சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கோவிட்-19 குறித்த அண்மைச் செய்திகள்

சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கையைவிட குணம் அடைந்தவர்களின் அளவு 1.75 மடங்கு அதிகம்

குணம் அடைந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கைக்கு இடையிலான வித்தியாசம் 2 லட்சத்தைக் கடந்தது

தேசிய அளவில் குணம் அடைவோர் விகிதம் 62.09% ஆக உயர்வு

Posted On: 09 JUL 2020 6:20PM by PIB Chennai

கோவிட்-19 நோய்த் தாக்குதலுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையை விட குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2,06,588 அதிகமாக உள்ளதன் மூலம் குறிப்பிடத்தக்க சாதனை எட்டப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 19,547 நோயாளிகள் குணம் அடைந்துள்ளனர். இதையடுத்து கோவிட்-19 பாதித்தவர்களில் குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 4,76,377 ஆக உள்ளது. வீடு வீடாகத் தடமறிதல், கண்காணிப்பு, ஆரம்ப நிலையிலேயே நோய் பாதிப்பைக் கண்டறிதல், தனிமைப்படுத்தல் ஆகியவற்றுடன் குறித்த காலத்தில் சிறப்பான மருத்துவ உதவிகள் அளிப்பது என்ற கவனமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் இது சாத்தியமாகியுள்ளது.

இப்போதைய நிலவரப்படி கோவிட்-19 பாதிப்புக்கு 2,69,789 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் அனைவரும் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருக்கின்றனர்.

இந்தியாவில் கோவிட்-19 பாதிப்பில் இருந்து குணம் அடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோவிட்-19 பாதித்தவர்களில் இன்றைய நிலவரப்படி 62.09 சதவீதம் பேர் குணம் பெற்றுள்ளனர்.

எண்ணிக்கைகளின் அடிப்படையில் மற்ற நாடுகளுடன் இந்தியாவின் நிலையை ஒப்பிடுவது சரியானதாக இருக்காது. இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு 195.5 பேருக்கு பாதிப்பு என்ற அளவில் உள்ளது. இது உலக அளவில் குறைந்தபட்ச எண்ணிக்கையாக உள்ளது. கட்டுப்பாட்டுப் பகுதிகள், இடைமுகப் பகுதிகளை ஆக்கபூர்வமாக வரையறை செய்தல், தீவிர மருத்துவப் பரிசோதனை, ஆரம்பகட்டத்தில் மற்றும் குறித்த காலத்தில் நோய் பாதிப்பைக் கண்டறிதல், சிகிச்சை நடைமுறைகளைப் பின்பற்றுதல் மற்றும் சிறப்பான தீவிர சிகிச்சைப் பிரிவு/ மருத்துவமனை வசதிகள் ஆகியவை காரணமாக, இந்த நோயால் மரணம் அடைவோரின் எண்ணிக்கையும் உலக அளவில் குறைவானதாக உள்ளது. இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு 15.31 என்ற எண்ணிக்கையில் மரணம் அடைந்துள்ளனர். இது விகிதாச்சார அடிப்படையில் 2.75 சதவீதமாக உள்ளது. உலக அளவில் 10 லட்சம் பேருக்கு மரணம் அடைவோர் எண்ணிக்கை 68.7 ஆக உள்ளது.

தினமும் நடைபெறும் மருத்துவப் பரிசோதனைகளின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,67,061 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரையில் 1,07,40,832 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் ஐ.சி.எம்.ஆர். தீவிர முயற்சிகள் காரணமாக மருத்துவப் பரிசோதனை ஆய்வகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசு ஆய்வகங்கள் 805, தனியார் ஆய்வகங்கள் 327 என மொத்த ஆய்வகங்களின் எண்ணிக்கை 1132 ஆக உயர்ந்துள்ளது. இதன் விவரங்கள்:

· உடனடி RT PCR அடிப்படையிலான பரிசோதனை ஆய்வகங்கள் : 603 (அரசு: 373 + தனியார்: 230)

· TrueNat அடிப்படையிலான பரிசோதனை ஆய்வகங்கள் : 435 (அரசு: 400 + தனியார்: 35)

· CBNAAT அடிப்படையிலான பரிசோதனை ஆய்வகங்கள் : 94 (அரசு: 33 + தனியார்: 61)

கோவிட்-19 குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்களையும், கோவிட்-19 தொடர்பான தொழில்நுட்ப ரீதியிலான விஷயங்கள், வழிகாட்டுதல்கள், அறிவுறுத்தல்கள் பற்றிய புதிய தகவல்களைத் தெரிந்து கொள்ள தயவுசெய்து இந்த இணையதளத்தைப் பாருங்கள்: https://www.mohfw.gov.in/ மற்றும் @MoHFW_INDIA
 



(Release ID: 1637680) Visitor Counter : 170