பிரதமர் அலுவலகம்

உயர்கல்வி மாநாட்டில் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆற்றிய உரை

Posted On: 07 AUG 2020 1:07PM by PIB Chennai

வணக்கம்! எனது அமைச்சரவை சகாக்களான திரு.ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் அவர்களே, திரு.சஞ்சய் தோத்ரே அவர்களே, தேசிய கல்விக் கொள்கையை வகுப்பதில் முக்கியப் பங்கு வகித்த  பிரபல விஞ்ஞானி திரு.கஸ்தூரி ரங்கன் மற்றும் அவரது குழுவினரே, துணைவேந்தர்களே, கல்வியாளர்களே மற்றும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளவர்களே, உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேசிய கல்விக் கொள்கை வகுக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், இந்த நிகழ்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் வேறுபட்ட அம்சங்கள் குறித்த விரிவான தகவல்களை நாட்டின் கல்வி உலகம் அறிந்துகொள்ளும். தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்களை விரிவாக விவாதித்து விட்டால், அதனை அமல்படுத்துவது எளிதானதாக மாறிவிடும்.

நண்பர்களே! விரிவான விவாதம் நடத்தியும், லட்சக்கணக்கான மக்களிடம் 3-4 ஆண்டுகளுக்கும் மேலாக ஆலோசனைகளைப்  பெற்றும், தேசிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது நாட்டில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையை வேறுபட்ட பிராந்தியங்கள் மற்றும் வேறுபட்ட கொள்கைகளைக் கொண்ட மக்கள் ஆய்வுசெய்து தங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். இது ஆரோக்கியமான விவாதம். இந்த விவாதங்கள் மூலம், நாட்டின் கல்வி அமைப்பு மிகப்பெரும் அளவில் பயனடையும். இந்தக் கொள்கை ஒருதலைபட்சமானது என்று எந்த பிராந்தியத்தை அல்லது பிரிவைச் சேர்ந்த மக்களும் கூறவில்லை என்பது மகிழ்ச்சிக்குரிய அம்சம். இது பல ஆண்டுகால பழைய கல்வி முறையில் மக்கள் விரும்பிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதையே காட்டுகிறது.

எந்தவொரு மிகப்பெரும் சீர்திருத்தத்தை அமல்படுத்த முடிவுசெய்தாலும், அதுகுறித்து சிலர் கேள்வி எழுப்புவது இயற்கையானது. தற்போது இதனை அமல்படுத்துவதை மக்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். இந்த சவால்களை கவனத்தில் கொண்டு, தேவைப்படும் இடங்களில் எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பதை நாம் அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம். தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் நீங்கள் அனைவரும் நேரடியாக ஈடுபடுபவர்கள். எனவே, நீங்கள் மிகப்பெரும் பங்கை செய்ய உள்ளீர்கள். அரசியல் ஆர்வத்தைப் பொருத்தவரை, நான் முற்றிலும் உறுதியாக உள்ளேன், உங்களுக்கு முழு ஆதரவு அளிக்கிறேன்.

நண்பர்களே, ஒவ்வொரு நாடும், தனது கல்விக் கொள்கையில் தனது தேசிய மதிப்புகள் மற்றும் தேசிய இலக்குகள் அடிப்படையிலேயே சீர்திருத்தங்களை மேற்கொள்கின்றன. நாட்டின் கல்விக் கொள்கை என்பது தற்போதைய மாணவர்களின் எதிர்காலத்தை மட்டுமன்றி, எதிர்கால சந்ததியினரின் எதிர்காலத்தையும் உறுதிப்படுத்த வேண்டும். இது, இந்தியாவின் தேசிய கல்விக் கொள்கையின் அம்சமாக உள்ளது. 21-ம் நூற்றாண்டுக்கான புதிய இந்தியாவுக்கு தேசிய கல்விக் கொள்கை அடித்தளம் அமைக்கும். 21-ம் நூற்றாண்டு இந்தியாவின் இளைஞர்களின் கல்வி மற்றும் திறன் தேவைகளை தேசிய கல்விக் கொள்கை கவனத்தில் கொண்டுள்ளது.

இந்தியாவை அதிக சக்திவாய்ந்ததாக மாற்றுவது, புதிய உச்சத்துக்கு கொண்டுசெல்வது, இந்திய குடிமக்களை மேம்படுத்துவது, அவர்களுக்கு அதிகபட்ச வாய்ப்புகளை கிடைக்கச் செய்வது ஆகியவற்றுக்கு இந்த கல்விக் கொள்கையில் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பள்ளியில் இருந்தாலும் அல்லது கல்லூரியில் படித்தாலும், கால மாற்றத்துக்கு ஏற்பவும், அறிவியல்பூர்வமாகவும் படித்தால், அவர்களால் தேச கட்டமைப்பில் முக்கிய பங்கு வகிக்க முடியும்.

நண்பர்களே, கடந்த பல்வேறு ஆண்டுகளில் நமது கல்வி அமைப்பில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக, ஆர்வம் மற்றும் யூகிக்கும் திறனை ஊக்குவிக்காமல், சொத்து அல்லது அதிகாரத்தைப் பெறுவதற்கான போட்டியையே (எலிப் போட்டியை) ஊக்குவிப்பதாக இருந்தது. மருத்துவர் அல்லது பொறியாளர் அல்லது வழக்கறிஞராக வேண்டும் என்பதற்கான போட்டியே இருந்தது. ஆர்வம், திறன், தேவை ஆகியவற்றைப் பார்க்காமல், போட்டி மனநிலையை மட்டும் ஏற்படுத்துவதிலிருந்து கல்வி அமைப்பை மாற்ற வேண்டியது அவசியமாகிறது. கல்வி மீதான ஆர்வம் இல்லாமலும், கல்வியின் தத்துவம் மற்றும் கல்வியின் நோக்கம் தெரியாமலும், முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் புத்தாக்க சிந்தனைகளை நமது இளைஞர்கள் மத்தியில் எவ்வாறு உருவாக்க முடியும்?

நண்பர்களே, குரு ரவீந்திரநாத் தாகூரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் கீழ்வருமாறு கூறியுள்ளார்:

“உயர்ந்த கல்வி என்பது தகவல்களை அளிப்பது மட்டும் இல்லை. அனைத்து உயிரினங்களுடனும் நல்லிணக்கத்துடன் நமது வாழ்க்கையை ஏற்படுத்துவது.”

நிச்சயமாக, இதனை அடிப்படையாகக் கொண்டே தேசிய கல்விக் கொள்கையின் நீண்டகால நோக்கம் அமைந்துள்ளது. இதனை நிறைவேற்றுவதற்கு படிப்படியான நிலைப்பாடுகள் இல்லாமல், முழுமையான நிலைப்பாடு தேவைப்படுகிறது. இந்த விவகாரத்தில் தேசிய கல்விக் கொள்கை வெற்றிபெற்றுள்ளது.

நண்பர்களே, தேசிய கல்விக் கொள்கை தற்போது முழு வடிவம் பெற்றுள்ளது. தொடக்க காலத்தில் நமக்கு முன்பு ஏற்பட்ட சவால்கள் குறித்து உங்களுடன் விவாதிக்க விரும்புகிறேன். அப்போது இரண்டு கேள்விகள் எழுந்தன. நமது இளைஞர்களை படைப்பாற்றல், ஆர்வம் மற்றும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கைக்கு நமது கல்விக் கொள்கை ஊக்குவிக்கிறதா என்பது முதல் கேள்வி. இந்தத் துறையில் நீங்கள் பல ஆண்டுகளாக உள்ளீர்கள். அதனால், உங்களுக்கு விடை நன்றாகத் தெரியும்.

நண்பர்களே, இரண்டாவதாக நமது கல்வி முறை நமது இளைஞர்களை மேம்படுத்துவதாகவும், மேம்படுத்தப்பட்ட சமூகத்தை உருவாக்க உதவுவதாகவும் அமைந்ததா? என்பது இரண்டாவது கேள்வியாக இருந்தது. இந்த கேள்விகள் மற்றும் விடைகளை நீங்கள் அனைவரும் நன்றாக அறிவீர்கள். நண்பர்களே, இந்தியாவின் தேசிய கல்விக் கொள்கையை வகுக்கும்போது, இந்தக் கேள்விகள் மிகவும் முக்கியத்துவத்துடன் கருதப்பட்டது என்பது எனக்கு திருப்தியை அளிக்கிறது.

நண்பர்களே, மாறிவரும் சூழலில் புதிய கண்ணோட்டத்துடன் புதிய உலக அமைப்பு உருவாகிவருகிறது. புதிய உலக தரநிலையும் தயாராகியுள்ளது. எனவே, தனது கல்வி முறையில் இந்தியா மாற்றத்தைக் கொண்டுவருவது அவசியமாகிறது. இதன் அடிப்படையிலேயே, பள்ளிக் கல்வி முறை 10+2 என்ற கட்டமைப்பிலிருந்து 5+3+3+4 என்ற கட்டமைப்புக்கு மாறுகிறது. நமது மாணவர்களை சர்வதேச குடிமக்களாக நாம் மாற்ற வேண்டும். அதேநேரத்தில், அவர்களை, அவர்களது அடிவேரில் தொடர்ந்து பிணைந்திருக்கச் செய்ய வேண்டும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். வேரிலிருந்து உலகம் வரை, மனிதர்களிலிருந்து மனிதத்தன்மை வரை, பழமையிலிருந்து நவீனத்துவம் வரை என அனைத்து நிலைகளையும் கடந்தபிறகே, இந்த தேசிய கல்விக் கொள்கையின் அமைப்பு முடிவுசெய்யப்பட்டுள்ளது.

நண்பர்களே,  வீடுகளில் பேசும் மொழியிலேயே பள்ளிகளில் கற்பித்தால், குழந்தைகள் வேகமாக கற்றுக் கொள்ளும் என்பதில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. இதன் காரணமாகவே, குழந்தைகளுக்கு முடிந்த அளவுக்கு, 5-ம் வகுப்பு வரை தாய்மொழியில் கல்வி அளிப்பது என்பதில் ஒருமித்த முடிவு ஏற்பட்டுள்ளது. இது குழந்தைகளின் அடித்தளத்தை வலுவானதாக மாற்றுவதோடு மட்டுமின்றி, உயர்கல்விக்கு செல்லும்போது அவர்களது திறன் மேம்படும்.

நண்பர்களே, இதுவரை, நமது கல்விக் கொள்கை என்பது “என்ன சிந்திப்பது” என்ற அடிப்படையில் இருந்தது. ஆனால், புதிய கல்விக் கொள்கையானது, “எவ்வாறு சிந்திப்பது” என்பதை வலியுறுத்துகிறது. இதனை நான் ஏன் கூறுகிறேன் என்றால், தற்போதைய காலத்தில் தகவல்கள் மற்றும் உள்ளடக்கத்துக்கு பற்றாக்குறை இல்லை. தகவல்கள் குவிந்து கிடக்கின்றன; மொபைல் போன்களிலேயே அனைத்து தகவல்களும் கிடைக்கின்றன. எந்தத் தகவல் தேவை, நாம்  கற்றுக் கொள்ள வேண்டியது என்ன என்பது முக்கியமானதாக இருக்க வேண்டும். இதனை மனதில் கொண்டே, தேவையில்லாத பாடத் திட்டங்கள் மற்றும் புத்தக சுமைகளைக் குறைப்பதற்கு தேசிய கல்விக் கொள்கையில் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கேள்வி எழுப்பும் அடிப்படையிலும், புதிதாக கண்டுபிடிக்கும் வகையிலும், விவாதிக்கும் வகையிலும், பகுப்பாய்வு செய்யும் அடிப்படையிலும் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டியது தற்போதைய தேவையாக உள்ளது. இது குழந்தைகளுக்கு கற்றுக் கொள்ளும் ஆர்வத்தை அதிகரிப்பதோடு மட்டுமன்றி, வகுப்புகளில் அவர்கள் பங்கேற்பதையும் அதிகரிக்கச் செய்யும்.

நண்பர்களே, தனது விருப்பப்படி செயல்படுவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்; தங்களது சூழல் மற்றும் தேவையின் அடிப்படையில் எந்தவொரு பட்டப் படிப்பு அல்லது பாடப் பிரிவுகளை படிக்கவும், விரும்பும்போது வெளியேறவும் வாய்ப்புகளை அளிக்க வேண்டும். படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு செல்லும்போது, தான் படித்த படிப்பு, வேலையின் தேவையை பூர்த்திசெய்யவில்லை என்ற சூழல் அடிக்கடி ஏற்படுகிறது. பல்வேறு மாணவர்களும், வேறுபட்ட காரணங்களால், தங்களது படிப்பை இடையிலேயே நிறுத்திவிட்டு, பணிக்கு செல்லத் தொடங்குகின்றனர். இதுபோன்ற அனைத்து மாணவர்களின் தேவையை கருத்தில் கொண்டு, பல முறை சேர்ந்துகொள்வதற்கும், வெளியேறுவதற்கும் வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. தற்போது, மாணவர் தனது வேலையின் தேவைக்கு ஏற்ப, படிப்பில் சேர்ந்து, சிறப்பான முறையில் கற்றுக் கொள்ள முடியும். இது மற்றொரு அம்சம்.

தற்போது, மாணவர்கள் தங்களது விருப்பப்படி, குறிப்பிட்ட பாடப் பிரிவிலிருந்து வெளியேறி, மற்றொரு பாடப்பிரிவில் சேர்ந்துகொள்ள முடியும். இதற்காக முதலாவது பாடப்பிரிவிலிருந்து குறிப்பிட்ட காலத்துக்கு இடைவெளி எடுத்துக் கொண்டு, இரண்டாவது பாடப்பிரிவில் சேர முடியும். ஒரே வழியில் உயர்கல்வி பெறுவது என்ற கட்டுப்பாடு இல்லாமல் இருக்கச் செய்வது, பல முறை சேர்வது மற்றும் வெளியேறுவது, தரநிலை வங்கி (credit bank) ஆகியவற்றுக்காக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தனது வாழ்நாள் முழுவதும் ஒரே தொழிலில் தங்கிவிடாமல் இருப்பதற்கான காலத்தை நோக்கி நாம் முன்னேறிவருகிறோம். மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது. இதற்காக, எந்தவொரு நபரும் தொடர்ந்து தனக்குள்ளாகவே திறனை மாற்றிக் கொள்வது மற்றும் திறனை மேம்படுத்திக் கொள்வது ஆகிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவையும் தேசிய கல்விக் கொள்கையில் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன.

நண்பர்களே, நாட்டை உருவாக்குவதிலும், சமூகத்தில் எந்தவொரு அடுக்கிலும் பெருமையளிப்பதிலும் கவுரவம் மிகப்பெரும் பங்கு வகிக்கிறது. சமகால தொழில்களைவிட எந்தவொரு தொழிலும் குறைவானதாக இருக்கக் கூடாது என்பதால்,  சமூகத்தில் எந்தவொரு தொழிலிலும் ஒருவர் ஈடுபடலாம். இதுபோன்ற மோசமான மனநிலையால், கலாச்சார வளம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில் எவ்வாறு தூண்டப்பட்டுள்ளோம் என்பதை சிந்திக்க வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். தொழிலாளர்களாக ஈடுபட்டுள்ளவர்களிடம் உயர்ந்தது, தாழ்ந்தது மற்றும் கேலிசெய்யும் சிந்தனைகள், நமது மனதில் எவ்வாறு ஊடுருவியுள்ளது. இந்த மனநிலைக்கு, சமூகத்தின் அடுக்குகள், கல்வியிலிருந்து தொடர்பு இல்லாமல் இருப்பதே முக்கியமான காரணமாக அமைந்துள்ளது. கிராமத்துக்கு நீங்கள் பயணம் மேற்கொண்டு, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களைப் பார்த்தால் மட்டுமே, சமூகத்துக்கு அவர்கள் அளிக்கும் பங்களிப்பையும், சமூகத்தின் தேவையை நிறைவேற்றுவதற்காக தங்களது வாழ்க்கையை அர்ப்பணிக்கின்றனர் என்பதையும் புரிந்துகொள்ள முடியும். தங்களது தொழிலாளர்களுக்கு மதிப்பு அளிக்க நமது சந்ததியினர் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம். இந்த தனியுரிமையை நிறைவேற்ற, தேசிய கல்விக் கொள்கையில் மாணவர்கள் கல்வியின் சிந்தனைகள் மற்றும் தொழிலாளர்களின் கவுரவத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

நண்பர்களே, 21-ம் நூற்றாண்டில் இந்தியாவிடமிருந்து உலகம் அதிக அளவில் எதிர்பார்க்கிறது. திறமை மற்றும் தொழில்நுட்பத்தை உலகுக்கு வழங்கும் திறனை இந்தியா பெற்றுள்ளது. உலகின் மீது நாம் ஏற்றுக் கொண்டுள்ள இந்தப் பொறுப்பை தேசிய கல்விக் கொள்கை நிறைவேற்றுகிறது. எதிர்கால தொழில்நுட்பங்கள் குறித்த மனநிலையை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே, தேசிய கல்விக் கொள்கை தீர்வுகளை அளிக்கிறது. தொலைதூரத்தில் உள்ள மாணவர்களை குறைந்த செலவிலும், சிறப்பான முறையிலும், அதிவேகத்திலும் சென்றடையும் கருவியை தொழில்நுட்பம் அளிக்கிறது. தொழில்நுட்பம் மூலம் பெரும்பாலானவற்றை நாம் உருவாக்க வேண்டும்.  

இந்த கல்விக் கொள்கையின் மூலம், தொழில்நுட்பம் அடிப்படையிலான சிறந்த பாடப்பிரிவுகள் மற்றும் உள்ளடக்கங்களை உருவாக்க நாம் உதவி பெறுவோம். அடிப்படை கணக்கீடு, குறியீடு அல்லது ஆய்வு அடிப்படையிலான நடவடிக்கைகள் என எதுவாக இருந்தாலும், இது கல்வி முறையை மாற்றியமைப்பதோடு மட்டுமன்றி, ஒட்டுமொத்த சமூகத்தின் நிலைப்பாட்டை மாற்றியமைக்கும் கருவியாகவும் செயல்படும். மெய்நிகர் ஆய்வக வழிமுறையானது, இதுவரை இந்தப் பாடங்களை படிக்காத நமது இளம் நண்பர்களுக்கு சிறந்த கல்வி என்ற கனவை நிறைவேற்ற உதவும். ஏனெனில் ஆய்வக அனுபவங்கள் அவசியமானது. நமது நாட்டில் ஆராய்ச்சி மற்றும் கல்விக்கு இடையேயான இடைவெளியைப் போக்குவதில் தேசிய கல்விக் கொள்கை மிகப்பெரும் பங்கு வகிக்கும்.

நண்பர்களே, கல்வி நிறுவனங்களும், அதன் கட்டமைப்புகளும் இந்த சீர்திருத்தங்களை பிரதிபலிக்கும்போது மட்டுமே, தேசிய கல்விக் கொள்கையை மிகவும் சிறப்பான முறையிலும், விரைவாகவும் அமல்படுத்த முடியும். இந்த நேரத்தின் அத்தியாவசிய தேவை என்பது, அதாவது, புத்தாக்கத்தின் மதிப்புகளை உருவாக்குவது மற்றும் நமது சமூகத்தில் ஏற்கச் செய்யும் பணிகளை, நமது நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களிலிருந்து தொடங்க வேண்டும். இதன் தன்னாட்சி உங்களது கைகளில் உள்ளது. மேம்படுத்தப்பட்ட சமூகத்தை உருவாக்கும் ஒன்றாக கல்வியை, அதிலும் குறிப்பாக உயர்கல்வியை ஏற்படுத்த நாம் விரும்பும்போது, உயர்கல்வி நிறுவனங்களையும் கூட மேம்படுத்த வேண்டியது அவசியம். கல்வி நிறுவனங்களை மேம்படுத்துவது என்ற கேள்வி எழும்போது, அதனுடன் இணைந்து, தன்னாட்சி என்ற வார்த்தையும் வரும் என்று எனக்கு தெரியும். தன்னாட்சி என்பது பல்வேறு விதமான கருத்துக்களைக் கொண்டது என்பது நமக்கு தெரியும். அரசின் கட்டுப்பாட்டின்கீழ், கடும் விதிகளுடன் ஒவ்வொன்றும் செயல்பட வேண்டும் என்று ஒருவர் விரும்புவார். அதேநேரம், கல்வி நிறுவனங்களுக்கு தானாகவே தன்னாட்சி கிடைக்க வேண்டும் என்று மற்றொருவர் கருதுவார்.

இதன் முதலாவது நிலைப்பாட்டில், அரசுசாரா அமைப்புகள் மீதான நம்பகத்தன்மையின்மை வெளிப்படுகிறது. மற்றொருபுறம், இரண்டாவது நிலைப்பாட்டில், தன்னாட்சி என்பது உரிமையாக கருதப்படுகிறது. நல்ல தரமான கல்விக்கான வழி என்பது, இந்த இரண்டு கருத்துகளுக்கும் இடைப்பட்டு இருக்கிறது. தரமான கல்வி அளிக்க விரும்பும் கல்வி நிறுவனங்களுக்கு சுதந்திரம் மூலம் ஊக்கம் அளிக்க வேண்டும். இது தரத்தை கட்டமைக்க ஊக்குவிக்க உதவும். மேலும், ஒவ்வொருவரும் வளர்வதற்கு ஊக்குவிக்கும். தேசிய கல்விக் கொள்கை வருவதற்கு முன்னதாக, அண்மைக்கால ஆண்டுகளில், கல்வி நிறுவனங்களுக்கு தன்னாட்சி வழங்க நமது அரசு தொடங்கிய முயற்சிகளை நாம் பார்த்திருக்கிறோம். தேசிய கல்விக் கொள்கையை உருவாக்கியதன் மூலம், கல்வி நிறுவனங்களுக்கு தன்னாட்சி வழங்குவதற்கான நடவடிக்கைகளும் வேகமெடுக்கும் என்று நான் நம்புகிறேன்.

நண்பர்களே, முன்னாள் குடியரசுத் தலைவரும், மாபெரும் விஞ்ஞானியுமான டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் கூறும்போது, கல்வியின் நோக்கம் என்பது, திறன் மற்றும் நிபுணத்துவத்துடன் நல்ல மனிதர்களை உருவாக்குவதே என்று தெரிவித்துள்ளார்… அறிவுவளம் பெற்ற மனிதர்களை ஆசிரியர்களால் உருவாக்க முடியும். உண்மையில், கல்வி முறையில் மாற்றங்களைக் கொண்டுவருவதில் மிகப்பெரும் காரணிகளில் ஒன்றாக ஆசிரியர்களும், பேராசிரியர்களுமாகிய நீங்கள் அனைவருமே இருக்கிறீர்கள்; நாட்டுக்கு சிறந்த மாணவர்கள், சிறந்த தொழில் வல்லுநர்கள் மற்றும் சிறந்த குடிமக்களை வழங்குகிறீர்கள். கல்வித் துறையுடன் தொடர்புடைய நீங்கள்தான் இதனை செய்ய முடியும். எனவே, ஆசிரியர்களின் கவுரவமும் தேசிய கல்விக் கொள்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள திறமைசாலிகளை, வரும் சந்ததியினரை மேம்படுத்துவதற்காக இந்தியாவிலேயே இருக்கச் செய்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆசிரியர் பயிற்சி அளிக்கவும், ஆசிரியர்கள் தொடர்ந்து தங்களது திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தேசிய கல்விக் கொள்கையில் பெருமளவில் வலியுறுத்தப்படுகிறது. ஆசிரியர் கற்கும்போது, அந்த நாடு தலைமை வகிக்கும் என்று நான் நம்புகிறேன்.

நண்பர்களே, தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த, நாம் அனைவரும் முழு உறுதிப்பாட்டுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், பள்ளிக் கல்வி வாரியங்கள், பல்வேறு மாநிலங்கள், பல்வேறு தரப்பட்ட மக்கள் ஆகியோருடன் புதிய சுற்று பேச்சுக்கள் மற்றும் ஒருங்கிணைப்பை இங்கிருந்தே தொடங்க வேண்டும். உயர்கல்விக்கான உயர்தர கல்வி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் நீங்கள் இருப்பதால்,  உங்களுக்கு மிகப்பெரும் பொறுப்பு உள்ளது. தேசிய கல்விக் கொள்கை குறித்து தொடர்ந்து விவாதங்கள் மற்றும் ஆன்லைன் மூலமான கலந்துரையாடல்களை நடத்துங்கள் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். கொள்கைக்கான உத்தியை ஏற்படுத்துங்கள், அந்த உத்தியை அமல்படுத்துவதற்கான திட்டங்களை உருவாக்குங்கள், அந்த திட்டங்களுக்கான கால வரையறையை நிர்ணயிங்கள், அதனை அமல்படுத்துவதற்கு வளங்கள் மற்றும் மனித வளங்களை சேருங்கள்; புதிய கொள்கையின் அடிப்படையில், இந்த அனைத்தையும் ஒன்றாக சேர்ப்பதற்கு திட்டங்களை ஏற்படுத்துங்கள்.

தேசிய கல்விக் கொள்கை என்பது வெறும் சுற்றறிக்கை இல்லை. அறிவிக்கை வெளியிட்டும், சுற்றறிக்கையை வெளியிட்டும் மட்டும் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கூடாது. நமது மனநிலையை தயார்படுத்திக் கொள்வதுடன், அதற்கு தீவிரமான அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும். தற்போதைய மற்றும் எதிர்கால இந்தியாவை உருவாக்க இந்த இலக்கு என்பது மிகவும் முக்கியமானது. இந்த மாநாட்டைப் பார்த்துக் கொண்டிருக்கும், கேட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரிடமிருந்தும் மிகப்பெரும் பங்களிப்பை இது எதிர்பார்க்கிறது. தேசிய கல்விக் கொள்கையை சிறப்பான முறையில் அமல்படுத்துவதற்கான சிறந்த பரிந்துரைகள் மற்றும் தீர்வுகள் இந்த மாநாட்டின் மூலம் வெளியாகும் என்று நான் நம்புகிறேன். பொது நிகழ்ச்சியில் டாக்டர் கஸ்தூரிரங்கன் மற்றும் அவரது குழுவினருக்கு எனது பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பையும் இந்த மாநாடு ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் ஒரு முறை, உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி.

 

                  ******


(Release ID: 1645271) Visitor Counter : 321