சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

ஒரே நாளில் மிக அதிகபட்சமாக ,4.2 லட்சத்துக்கும் அதிகமான கோவிட் மருத்துவப் பரிசோதனைகள் செய்து இந்தியா சாதனை.


இதுவரை சுமார் 1.6 கோடி மாதிரிகள் பரிசோதனை

தொற்று நோயால் உயிரிழப்பு விகிதம் 2.35 சதவீதம் ஆக சரிவு

Posted On: 25 JUL 2020 2:25PM by PIB Chennai

முதல்முறையாக 4 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவிட் மருத்துவப் பரிசோதனைகள் ஒரே நாளில் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஒரு வார காலமாக தொடர்ச்சியாக தினமும் 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக இந்த அதிகபட்ச எண்ணிக்கை எட்டப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4,20,898  மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. பத்து லட்சம் பேரில் எவ்வளவு பேருக்குப் பரிசோதனை செய்யப்படுகிறது (டி.பி.எம்.) என்ற கணக்கீட்டின்படி, இப்போது 11,485 பரிசோதனை என்ற நிலை எட்டப்பட்டுள்ளது. இதுவரையில் நடத்தப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கை 1,58,49,068 ஆக உள்ளது. இந்த இரண்டு எண்ணிக்கைகளுமே தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

கோவிட் நோய் பாதிப்பைக் கண்டறிய 2020 ஜனவரியில் ஒரே ஒரு ஆய்வகம் மட்டும் இருந்த நிலையில், இப்போது 1301 பரிசோதனை நிலையங்கள் என்ற நிலை எட்டப்பட்ட காரணத்தால் தான் இது சாத்தியமாகியுள்ளது. இப்போதுள்ள ஆய்வகங்களில் 902 அரசு ஆய்வகங்களும், 399 தனியார் ஆய்வகங்களும் அடங்கும். பரிசோதனை வசதி அளிப்பதற்கு ஐ.சி.எம்.ஆர். அளித்த திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் அரசுகள் எடுத்த அனைத்து வகையான முயற்சிகள் காரணமாக, பரவலாகப் பரிசோதனைகள் நடத்துவது சாத்தியமாகியுள்ளது.

``பரிசோதனை செய்தல், தடமறிதல் மற்றும் சிகிச்சை அளித்தல்'' என்ற அணுகுமுறையைப் பின்பற்றுமாறு அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு ஆலோசனை கூறியுள்ளது. அதிகமாகப் பரிசோதனைகள் செய்வதால் ஆரம்பத்தில் நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றாலும், படிப்படியாக அது குறையத் தொடங்கும் என்பது டெல்லியில் மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

முழுமையான தரநிலைப்படுத்திய சிகிச்சை அணுகுமுறை அடிப்படையிலான, சிறப்பான மற்றும் தரநிலைப்படுத்திய சிகிச்சை மேலாண்மை நடைமுறைகள் பின்பற்றப்படுவதால், தொற்று நோயால் உயிரிழப்போர் விகிதம் குறைந்து வருகிறது. மத்திய அரசு மற்றும் மாநில / யூனியன் பிரதேச அரசுகளும் மேற்கொண்டுள்ள கூட்டு நடவடிக்கைகளால், கோவிட்-19 பாதிப்பால் உயிரிழப்போர் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு இது 2.35 சதவீதமாகக் குறைந்துள்ளது. உலக அளவில் இந்தத் தொற்று நோயால் உயிரிழப்பு விகிதம் இந்தியாவில் தான் குறைந்தபட்ச அளவில் உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 32,223 கோவிட் நோயாளிகள் குணம் அடைந்துள்ளனர். இதுவரையில் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை இன்று 8,49,431 -ஐ எட்டியுள்ளது. நோய் பாதித்தவர்களில் அதிகபட்ச அளவாக 63.54 சதவீதம் பேர் குணம் பெற்றுள்ளனர். குணம் அடைந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கைக்கு இடையில் உள்ள இடைவெளி மேலும் அதிகரித்து 3,93,360-ஐ தொட்டிருக்கிறது.

 

*********

 



(Release ID: 1641177) Visitor Counter : 202