பிரதமர் அலுவலகம்

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலின் முன்னேற்றங்கள் குறித்து பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆய்வு

Posted On: 04 JUL 2020 6:14PM by PIB Chennai

இந்தியாவில் வேளாண்மை ஆய்வு, விரிவாக்கம் மற்றும் கல்வியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து காணொளிக்காட்சி மூலம் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வுக் கூட்டத்தில், வேளாண்மை, ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர், வேளாண்மைத் துறையின் இணை அமைச்சர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். அதோடு, பிரதமர் அலுவலக மூத்த அதிகாரிகள், வேளாண்மை, கால்நடைப் பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறையின் செயலாளர்களும் கலந்து கொண்டனர்.

தற்போது அளிக்கப்படும் முன்னுரிமைகள், செயல்பாடுகள், பல்வேறு சவால்களையும் எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலின் தலைமை இயக்குநரும், வேளாண் ஆராய்ச்சி, விரிவாக்கத் துறையின் இயக்குநருமான திரு.திரிலோச்சன் மொகபத்ரா எடுத்துரைத்தார். கடந்த 2014-ஆம் ஆண்டு முதலே, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலின் பல்வேறு மையங்கள் மூலம், நிலப்பகுதிகளில் விளையும் பயிர்கள் (1434), தோட்டக்கலைப் பயிர்கள் (462), வானிலையை எதிர்கொள்ளும் திறன் பெற்ற வகைகள் (1121) என புதிய வகைப் பயிர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பல்வேறு வகையிலான நெருக்கடிகளைச் சமாளித்து வளரும் வகையிலான இனங்களை உருவாக்க மூலக்கூறு இனப்பெருக்கத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஹெச்டி 3226 வகை கோதுமைப் பயிர், 7 வகையான நோய்களையும், ஆர்க்ஆபெட் (ArkAbed) வகை தக்காளி 4 வகையான நோய்களையும் எதிர்கொள்ளும் திறன் பெற்றவை.

வர்த்தக ரீதியாகப் பதப்படுத்தும் வகையிலான தேவைகளை நிறைவேற்றும் வகையில், பதப்படுத்தும் குணம் பெற்றுள்ள ஆர்க்விசேஸ் (ArkVises), ஆர்க்அலேஷா (ArkAlesha), ஆர்க்யோஜி (ArkYoji) ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன. வேளாண்-வானிலை மண்டலத்தின் சிறப்புத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு இனங்களை உருவாக்குவது மற்றும் சிறந்த வருவாய் பெறுவதை உறுதிப்படுத்த, மற்ற துறையிலிருந்து வேளாண் துறைக்கான இடுபொருள்களைப் பெறுவது மற்றும் வேளாண் துறையில் மற்ற துறைகளுக்கான இடுபொருள்களை உருவாக்குவது ஆகியவற்றுக்கான இணைப்பை ஏற்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கும் முயற்சி ஆகியவற்றுக்காக பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.

கரன்-4 என்ற கரும்பு வகை மூலம், அதிக அளவில் சர்க்கரை தயாரிக்க முடியும். இது உத்தரப்பிரதேசத்தில் பாரம்பரிய வகைகளுக்கு மாற்றாக அமைந்துள்ளது. கரும்பு மற்றும் பிற பயிர்களிலிருந்து உயிரி எத்தனால் தயாரிப்பதை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராய வேண்டியது அவசியம் என்று பிரதமர் எடுத்துரைத்தார்.

KuposhMukt Bharat” (ஊட்டச்சத்துக் குறைபாடு இல்லாத இந்தியாவை) உருவாக்கும் முயற்சியை ஊக்குவிக்கும் வகையில், அதிக அளவில் இரும்புச்சத்து, தாமிரம், புரோட்டீன் கொண்ட 70 வகையான ஊட்டச்சத்து மிகுந்த பயிர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பாக்வா என்ற மாதுளை வகையில், இரும்புச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் சி, ஆன்டி-ஆக்சிடென்ட்கள் அதிக அளவில் உள்ளன.

வேளாண் விஞ்ஞான மையங்கள் மூலம், ஆரோக்கிய உணவுத் தட்டுகள் மற்றும் ஊட்டச்சத்துத் தாவரங்கள் கொண்ட தோட்டங்களை உருவாக்க ஊக்குவிக்கப்படுகிறது. மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஷ்கரில் 76 வேளாண் விஞ்ஞான மையங்கள் மற்றும் 450 மாதிரிப் பண்ணைகள் மூலம் மாதிரி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சரிசமமான ஊட்டச்சத்தை உறுதிப்படுத்தும் வகையில், ஊட்டச்சத்துப் பயிர்களை வளர்ப்பது குறித்து கிராமப்புறங்களைச் சேர்ந்த பெண்கள் மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஆரோக்கிய உணவுத் தட்டில் சாப்பாடு, உள்ளூர்ப் பருப்பு, பருவகாலப் பழம், பச்சை இலைக் காய்கறி, கிழங்குகள், மற்ற காய்கறிகள், பால் மற்றும் மற்ற வகைகளான சர்க்கரை, வெல்லம் மற்றும் எண்ணெய் ஆகியவை அடங்கியிருக்கும். 2022-ஆம் ஆண்டுக்குள் ஊட்டச்சத்து கொண்ட 100 பொலிவுறு கிராமங்கள் ஏற்படுத்தப்படும்.   

தொகுப்பு அடிப்படையிலான நடவடிக்கைகள் மூலம், இயற்கை வேளாண்மை நடைமுறைகளைச் செயல்படுத்த வேண்டியது அவசியம் என்று பிரதமர் எடுத்துரைத்தார். இந்தியாவில் புவியியல் அடிப்படையிலான இயற்கை வேளாண்மைக்கான வரைபடத்தை இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் உருவாக்கியுள்ளது. இதில், இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையிலான 88 உயிரிக் கட்டுப்பாட்டுப் பொருள்கள் மற்றும் 22 உயிரிப் பூச்சிக்கொல்லிகளைக் கண்டறிந்துள்ளது.

வேளாண்மை மற்றும் அது தொடர்பான துறைகளில் புத்தாக்கத்தை உறுதிப்படுத்தவும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும் புதிய நிறுவனங்கள் மற்றும் வேளாண் தொழில்முனைவோரை ஊக்குவிக்க வேண்டும் என்று பிரதமர் உத்தரவிட்டார். தேவை குறித்த தகவல்களை விவசாயிகளுக்கு அளிப்பதற்காக தகவல் தொழில்நுட்பப் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டியது அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

வேளாண் பணியாளர்களில் அதிகமானோர் பெண்களாக இருப்பதால், வேளாண் பணிகளில் வேலைப்பளுவை குறைக்கும் வகையிலான உபகரணங்கள் மற்றும் கருவிகளை உருவாக்கவும், பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், ஆண்டுக்கு இரு முறை போட்டிகளை நடத்தலாம் என்று பிரதமர் அறிவுறுத்தினார்.

ஆரோக்கியமான உணவு முறையை உறுதிப்படுத்த சோளம், கம்பு, ராகி மற்றும் பிற சிறுதானியங்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.  

கடும் வெப்பம், வறட்சி, கடும் குளிர், கனமழையால் பயிர்கள் மூழ்குவது போன்ற வானிலை மாற்ற பிரச்சினைகளால், பெருமளவில் இழப்பு ஏற்படுவதுடன், வேளாண் வாழ்வாதாரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இது போன்ற வானிலை மாற்ற பிரச்சினையால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகளைக் குறைக்கும் வகையிலான ஒருங்கிணைந்த வேளாண் முறையை உருவாக்க வேண்டும். பல சந்ததிகளாக விவசாயிகள் பயிரிட்டு வரும் பாரம்பரிய வகைகள், நெருக்கடிகள் மற்றும் பிற சவால்களை சமாளிக்கிறதா என்பது குறித்து ஆய்வுசெய்யப்பட்டு வருகிறது.

நீரை சிறப்பான முறையில் பயன்படுத்துவதை ஊக்குவிக்க, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று பிரதமர் விருப்பம் தெரிவித்தார். 

கால்நடை, செம்மறி ஆடுகள், வெள்ளாடுகளில் புதிய இனங்களை உருவாக்குவதில் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலின் பங்களிப்புகள் குறித்து ஆய்வு செய்த பிரதமர், நாய்கள் மற்றும் குதிரைகளின் உள்நாட்டு இனங்கள் குறித்தும் ஆய்வு நடத்த வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார். கோமாரி நோய் பரவாமல் தடுப்பதற்காக தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் உத்தரவிட்டார்.

புற்கள் மற்றும் உள்ளூர் கால்நடைத் தீவனங்களின் ஊட்டச்சத்துத் தன்மைகள் குறித்து புரிந்து கொள்வதற்காக ஆய்வு நடத்த வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார். வர்த்தக ரீதியாக ஊட்டச்சத்துக்கு கடற்பாசியைப் பயன்படுத்துவது குறித்து மட்டுமல்லாமல், மண் ஆரோக்கியத்துக்காக கடற்பாசிகளைப் பயன்படுத்துவது குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும் என்று பிரதமர் எடுத்துரைத்தார்.

பஞ்சாப், ஹரியானா, தில்லி ஆகிய மாநிலங்களில் நெல் பயிர்களை அறுவடை செய்த பிறகு, எரிப்பதால் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண, அற்புத விதை முறையை (Magic seeder) இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டை விட, 2019-ஆம் ஆண்டில் பயிர்த் தட்டைகள் எரிப்பு 52 சதவீதம் குறைந்துள்ளது.

விவசாயத்துக்கான பொருள்கள் எளிதில் கிடைக்கவும், விளைபொருள்களை வேளாண் நிலப்பகுதியிலிருந்து சந்தைகளுக்குக் கொண்டு செல்லவும் வழிவகை செய்ய வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார். இதற்காக கிஷன்ராத் என்ற செயலியை வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

விவசாயிகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையில், வேளாண் வானிலைத் தேவைகள் அடிப்படையில் வேளாண் கல்வி மற்றும் ஆய்வு முறையை ஒருங்கிணைக்க வேண்டியது அவசியம் என்று பிரதமர் எடுத்துரைத்தார். சர்வதேச தரநிலையை எதிர் கொள்வதோடு, விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கவும் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஊரகப்பகுதிகளை மாற்றியமைப்பதில், இந்திய சமூகத்தினரின் பாரம்பரியப் புலமைகளுடன் தொழில்நுட்பம் மற்றும் இளைஞர்கள், வேளாண் துறை பட்டதாரிகளின் திறனையும் இணைத்து இந்திய வேளாண்மையின் முழு திறனையும் பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார்.

****



(Release ID: 1636664) Visitor Counter : 222