சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கோவிட்-19 குறித்த அண்மைச் செய்திகள் பரிசோதிக்கப்பட்ட மக்களில் 0.73 சதவீதம் பேருக்கு மட்டுமே கோவிட்-19 பாதிப்பு உள்ளதாக ஐ.சி.எம்.ஆர். நடத்திய செரோ-கண்காணிப்பு ஆய்வில் தகவல்

Posted On: 11 JUN 2020 6:48PM by PIB Chennai

நோய் எதிர்ப்புக் கிருமிகளை அடிப்படையாகக் கொண்டு ஐ.சி.எம்.ஆர். நடத்திய செரோ-கண்காணிப்பு ஆய்வில், கணக்கெடுப்பு நடத்தியவர்களில் 0.73 சதவீதம் பேருக்கு சார்ஸ்-சி.ஓ.வி.-2 (SARS-Cov-2)பாதிப்பு இருந்திருப்பதற்கான  ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகத் தலைமை இயக்குநர் டாக்டர் பல்ராம் பார்கவா இன்று செய்தியாளர்களைச் சந்தித்த போது இந்தத் தகவலை வெளியிட்டார்.

ஐ.சி.எம்.ஆர். முதலில் 2020 மே மாதம், மாநில சுகாதாரத் துறைகள், என்.சி.டி.சி., உலக சுகாதார நிறுவனத்தின் இந்தியப் பிரிவு ஆகியவற்றுடன் இணைந்து கோவிட்-19 குறித்த முதலாவது செரோ கணக்கெடுப்பை நடத்தியது. 83 மாவட்டங்களில், 28,595 வீடுகளில், 26,400 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. பொதுவாக சார்ஸ்-சி.ஓ.வி.-2 தொற்றுக்கு  ஆளான மக்கள் தொகையைக் கணக்கிடும் முதன்மையான பணிக்கான முதலாவது பகுதி ஆய்வு பூர்த்தியாகிவிட்டது. கோவிட்-19 பாதிப்பு அதிகம் உள்ள ஹாட்ஸ்பாட் நகரங்களில், கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில் சார்ஸ்-சி.ஓ.வி.-2 தொற்று பாதித்தவர்களைக் கணக்கிடும், ஆய்வின் இரண்டாவது பகுதி நிறைவு நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

முடக்கநிலை காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் நோய் பரவும் அளவு வெற்றிகரமாகக் குறைக்கப்பட்டு, கோவிட்-19 தீவிரமாகப் பரவாமல் தடுக்கப்பட்டது என்பதை இந்த ஆய்வு தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது. ஊரகப் பகுதிகளுடன் ஒப்பிட்டால், நகர்ப்புறங்களில் நோயின் பரவுதல் 1.09 மடங்கு அதிகமாக உள்ளது என்றும், நகர்ப்புற குடிசைப் பகுதிகளில் 1.89 மடங்கு அதிகமாக உள்ளது என்றும் ஐ.சி.எம்.ஆர். கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களில் மரணம் 0.08 சதவீதம் என்ற மிகக் குறைந்த அளவில் உள்ளது. மக்களில் பெரும் பகுதியினர் கோவிட் குறித்து அவ்வப்போது அளிக்கப்படும் நடைமுறைகளைத் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்பது இதன் அர்த்தமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 5,823 கோவிட்-19 நோயாளிகள் குணம் பெற்றுள்ளனர். எனவே, இதுவரையில் மொத்தம்  1,41,028  பேருக்கு கோவிட்-19 குணமாகியுள்ளது. கோவிட்-19 பாதிப்புக்கு ஆளானவர்கள் குணமாகும் விகிதம் 49.21 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் இப்போது 1,37,448  பேர் கோவிட்-19 சிகிச்சையில் உள்ளனர். அவர்கள் அனைவரும் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருக்கின்றனர். இப்போதைய நிலையில், குணமான நோயாளிகளின் எண்ணிக்கை, சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையைவிட அதிகமாக உள்ளது.

*****



(Release ID: 1631063) Visitor Counter : 289