நிதி அமைச்சகம்
இந்திய அரசு மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இந்தியாவுக்கு கொவிட்-19 ஆதரவுக்காக 750 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
Posted On:
19 JUN 2020 6:20PM by PIB Chennai
இந்திய அரசும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியும் (AIIB) இன்று 750 மில்லியன் டாலர் ஒப்பந்தமான “கொவிட்-19 தீவிர செயல்பாடு மற்றும் செலவு ஆதரவுத் திட்டத்தில்” கையெழுத்திட்டது, இது ஏழை மற்றும் வறுமைகோட்டிற்கு கீழ் வசிப்போர் வீடுகளில் கொவிட்-19 தொற்று நோய் ஏற்படுத்தும் மோசமான தாக்கங்களுக்கு அதன் செயல்பாட்டை வலுப்படுத்த இந்தியாவுக்கு உதவியாக இருக்கும். ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியிலிருந்து இந்தியாவுக்கு வந்த முதல் நிதி ஆதரவுத் திட்டம் இதுவாகும்.
இந்த ஒப்பந்தத்தில் இந்திய அரசு சார்பாக நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத் துறை கூடுதல் செயலாளர் திரு சமீர் குமார் கரே மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி சார்பில் அதன் தலைமை இயக்குநர் (செயல்) திரு ரஜத் மிஸ்ரா ஆகியோர் கையெழுத்திட்டனர்.
திரு கரே கூறுகையில், “கொரோனா வைரஸ் தொற்று நோயின் போது பெண்கள் உட்பட பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு பொருளாதார இழப்பை ஈடு செய்வதற்கான சமூக உதவிகளை அரசாங்கம் உடனடியாக வழங்கியதுடன், ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் முறை சாரா துறைகளில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சமூகப்பாதுகாப்பு நடவடிக்கைகளை வழங்க உதவிய ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கிக்கு நன்றி தெரிவிக்கிறோம்” என்றார். ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியால் சரியான நேரத்தில் வழங்கப்பட்ட இந்த நிதி உதவி அரசாங்கத்தின் கொவிட்-19 அவசரகால நடவடிக்கைத் திட்டத்தைத் திறம்படச் செயல்படுத்த பங்களிக்கும்.
கொவிட்-19 தொற்றினால் ஏற்பட்ட கடுமையான சமூக மற்றும் பொருளாதாரத் தாக்கத்தைத் தணிக்க இந்தத் திட்டம் இந்திய அரசுக்குத் தேவையான நிதி ஆதரவை வழங்கும். கொவிட்-19 அவசரகால நடவடிக்கை மற்றும் சுகாதார உபகரணங்கள் தயாரிப்புத் திட்டத்திற்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட 500 மில்லியன் டாலர் கடனைத் தொடர்ந்து, தற்போது ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியிலிருந்து கொவிட்-19 நெருக்கடி மீட்பு வசதியின் கீழ் இந்தியா பெரும் இரண்டாவது கடன் இதுவாகும்.
முதன்மையாக இந்தத் திட்டத்தின் பயனாளிகள் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்கள், விவசாயிகள், சுகாதாரப்பணியாளர்கள், பெண்கள், பெண்களின் சுய உதவிக்குழுக்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், குறைந்த ஊதியம் பெறுபவர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் பிற பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் ஆகியோர் ஆவர்.
ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் துணைத்தலைவர் திரு.டி.ஜே.பாண்டியன் (முதலீட்டு செயல்பாடுகள்), இந்தியாவின் பொருளாதாரத்தில் மனித மூலதனம் உள்ளிட்ட உற்பத்தித் திறனுக்கான நீண்டகால சேதத்தைத் தடுப்பதற்காக, பொருளாதார உதவி செய்வதை ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த திட்டத்திற்கு ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) 2.250 பில்லியன் டாலர் நிதியுதவி செய்கின்றன, இதில் 750 மில்லியன் டாலர் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியும் 1.5 பில்லியன் டாலர் ஆசிய வளர்ச்சி வங்கியும் வழங்கும். இந்தத் திட்டத்தை நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை பல்வேறு அமைச்சகங்கள் மூலம் செயல்படுத்தும்.
ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஆசியாவில் சமூக மற்றும் பொருளாதார விளைவுகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் கூடிய பலதரப்பட்ட மேம்பாட்டு வங்கியாகும், இது 2016 ஜனவரியில் செயல்படத் தொடங்கியது. ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இப்போது உலகளவில் 102 அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர்களாக வளர்ந்துள்ளது.
******************
(Release ID: 1632728)
Visitor Counter : 390
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam