நிதி அமைச்சகம்

பிரதமர் ஏழைகள் நல்வாழ்வுத் தொகுப்பின் கீழ் அறிவிக்கப்பட்ட , கோவிட்-19 தொற்றுக்கு எதிராகப் போராடும் சுகாதாரப் பணியாளர்களுக்கான காப்பீட்டுத் திட்ட அமலாக்கம் குறித்து மத்திய நிதியமைச்சர் ஆய்வு; வாரிசுதாரர்களுக்கு வெகுவிரைவில் பயன் கிட்டும் வகையில் காப்பீட்டுத் தொகை வழங்குவது அவசியம் என வலியுறுத்தல்

Posted On: 13 JUL 2020 6:54PM by PIB Chennai

பிரதமர் ஏழைகள் நல்வாழ்வுத்  தொகுப்பின் கீழ் அறிவிக்கப்பட்ட , கோவிட்-19 தொற்றுக்கு எதிராகப் போராடும் சுகாதாரப் பணியாளர்களுக்கான காப்பீட்டுத் திட்ட அமலாக்கம் குறித்து மத்திய நிதி மற்றும் பெருவணிக நிறுவன விவகாரத்துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று காணொளிக் காட்சி மூலம் நடைபெற்ற  கூட்டத்திற்குத் தலைமை வகித்து ஆய்வு மேற்கொண்டார். நிதிச்சேவைகள் துறை, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், நியூ இந்தியா காப்பீட்டு நிறுவனம் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இத்திட்டத்தின் விவரங்கள் மற்றும் இதுவரையிலான அதன் செயலாக்க நிலவரம்  குறித்து வீடியோ காட்சி விளக்கப்படம் மூலம் நியூ இந்தியா காப்பீட்டு நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் விளக்கினார்.

கேட்பு உரிமை கோரிக்கைகளை விரைந்து அளிக்க, மாநில அரசுகளின் அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்படும் பொறிமுறை குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் அதிகாரிகள் விளக்கினர். உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் , வாரிசு சான்றிதழ் வாங்குவது உள்ளிட்டப் பிரச்சினைகள் குறித்து அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இதுவரை பெறப்பட்ட 147 தகவல்களில், கேட்பு உரிமை கோரிக்கை ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டவை 87 ஆகும். இதில் 15-க்கு தொகை வழங்கப்பட்டுவிட்டது. 4-க்கு தொக்கைக்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 13 கோரிக்கைகள் ஆய்வில் உள்ளன. மேலும், 55 கோரிக்கைகள் தகுதியற்றவை என கண்டறியப்பட்டுள்ளனஇவற்றில், 35 கோரிக்கைகள் காப்பீட்டு வரம்பிற்குள் வராத காவல்துறையினர், மருத்துவமனைகளுக்குத் தொடர்பில்லாத நகராட்சிப் பணியாளர்கள், கல்வி மற்றும் வருவாய்த் துறை சார்ந்தவர்கள் தொடர்பானவை. மேலும், 20 கோரிக்கைகள் கோவிட்-19 அல்லாத மாரடைப்பு போன்ற காரணங்களால் ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பானவையாகும்.

கூட்டத்தின் போது, வாரிசுதாரர்களுக்கு வெகுவிரைவில் காப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துக்காட்டினார். அவர்களுக்குப் பயன்கிட்டும் வகையில்  காப்பீட்டுத் தொகையை விரைவாக  வழங்குவது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

---------------------------------------------------------

 (Release ID: 1638400) Visitor Counter : 217