பிரதமர் அலுவலகம்

இந்தியாவில் பொம்மை உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழிவகைகள் குறித்து பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆலோசனை


சர்வதேசத் தரத்தை ஏற்படுத்த தரமான பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டும் தொழில்நுட்பங்கள், புத்தாக்கங்களைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் வேண்டுகோள்

குழந்தைகளின் அனைத்து வகையான மேம்பாடுகளுக்கும் அனைத்து அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளில் இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்துடன் தொடர்புடைய உருவங்களைக் கற்பித்தல் கருவியாக பயன்படுத்த வேண்டும்: பிரதமர்

“ஒரே பாரதம், வளமான பாரதம்” உணர்வை மேலும் ஊக்குவிக்க சிறந்த கருவியாக பொம்மைகள் திகழும்: பிரதமர்

பொம்மைகளுக்கான தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பில் புத்தாக்கத்தை கொண்டுவர போட்டிகளை நடத்த வேண்டியது அவசியம் என பிரதமர் வலியுறுத்தல்

இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் நாட்டுப்புறக் கதைகளிலிருந்து விளையாட்டுக்களை உருவாக்கி டிஜிட்டல் விளையாட்டில் உள்ள மிகப்பெரும் வாய்ப்புகளை இந்தியா பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: பிரதமர்

Posted On: 22 AUG 2020 9:01PM by PIB Chennai

இந்தியாவில் பொம்மை உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் சர்வதேச அளவில் இந்திய பொம்மைகளுக்கு மதிப்பை ஏற்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்து மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்தியாவில் பல்வேறு பொம்மைத் தயாரிப்புகள் இருப்பதாக பிரதமர் கூறினார். கலாச்சாரத்துடன் தொடர்புடையது மட்டுமன்றி, குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே வாழ்க்கைத்திறன் மற்றும் உளவியல் திறனை ஏற்படுத்த உதவும் வகையிலான உள்நாட்டு பொம்மைகளை ஆயிரக்கணக்கான கலைஞர்கள் தயாரித்து வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். இந்த பொம்மைத் தயாரிப்புத் தொகுப்புப் பகுதிகளைப் புத்தாக்கம் மற்றும் படைப்பாற்றல் முறைகள் மூலம் மேம்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

இந்திய பொம்மைச் சந்தைக்கு மிகப்பெரும் வாய்ப்பு இருப்பதாகவும், சுயசார்பு இந்தியா பிரச்சாரத்தின் கீழ், உள்ளூர்ப் பொருள்களுக்குக் குரல் கொடுப்பதை ஊக்குவித்து பொம்மைத் தயாரிப்புத் துறையில் மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்றும் எடுத்துரைக்கப்பட்டது. தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்தைப் பயன்படுத்துவதுடன், சர்வதேசத் தரத்தை ஏற்படுத்தும் வகையில் தரமான பொருள்களை உற்பத்தி செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

குழந்தைகளின் உளவியல் தன்மை/அறிவாற்றலில் பொம்மைகளால் ஏற்படும் மாற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், நாட்டின் எதிர்கால சந்ததியினரை வடிவமைத்து சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான கருவியாக பொம்மைகளை எவ்வாறு மாற்ற முடியும் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/Collage-2YTEO.jpg

குழந்தைகளின் மனநிலையை வடிவமைப்பதில் பொம்மைகளின் முக்கியத்துவத்தைப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையிலான பொம்மைகளை, குழந்தைகளின் அனைத்து வகையான மேம்பாட்டுக்காக அனைத்து அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளில் கற்பிக்கும் கருவியாக பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். புத்தாக்க வடிவமைப்புகள் மற்றும் பொம்மைகளை உருவாக்க இளைஞர்களை ஈடுபடுத்த வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார். இது தேசிய இலக்குகள் மற்றும் சாதனைகளை நோக்கிய பயணத்தை ஊக்குவிக்கும் என்று அவர் தெரிவித்தார்.  

ஒரே பாரதம், உன்னத பாரதம்என்ற உணர்வை மேலும் ஊக்குவிக்கும் சிறந்த கருவியாக பொம்மைகள் இருக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்தியாவின் மதிப்பு முறைகள் மற்றும் கலாச்சார அடிப்படையில் உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த நிலைப்பாடுகளை பொம்மைகள் வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். இந்தியாவின் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் கருவியாக சுற்றுலாவை, குறிப்பாக, கைகளால் தயாரிக்கப்படும் பொம்மைகளுக்குப் பெயர் பெற்ற பிராந்தியங்களில் பயன்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் மதிப்புகளை பிரதிபலிப்பதற்காக இணைய விளையாட்டுகள் உள்ளிட்ட பொம்மைத் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பில் புத்தாக்கத்தை ஏற்படுத்த இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்காக போட்டிகளை நடத்த வேண்டியது அவசியம் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

டிஜிட்டல் விளையாட்டுகள் பிரிவில் வேகமான முன்னேற்றம் இருப்பதைக் குறிப்பிட்ட பிரதமர், இந்தப் பிரிவில் உள்ள மிகப்பெரும் வாய்ப்புகளை இந்தியா பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும், இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் நாட்டுப்புறக் கதைகள் மூலம் ஊக்குவிக்கப்பட்ட விளையாட்டுகளை உருவாக்கி சர்வதேச டிஜிட்டல் விளையாட்டுத் துறைக்கு இந்தியா தலைமை வகிக்க வேண்டும் என்று பிரதமர் திரு.நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.

******



(Release ID: 1648024) Visitor Counter : 199