இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

நேரு யுவ கேந்திரா, தேசிய சமூக நலப்பணித்திட்ட ஆர்வலர்கள் மூலம் தற்சார்பு இந்தியா குறித்த விழிப்புணர்வை மாநிலங்கள் ஏற்படுத்த வேண்டும் என திரு. கிரண் ரிஜிஜூ வலியுறுத்தல்; ஒலிம்பிக் பெருமையை நோக்கிய ஒரு மாநிலம், ஒரு விளையாட்டு கொள்கையை மாநிலங்கள் ஏற்க வேண்டும்

Posted On: 14 JUL 2020 6:29PM by PIB Chennai

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜூ இன்று காணொளிக் காட்சி மூலம் 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளைச் சந்தித்தார். கோவிட்-19 தொற்றுக்குப் பிந்தைய காலத்தில் விளையாட்டுக்களை மீண்டும் தொடங்குவது பற்றிய வழிமுறைகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பகிர்ந்து கொள்வதற்கான இரண்டு நாள் மாநாட்டின் ஒரு பகுதியாக இந்தக் கூட்டம் நடைபெற்றது. மாநில அளவில் பல்வேறு திட்டங்களை மேம்படுத்துவதற்கு நேரு யுவ கேந்திரா சங்கதன் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட ஆர்வலர்களை ஈடுபடுத்துவது பற்றி இதில் விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் உரையாற்றிய திரு. ரிஜிஜூ, “கோவிட்-19 காலத்தில்  சிவில் நிர்வாகத்துடன் சேர்ந்து நேரு யுவ கேந்திரா சங்கதன் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட ஆர்வலர்கள் மெச்சத்தக்க வகையில் செயல்பட்டுள்ளனர். தற்போது, 75 லட்சம் ஆர்வலர்கள் உள்ளனர். தளர்வு-2 காலத்தில் அதனை ஒரு கோடியாக அதிகரிக்க நாங்கள் திட்டமிட்டோம்தற்சார்பு இந்தியா இயக்கத்தை பிரதமர் ஏற்கனவே அறிவித்துள்ளார். நாட்டில்  விழிப்பை ஏற்படுத்த, விவசாயிகள், சிறு வணிகர்கள் மற்றும் இதர பிரிவினர் என சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினர் இடையே தற்சார்பின் மூலம் கிடைக்கும் பலன்கள் குறித்த விழிப்புணர்வை நமது ஆர்வலர்கள் உருவாக்குவார்கள். இந்த ஆர்வலர்களை ஈடுபடுத்தி ,அவர்கள் சிறப்பாகப் பணியாற்ற ஆதரவளிக்க வேண்டும் என நான் மாநிலங்களைக் கேட்டுக்கொள்கிறேன். மத்திய அரசின் குறைவான தலையீட்டுடன், அவர்கள் மாவட்ட நிர்வாகத்துடன் நேரடியாக பணியாற்றுவார்கள்’’, என்று கூறினார்.

விவாதிக்கப்பட்ட சுருக்கமான நிகழ்ச்சி நிரல் அம்சங்களில், பங்கேற்ற மாநிலப் பிரதிநிதிகளில் பெரும்பாலோர் கீழ்மட்டத்தில் விளையாட்டுக்களை மேம்படுத்தவும், அனைத்து மாநிலங்களிலும் ஒலிம்பிக் அளவிலான பயிற்சி ஏற்படுத்தவும், அமைச்சகம் எடுத்துள்ள நடவடிக்கைகளைப் பாராட்டினர். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு கேலோ இந்தியா மாநிலச் சிறப்பு மையத்தை அமைப்பது, ஒரு மாநிலம் ஒரு விளையாட்டு கொள்கை ஆகியவற்றில்  மாநிலங்கள் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தின. ஒவ்வொரு மாநிலத்திலும் வலுவாக உள்ள பாரம்பரிய விளையாட்டு ஒன்றை மேம்படுத்துவது குறித்து அதிகாரிகள் ஆர்வம் காட்டினர்.

 

கட்டுடல் இந்தியா  இயக்கம் தொடர்பாக மாநிலங்களின் பங்கேற்பு நடவடிக்கைகள் ஊக்கமளிப்பதாக உள்ளது என அமைச்சர் கூறினார். இந்தியா முழுவதும் கட்டுடல் இந்தியா பள்ளிகளாக 2.5 லட்சத்துக்கும் அதிகமான பள்ளிகள் பதிவு செய்துள்ளன. “உடல் தகுதியை இளைஞர்களின் வாழ்க்கை நெறியாகக் கடைப்பிடிக்கும் வகையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் , தங்கள் அனைத்து பள்ளிகளையும் இந்த இயக்கத்தில் தீவிரமாகப்  பங்கேற்கும்படி செய்ய வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்’’ என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


(Release ID: 1638627) Visitor Counter : 218