின் கீழ், உத்தரப்பிரதேசத்தில் இதுவரை ரூ.700 கோடி செலவிடப்பட்டுள்ளது என்றும், அதன் மூலம் ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை அளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
ஏற்கெனவே வாக்குறுதி அளித்தபடி, எல்லா வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு தருவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். அந்தப் பகுதியில் ரூ.10 ஆயிரம் கோடிக்கும் அதிக மதிப்புள்ள 500 நீர் தொடர்பான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ரூ.3000 கோடி மதிப்பிலான திட்டங்களில் கடந்த 2 மாதங்களில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் பண்டல்காண்ட் பகுதியில் பல லட்சம் குடும்பங்களுக்குப் பயன் கிடைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். பண்டல்காண்ட் பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான அடல் நிலத்தடி நீர்த்திட்டத்தின் பணிகள் நடைபெற்று வருவதாக அவர் கூறினார். ஜான்சி, மஹோபா, பாண்டா, ஹாமிர்புர், சித்ரகூட், லலித்பூர் மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசத்தில் பல நூறு கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு ரூ.700 கோடிக்கும் அதிக மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருவதாகப் பிரதமர் கூறினார்.
பண்டல்காண்ட் பிராந்தியத்தைச் சுற்றி பெட்வா, கென் மற்றும் யமுனை நதிகள் ஓடினாலும், அவற்றின் மூலம் இந்தப் பகுதிகள் முழுமையாகப் பயன் பெறவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். இந்த நிலைமையை மாற்றுவதற்கு அரசு தொடர்ந்து சீரான முயற்சிகளை எடுத்து வருவதாகத் தெரிவித்தார். கென் - பெட்வா நதிகளை இணைக்கும் திட்டத்தின் மூலம் அந்தப் பகுதியின் தலைவிதி மாறும் என்று கூறிய அவர், இதில் அரசு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும், மாநில அரசுடன் இணைந்து இந்தப் பணிகள் மேற்கொள்ளப் பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். பண்டல்காண்ட் பகுதிக்குப் போதிய தண்ணீர் கிடைத்துவிட்டால், அங்கு வாழ்க்கை நிலை முற்றிலும் மாறிவிடும் என்று அவர் கூறினார். பண்டல்காண்ட் விரைவு நெடுஞ்சாலை, பாதுகாப்புப் படை தளவாட உற்பத்தி நிறுவனங்கள் அமையும் வழித்தடம் போன்ற பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் மூலமாக ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று பிரதமர் கூறினார். `ஜெய் ஜவான், ஜெய் கிசான், ஜெய் விக்யான்' என்ற மந்திரம் பண்டல்காண்ட் பகுதியின் நான்கு திசைகளிலும் எதிரொலிக்கும் என்றார் அவர். பண்டல்காண்ட் பிராந்தியத்தின் தொன்மையான அடையாளத்தைச் செழுமையாக ஆக்குவதற்கு மத்திய அரசு மற்றும் உத்தரப்பிரதேச அரசுகள் இணைந்து உறுதியான முயற்சிகளை எடுக்கும் என பிரதமர் உத்தரவாதம் அளித்தார்.
(Release ID: 1649553)
Visitor Counter : 201
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam