பிரதமர் அலுவலகம்

கொல்கத்தா, மும்பை மற்றும் நொய்டாவில் உயர் செயல்திறன் கொண்ட கோவிட் பரிசோதனை நிலையங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்


நாட்டில் தினமும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன; வரும் வாரங்களில் இதை 10 லட்சமாக உயர்த்த முயற்சிகள் எடுக்கப்படுகின்றன : பிரதமர்

இந்தியாவில் இப்போது 11,000-க்கும் மேற்பட்ட கோவிட் சிகிச்சை மையங்களும், 11 லட்சத்துக்கும் மேற்பட்ட தனிமைப்படுத்தல் படுக்கை வசதிகளும் உள்ளன: பிரதமர்

புதிய சுகாதாரக் கட்டமைப்புகள் பற்றியும், கிராமங்களில் ஏற்கெனவே உள்ள சுகாதாரக் கட்டமைப்புகளை மேம்படுத்துவது பற்றியும் பிரதமர் பேச்சு

சிகிச்சை வசதிகளை உருவாக்க உதவியதற்காக பிரதமருக்கு முதல்வர்கள் நன்றி; தகவல்களைப் பகிர்ந்து கொண்டதுடன், கடுமையான சூழ்நிலைகளில் அவருடைய தலைமைப் பண்புக்கு முதல்வர்கள் புகழாரம்

Posted On: 27 JUL 2020 5:56PM by PIB Chennai

உயர் செயல்திறன் உள்ள மூன்று கோவிட்-19 மருத்துவப் பரிசோதனை மையங்களை பிரதமர் திரு. மோடி இன்று காணொளி மூலம் தொடங்கி வைத்தார். இவை கொல்கத்தா, மும்பை மற்றும் நொய்டாவில் உள்ள ஐ.சி.எம்.ஆர்.-இன் தேசிய மையங்களில் அமைந்துள்ளன.

இந்த மையங்கள் ஒவ்வொன்றிலும் தினமும் சுமார் 10 ஆயிரம் மருத்துவப் பரிசோதனைகளை செய்யும் அதிநவீன, உயர் தொழில்நுட்ப வசதிகள் உள்ளதாக பிரதமர் தெரிவித்தார். அதிக எண்ணிக்கையில் பரிசோதனைகள் செய்வதால், நோய் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும் என்றும், அதன் மூலம் நோய் பரவாமல் தடுக்க உதவிகரமாக இருக்கும் என்றும் அவர் கூறினார். இந்த பரிசோதனை நிலையங்கள் கோவிட் நோய்க்கான பரிசோதனைகளை செய்பவையாக மட்டும் இருக்காது. எதிர்காலத்தில் ஹெப்படைட்டிஸ் பி மற்றும் சி, எச்.ஐ.வி., டெங்கு காய்ச்சல் மற்றும் வேறு பல நோய்களுக்கான பரிசோதனை செய்யும் வசதிகளைக் கொண்டதாகவும் இருக்கும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

உரிய நேரத்தில் எடுத்த முடிவுகள்

இந்திய அரசு சரியான நேரத்தில் எடுத்த முடிவுகள் காரணமாக, கோவிட் பாதிப்பால் மற்ற நாடுகளில் ஏற்பட்டதை விட இந்தியாவில் மரணத்தின் விகிதம் குறைவாக உள்ளது என்றும் பிரதமர் கூறினார். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் குணம் அடைபவர்களின் விகிதமும் மற்ற நாடுகளைவிட இந்தியாவில் அதிகமாக உள்ளது என்றும், நாளுக்கு நாள் இது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்றும் தெரிவித்தார். இந்த வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தொடவிருக்கிறது என்றார் அவர்.

கொரோனா சிகிச்சைக்கான சிறப்பு சுகாதாரக் கட்டமைப்புகள்

கொரோனா நோய்க்கான சிகிச்சைக்காக விசேஷக் கட்டமைப்பு வசதிகளை வேகமாக உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறினார். இதற்கான நடவடிக்கைகள் தொடங்கிய சமயத்தில், இதற்காக மத்திய அரசு ரூ.15,000 கோடி ஒதுக்கியதை அவர் நினைவுகூர்ந்தார். இப்போது நாட்டில் 11,000க்கும் மேற்பட்ட கோவில் சிகிச்சை மையங்களும், 11 லட்சத்துக்கும் மேற்பட்ட தனிமைப்படுத்தல் படுக்கைகளும் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

கோவிட் பாதிப்பைக் கண்டறிய ஜனவரி மாதத்தில் ஒரே ஒரு பரிசோதனை நிலையம் மட்டுமே இருந்த நிலையில், இப்போது ஏறத்தாழ 1300 பரிசோதனை நிலையங்கள் உள்ளதாக அவர் தெரிவித்தார். இப்போதைய நிலவரத்தின்படி நாட்டில் தினமும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன என்றும், வரக் கூடிய வாரங்களில் இதை 10 லட்சமாக உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப் படுவதாகவும் பிரதமர் கூறினார்.

தனிப்பட்ட முழு உடல் பாதுகாப்பு உடை (பி.பி.இ.) தயாரிப்பில் இந்தியா இரண்டாவது பெரிய நாடாக மாறியுள்ளது என்று அவர் தெரிவித்தார். ஆறு மாதங்களுக்கு முன்பு பி.பி.இ. உடை தொகுப்பு தயாரிக்கும் வசதி ஒரு நிறுவனத்தில் கூட இல்லாத நிலை இருந்தது. இப்போது 1200 நிறுவனங்கள் இதைத் தயாரிக்கின்றன. தினமும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பி.பி.இ. உடைகள் தயாரிக்கப்படுகின்றன என்று பிரதமர் தெரிவித்தார். என்-95 வகை முகக்கவச உறைகளுக்கு இறக்குமதியை மட்டுமே சார்ந்திருந்த நிலை மாறி, இந்தியாவிலேயே தினமும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட என்-95 முகக்கவச உறைகள் தயாரிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். அதேபோல ஆண்டுக்கு 3 லட்சம் வென்டிலேட்டர்கள் தயாரிக்கும் திறன் இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், மருத்துவத்துக்கான ஆக்சிஜன் சிலிண்டர்கள் உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ளது என்றும் அவர் விவரித்தார். இவையெல்லாம் மனித உயிர்களைக் காப்பாற்ற உதவியதுடன் மட்டுமின்றி, இறக்குமதி செய்யும் நிலையில் இருந்து ஏற்றுமதி செய்யும் நாடு என்ற மாற்றம் ஏற்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

ஊரகப் பகுதிகளில் நோய் பரவலைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப் பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், புதிய சுகாதாரக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதுடன், ஏற்கெனவே கிராமங்களில் உள்ள சுகாதாரக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

மனிதவள மேம்பாட்டில் தீவிர முயற்சிகள்

பொருள்கள் அளவிலான கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதுடன், மனிதவளத்தை உருவாக்குவதிலும் அரசு வேகமாக நடவடிக்கைகள் எடுத்துள்ளது. துணை மருத்துவ அலுவலர்கள், ஆஷா திட்டப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோரை நியமித்தது பற்றி குறிப்பிட்டார். நோய் பரவாமல் தடுப்பதில் இவர்கள் முக்கிய பங்காற்றுவதை அவர் சுட்டிக்காட்டினார். கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கு அயற்சி ஏற்படாமல் தடுப்பதற்காக ஓய்வுபெற்ற சுகாதார நிபுணர்களின் சேவைகளைப் பயன்படுத்துவது, புதியவர்களை ஈடுபடுத்துவது என தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

திருவிழா நேரங்களில் பாதுகாப்பாக இருத்தல்

வரக்கூடிய திருவிழா காலங்களில், நோய் பரவாமல் தடுப்பதற்காக, மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். பிரதமரின் கரீப் கல்யாண் அன்னயோஜ்னா திட்டத்தின் பயன்கள், உரிய நேரத்தில் ஏழைகளுக்குப் போய்ச் சேர வேண்டும் என்று அவர் கூறினார். தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் காலம் வரையில் 2 கெஜ தூரம் இடைவெளி பராமரித்தல், முகக்கவச உறை அணிதல், கைகளில் கிருமி நீக்கம் செய்தல் ஆகியவை தான் தங்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள மக்களுக்கு இருக்கும் வழிமுறைகள் என்றும் பிரதமர் கூறினார்.

இப்போது நாடு முழுக்க கோவிட் மருத்துவப் பரிசோதனை நிலையங்களின் வசதிகள் இருப்பதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்த்தன் தெரிவித்தார். தேசிய தலைநகரில் கோவிட் பரவாமல் தடுப்பதற்கு டெல்லி முதல்வருடன் மத்திய உள்துறை அணைச்சர் இணைந்து செயல்படுவது பற்றியும் அவர் குறிப்பிட்டார்.

முதல்வர்கள் உரை

மருத்துவப் பரிசோதனை நிலையங்கள் தொடங்கப்பட்டிருப்பது குறித்து பிரதமருக்கு முதல்வர்கள் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர். கடுமையான சூழ்நிலையில் தலைமை ஏற்று செயல்படுவதாக பிரதமருக்கு மகாராஷ்டிர முதல்வர் திரு உத்தவ் தாக்கரே புகழாரம் சூட்டினார். மும்பையில் மேற்கொள்ளப்படும் `வைரஸை விரட்டுவோம்' முன்முயற்சி பற்றி விளக்கிய அவர், நிரந்தரமாக தொற்றுநோய் மருத்துவமனைகளை உருவாக்க வேண்டியது அவசியமானது என்று கூறினார்.

மாநிலங்களுடன் ஒத்துழைப்பு பாணியை கடைபிடிக்கும் பிரதமரின் செயல்பாட்டுக்கு மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி பாராட்டு தெரிவித்தார். நோய் பாதித்தவர்களைத் தடமறிதல், டெலி மருத்துவ வசதிகளைப் பயன்படுத்துதல் பற்றியும், மாநிலத்தில் இப்போதுள்ள மருத்துவப் பரிசோதனை நிலையங்களின் வசதிகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் பற்றியும் அவர் பேசினார்.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிராக ஓய்வின்றி உழைத்து வரும் பிரதமருக்கு உத்தரப்பிரதேச முதல்வர் திரு. யோகி ஆதித்யநாத் பாராட்டு தெரிவித்தார். இன்று தொடங்கப்பட்டுள்ள பரிசோதனை நிலையங்கள் காரணமாக, பரிசோதனைக்கான நேரம் வெகுவாகக் குறையும் என்று அவர் கூறினார். மாநிலத்தில் மருத்துவப் பரிசோதனை வசதியை அதிகரிப்பது பற்றி குறிப்பிட்ட அவர், தினசரி ஆண்டிஜென் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

பின்னணி

இந்த மூன்று உயர் செயல்திறன் மிக்க மருத்துவப் பரிசோதனை மையங்கள் ஐசிஎம்ஆர்- தேசிய புற்றுநோய்த் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலையம், நொய்டா; ஐ.சி.எம்.ஆர். கருத்தரிப்பு சிகிச்சை ஆராய்ச்சிக்கான தேசிய மையம், மும்பை; மற்றும் ஐ.சி.எம்.ஆர்.- காலரா மற்றும் குடல்சார்ந்த நோய்கள் சிகிச்சை தேசிய மையம், கொல்கத்தா ஆகியவை தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் நடத்தும் வசதிகளைக் கொண்டவையாக உள்ளன. பரிசோதனைக்கான நேரத்தை இந்த பரிசோதனை நிலையங்கள் குறைத்துவிடும். ஆய்வக அலுவலர்களுடன் தொடர்பில் இருக்கும் நேரம், மருத்துவ உபகரணங்களின் அருகில் இருக்கும் நேரம் ஆகியவையும் குறைவாகவே இருக்கும். கோவிட் அல்லாத நோய்களின் பரிசோதனை வசதிகளும் இந்த ஆய்வகங்களில் உள்ளது. எனவே நோய் பரவல் காலம் முடிந்த பிறகு ஹெப்படைட்டிஸ் பி மற்றும் சி, எச்.ஐ.வி., காசநோய், சி.எம்.வி. பாதிப்பு, பாலியல் நோய்கள், நெய்செரியா, டெங்கு போன்ற நோய்களைக் கண்டறிவதற்கான பரிசோதனைகளை செய்து கொள்ள முடியும்.


(Release ID: 1641606) Visitor Counter : 359