நிதி அமைச்சகம்

பொருளாதார நடவடிக்கை அதிகரிப்பு - பொருளாதாரக் குறியீடுகளில் மேம்பாடு.

Posted On: 23 JUN 2020 12:00PM by PIB Chennai

'உயிரோடு இருந்தால் உலகம் உங்கள் வசம்' என்னும் உயிர்களைக் காப்பாற்றும் அவசரத் தேவையால் வழிநடத்தப்பட்டு, நாட்டில் கொவிட்-19 பரவலை ஆரம்ப கட்டங்களிலேயே தடுப்பதற்காக 24 மார்ச், 2020 அன்று முதல் 21 நாட்களுக்கு கடுமையான பொதுமுடக்கத்தை இந்தியா அமல்படுத்தியது. நாட்டின் சுகாதார மற்றும் பரிசோதனை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு பொதுமுடக்கக் காலம் வாய்ப்பளித்தது. தடமறிதல், சிகிச்சை மற்றும் தகவல் தெரிவித்தல் ஆகியவை தக்க சமயத்தில் மேற்கொள்ளப்படுவதால், வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நாட்டின் மொத்த பாதிப்புகளில், தற்சமயம் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 41 சதவீதம் ஆகும்.

 

அதே சமயம், கடுமையான பொதுமுடக்கமும், சமூக விலகல் நடவடிக்கைகளும் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்தன. உயிர்களுடன் சேர்த்து வாழ்வாதாரங்களையும் காப்பாற்றுவதற்கான உத்தியை நோக்கி படிப்படியாக முன்னேறியதின் மூலம், ஜூன் 1 முதல் 'அன்லாக் இந்தியா' என்னும் தளர்வுகளை அமல்படுத்தும் திட்டம் தொடங்கி சேவைகளும், தொழில்களும் நாட்டில் மீண்டும் தொடங்கின. குறைந்தபட்ச பாதிப்புடன் பொருளாதாரத்துக்கு கூடிய விரைவில் புத்துயிர் அளிக்க, குறுகிய கால மற்றும் நீண்ட காலத்துக்கு தேவையான சரியான கொள்கை நடவடிக்கைகளை அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் படிப்படியாக எடுத்தன.

 

இந்தியப் பொருளாதாரத்தின் அடித்தளமாக வேளாண் துறை இருப்பதாலும், பருவமழை இயல்பாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருப்பதாலும், நாட்டின் பொருளாதாரம் சீரவடைதற்கு அது ஆதரவளிக்க வேண்டும். மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு அந்தத் துறையின் பங்களிப்பு மிகவும் பெரிதாக இல்லாத பட்சத்திலும் (தொழில் மற்றும் சேவைத் துறைகளோடு ஒப்பிடும் போது), வேளாண்மையை நம்பியிருக்கும் அதிக அளவிலான மக்களிடத்தின் அதன் வளர்ச்சி நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், செயல்திறன் மிகுந்த மதிப்பு சங்கிலிகளைக் கட்டமைப்பதிலும், விவசாயிகளுக்கு சிறந்த வருவாயை உறுதி செய்வதிலும், வேளாண் துறைக்காக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சிறப்பு மிக்க சீர்திருத்தங்கள் பெரிதும் பங்காற்றும்.

 

தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை தயாரிக்கத் தொடங்கிய இரண்டே மாதங்களில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்ததில் இருந்து இந்திய உற்பத்தித் துறையின் திறனைத் தெரிந்து கொள்ளலாம். மின்சாரம் மற்றும் எரிபொருள் நுகர்வு, மாநிலங்களுக்குள் மற்றும் மாநிலங்களுக்கிடையேயான சரக்குப் போக்குவரத்து, மற்றும் சில்லறை நிதிப் பரிவர்த்தனைகள் ஆகிய உண்மையான செயல் குறீயீடுகள் வளர்ச்சியை சந்தித்ததன் மூலம், பொருளதாரப் புத்தாக்கத்தின் ஆரம்பப் பசுமை அறிகுறிகளும் மே மற்றும் ஜூன் மாதங்களில் தெரியத் தொடங்கின.

 

பொருளாதார குறியீடுகளில் மேம்பாடு

 

வேளாண்மை

 

* விவசாயிகளிடம் இருந்து அரசு முகமைகள் கோதுமையை வாங்குவதில் 2012-13-இல் செய்யப்பட்ட முந்தைய சாதனையான 381.48 லட்சம் மெட்ரிக் டன்களை முறியடித்து, 16 ஜூன், 2020 அன்று முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 382 லட்சம் மெட்ரிக் டன்கள் கொள்முதல் செய்யப்பட்டன. கொவிட்-19 பெருந்தொற்றின் சோதனையான காலங்களில் சமூக விலகல் கட்டுப்பாடுகளின் கீழ் இந்த சாதனை செய்யப்பட்டது. 42 லட்சம் விவசாயிகள் பயனடைந்தனர் மற்றும் கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையாக மொத்தம் ரூ 73,500 கோடி அவர்களுக்கு வழங்கப்பட்டது.

 

* சிறு வன உற்பத்தி பொருள்களுக்கான (MFP) குறைந்தபட்ச ஆதரவு விலைத் திட்டத்தின் கீழ், 16 மாநிலங்களில் சிறு வன உற்பத்தி பொருள்களின் கொள்முதல் வரலாறு காணாத அளவுக்கு ரூ 79.42 கோடியைத் தொட்டது. கொவிட்-19 பெருந்தொற்று பழங்குடிகளின் வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் பாதித்துள்ள துன்பமான காலகட்டத்தில் மிகவும் தேவையான மருந்தாக இது அமைந்தது.

 

* கரீப் பயிர்களை 13.13 மில்லியன் ஹெக்டேர்களில் 19 ஜூன் நிலவரப்படி விவசாயிகள் விதைத்துள்ளனர். எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள் மற்றும் பருத்தி ஆகியவற்றின் பரப்பளவில் கடந்த ஆண்டின் இதே பருவத்தோடு ஒப்பிடும் போது இது 39 சதவீதம் அதிகமாகும்.

 

* வலிமையான வேளாண் துறையைக் குறிக்கும் வகையில், மே 2020-இன் படி உரங்களின் விற்பனை ஒரு வருடத்தில் 98 சதவீதம் உயர்ந்துள்ளது (40.02 லட்சம் டன்கள்).

 

உற்பத்தி

 

* ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது, இந்தியாவின் உற்பத்தி மற்றும் சேவைகளுக்கான கொள்முதல் மேலாளர் குறியீடு (PMI) மே மாதத்தில் முறையே 30.8 மற்றும் 12.6 (ஏப்ரலில் முறையே 27.4 மற்றும் 5.4) என்ற அளவில் இருந்தன.

 

* ஏப்ரலில் (-) 24 சதவீதமாக இருந்த மின்சார நுகர்வின் சுருங்கிய வளர்ச்சி விகிதம், மே மாதத்தில் (-) 15.2 சதவீதமாகவும், ஜூனில் (ஜூன் 21 வரை) (-) 12.5 சதவீதமாகவும் இருந்தன. மின்சார நுகர்வு ஜூன் மாதத்தில் தொடர்ந்து மேம்பட்டு முதல் வாரத்தில் (-) 19.8 சதவீதமாகவும், இரண்டாவது வாரத்தில் (-) 11.2 சதவீதமாகவும், மூன்றாவது வாரத்தில் (-) 6.2 சதவீதமாகவும் இருந்தது.

 

* கடந்த வருடம் மற்றும் பொதுமுடக்கத்துக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும் போது குறைவெனும் போதிலும், மின்-வழி ரசீதுகளின் மொத்த மதிப்பீட்டு மதிப்பு ஏப்ரல், 2020-த்துடன் (ரூ 3.9 லட்சம் கோடி) ஒப்பிடும் போது மே, 2020-இல் 130 சதவீதம்  (ரூ 8.98 லட்சம் கோடி) உயர்ந்திருந்தது. மாதம் முடிவதற்கு 11 நாட்கள் இருந்த நிலையில், ஜூன் 1 முதல் 19 வரையிலான மின்-வழி ரசீதுகளின் மதிப்பு ரூ 7.7 லட்சம் கோடியாக இருந்தது.

 

* நாட்டின் நுகர்வு மற்றும் உற்பத்திச் செயல்பாடுகளைப் பிரதிபலிக்கும் முக்கியக் குறியீடான பெட்ரோலியப் பொருள்களின் நுகர்வு, ஏப்ரலின் 99,37,000 மெட்ரிக் டன்களுடன் ஒப்பிடும் போது 47 சதவீதம் உயர்ந்து 1,46,46,000 மெட்ரிக் டன்களாக மே மாதத்தில் இருந்தது. தொடர்ந்து, பெட்ரோலியப் பொருள்களின் நுகர்வு வளர்ச்சியின் குறைவு வருடாந்திர அளவில் ஏப்ரலின் (-) 45.7 சதவீதத்துடன் ஒப்பிடும் போது மே மாதத்தில் மிகவும் குறைவாக (-) 23.2 ஆக இருந்தது. பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட அன்லாக் 1.0-வின் ஒரு மாதத்துக்கு பிறகு, பெட்ரோலிய பொருள்களின் நுகர்வு ஜூன் மாதத்தில் இன்னும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

சேவைகள்

 

* கடந்த வருடத்தின் அளவை விடக் குறைவாக இருந்தாலும், ஏப்ரல் மாதத்தோடு (6.54 கோடி டன்கள்) ஒப்பிடும் போது, மே மாதத்தில் ரயில்வே சரக்குப் போக்குவரத்து அதிகரித்தது (8.26 கோடி டன்கள்). தேசிய நெடுஞ்சாலைகளில சரக்குப் போக்குவரத்து அதிகரித்திருப்பதன் தொடர்ச்சியாக இந்த வளர்ச்சி ஜூன் மாதத்தில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

* ஏப்ரல், 2020-இன் ரூ 8.25 கோடியோடு ஒப்பிடும் போது, சராசரி தினசரி மின்னணு சுங்க வசூல் ரூ 36.84 கோடியாக மே மாதத்தில் நான்கு மடங்கு உயர்ந்தது. ஜூன் மாதத்தின் முதல் மூன்று வாரத்தில் இது இன்னும் அதிகரித்து ரூ 49.8 கோடியை தொட்டது.

 

* இந்திய தேசியப் பணப்பரிவர்த்தனை நிறுவனத்தின் (NPCI) தளங்களின் மூலம் செய்யப்பட்ட மொத்த டிஜிட்டல் சில்லறை நிதிப் பரிவர்த்தனைகள், ஏப்ரல் 2020-இல் ரூ 6.71 லட்சம் கோடியாக இருந்து, மே மாதத்தில் ரூ 9.65 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. நடவடிக்கை. உண்மையான செயல்பாடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக இந்த போக்கு ஜூன் மாதத்தில் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

பணக் குறியீடுகள்

 

* போதுமான நிதி ஓட்டத்தை உறுதி செய்ய இந்திய ரிசர்வ் வங்கி எடுத்த முயற்சிகளைத் தொடர்ந்து, பெருநிறுவனப் பத்திரங்களின் தனிப்பட்ட விற்பனை ஏப்ரல் மாதத்தின் குறைந்த அளவான 22 சதவீதத்துடன் (ரூ 0.54 கோடி) ஒப்பிடும் போது, மே மாதத்தில் (ரூ 0.84 கோடி) 94.1 சதவீதமாக அதிக அளவில் உயர்ந்தது (வருடாந்திர வளர்ச்சி). அதிகமான பணப்புழக்கம் அமைப்பில் இருப்பதால் ஜூன் மாதத்தில் இது இன்னும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

* பரஸ்பர நிதிகளின் மேலாண்மையின் கீழ் இருக்கும் தோராய சொத்துகள் (AUM), ஏப்ரல் 2020-இன் ரூ 23.5 லட்சம் கோடியுடன் ஒப்பிடும் போது, மே 2020-இல் 3.2 சதவீதம் உயர்ந்து ரூ 24.2 லட்சம் கோடியாக இருந்தது. குறியீட்டில் வருடாந்திர வளர்ச்சியின் சுருக்கமும் ஏப்ரலின் (-) 6.9 சதவீதத்தில் இருந்து மே மாதத்தில் (-) 4.5 சதவீதமாகக் குறைந்தது.

 

* 12 ஜுன் அன்று வரையிலான 507.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான இந்தியாவின் அந்நிய செலாவணி, அதிக நேரடி அந்நிய முதலீடு, போர்ட்ஃபோலியோ நிதி ஓட்டங்கள் மற்றும் குறைவான எண்ணெய் விலைகள் ஆகியவற்றின் அடிப்படையிலான வெளிப்புற அதிர்ச்சிகளைத் தாங்கும் முக்கிய வசதியை அளிக்கிறது. முந்தைய வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் நேரடி அந்நிய முதலீடு நிதி ஆண்டு 2019-20-இல் 18.5 சதவீதமாக அதிகரித்து 73.45 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.

 

அமைப்பு ரீதியான சீர்த்திருத்தங்கள் மற்றும் சமூக நல நடவடிக்கைகள் மீதான அரசின் உறுதி இந்த 'பசுமை அறிகுறிகள்' வளர்ச்சியடைவதற்கு உதவி புரியும். அனைத்து பங்குதாரர்களின் ஒருங்கிணைந்த முயற்சியின் மூலமும், வலிமையான மற்றும் துடிப்பான இந்தியப் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான பங்களிப்பின் மூலமும், சுய-சார்பு இந்தியாவுக்கான உறுதி வலிமை அடையும்.

***
 



(Release ID: 1633631) Visitor Counter : 317