பிரதமர் அலுவலகம்

லாவோஸ் மக்கள் ஜனநாயகக் குடியரசின் பிரதமர் டாக்டர்.தோங்க்லோன் சிசோலித்-உடன் பிரதமர் திரு.நரேந்திரமோடி தொலைபேசி வாயிலாகப் பேச்சுவார்த்தை

Posted On: 12 JUN 2020 8:44PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திரமோடி இன்று (12 ஜுன், 2020) லாவோஸ் மக்கள் ஜனநாயகக் குடியரசின் பிரதமர் டாக்டர். தோங்க்லோன்- தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்

உலகளாவிய கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக எழுந்துள்ள சுகாதாரம் மற்றும் பொருளாதார சவால்கள் குறித்து, இரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.   கோவிட் பெருந்தொற்று லாவோஸ் நாட்டில் பரவுவதைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு மேற்கொண்ட வலுவான முயற்சிகளை பிரதமர் வெகுவாகப் பாராட்டினார்

கோவிட்-19க்குப் பிந்தைய உலகிற்கு ஆயத்தமாவதில், தத்தமது சிறந்த நடைமுறைகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதுடன், இந்த விவகாரத்தில் சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் என்பதையும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.  

லாவோஸ் நாட்டுடனான இந்தியாவில் வரலாற்று மற்றும் கலாச்சார ரீதியான பிணைப்புகளைச் சுட்டிக் காட்டிய பிரதமர், வாட்ஃபோவில் உள்ள உலகப் பாரம்பரிய சின்னத்தைப் புனரமைக்க வாய்ப்பு கிடைத்தமைக்கும் மனநிறைவு தெரிவித்தார்.   லாவோஸ் நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள், திறன் உருவாக்கம் மற்றும் கல்வி உதவித்தொகை வழங்குவதில் இந்தியா வழங்கி வரும் ஒத்துழைப்புகளுக்காக பிரதமருக்கு லாவோஸ் பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.  

இந்தியாவின் விரிவுபடுத்தப்பட்ட அண்டைநாடு என்ற அடிப்படையில் மதிப்புமிக்க நட்பு நாடான லாவோஸ் மக்கள் ஜனநாயக் குடியரசிற்கு, வளர்ச்சிப் பணிகளில் தொடர்ந்து ஒத்துழைப்பதென்ற இந்தியாவின் உறுதிப்பாட்டையும் பிரதமர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.   


(Release ID: 1631351) Visitor Counter : 270