உள்துறை அமைச்சகம்

கோவிட்-19 வைரசை எதிர்கொள்வதற்காக ஜூன் 1, 2020 முதல் அமல்படுத்தப்படும் புதிய வழிகாட்டி நெறிமுறைகள்

Posted On: 30 MAY 2020 7:47PM by PIB Chennai

கோவிட்-19 வைரசை எதிர்கொள்ளவும், கட்டுப்பாட்டு மண்டலங்கள் அல்லாத பகுதிகளைப் படிப்படியாகத் திறக்கும் வகையிலும் புதிய வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டி நெறிமுறைகள், ஜூன் 1, 2020 முதல் ஜூன் 30, 2020 வரை அமலில் இருக்கும். முதல் நடவடிக்கையில், பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு, செயல்பாடுகளுக்கு அனுமதி அளிக்கப்படும். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் நடத்தப்பட்ட விரிவான கலந்தாலோசனைகளின் அடிப்படையில் புதிய வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

மார்ச் 24, 2020 முதல் நாடு தழுவிய அளவில் கடுமையான பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அத்தியாவசிய சேவைகளைத் தவிர மற்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடைவிதிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, கோவிட்-19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்திலிருந்து பின்வாங்காத வகையில், பொது முடக்க வழிமுறைகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டன.

 

புதிய வழிகாட்டி நெறிமுறைகளின் சிறப்பு அம்சங்கள்

கட்டுப்பாட்டு மண்டலங்களில் பொதுமுடக்க வழிமுறைகள், தொடர்ந்து கடுமையாகப் பின்பற்றப்படும். சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டி நெறிமுறைகளை கவனத்தில் கொண்டு, இந்தக் கட்டுப்பாட்டு மண்டலங்களை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் வரையறுக்கும். கட்டுப்பாட்டு மண்டலப் பகுதிகளுக்குள், கடும் கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும். அத்தியாவசிய சேவைகள் மட்டும் அனுமதிக்கப்படும்.

கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள பகுதிகளில் ஏற்கனவே விதிக்கப்பட்ட தடைகள், படிப்படியாக விலக்கிக் கொள்ளப்படும். இதில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள நிலையான செயல்பாட்டு வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

முதல்கட்டம் (ஜூன் 8, 2020 முதல் செயல்பட அனுமதி)

  • மதத் தலங்கள் மற்றும் பொதுமக்களின் வழிபாட்டு இடங்கள்;
  • ஹோட்டல்கள், உணவு விடுதிகள் மற்றும் பிற உபசரிப்பு சேவைகள்; மற்றும்
  • வணிக வளாகங்கள்.

சமூக இடைவெளியை உறுதிப்படுத்தவும், கோவிட்-19 வைரஸ் பரவலைத் தடுக்கவும், தொடர்புடைய மத்திய அமைச்சகங்கள்/துறைகள் மற்றும் பிற தரப்பினருடன் ஆலோசனை நடத்தி, மேற்கண்ட நடவடிக்கைகளுக்கான நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிடும்.

இரண்டாவது கட்டம்

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு, பள்ளிகள், கல்லூரிகள், கல்வி/பயிற்சி/பயிற்றுவிப்பு நிறுவனங்கள் உள்ளிட்டவை செயல்பட அனுமதிக்கப்படும். கல்வி நிறுவனங்கள் மட்டத்தில் பெற்றோர் மற்றும் பிற தரப்பினருடன் ஆலோசனை நடத்துமாறு மாநில அரசுகள்/யூனியன் பிரதேச நிர்வாகங்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றன. இதில் பெறப்படும் கருத்துக்கள் அடிப்படையில், கல்வி நிறுவனங்களைத் திறக்க அனுமதிப்பது குறித்து ஜூலை 2020-இல் முடிவு எடுக்கப்படும். இந்தக் கல்வி நிறுவனங்களுக்கான நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தயார் செய்யும்.

நாடு தழுவிய அளவில் குறிப்பிட்ட சில நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து தடைவிதிக்கப்படுகிறது.

  • பயணிகளின் சர்வதேச விமானப்பயணம்;
  • மெட்ரோ ரயில் இயக்கம்;
  • திரையரங்குகள், உடற்பயிற்சிக்கூடங்கள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்குப் பூங்காக்கள், பார்கள் மற்றும் கலையரங்குகள், மக்கள் கூடும் வளாகங்கள் மற்றும் அதுபோன்ற இடங்கள்; மற்றும்
  • சமூக/ அரசியல்/ விளையாட்டு/ பொழுதுபோக்கு/ கல்வி/ கலாச்சார/ மத நிகழ்ச்சிகள்/ மற்றும் பிற மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகள்.
  • மேற்கண்டவை செயல்பட அனுமதிப்பதற்கான தேதிகள் குறித்து மூன்றாவது கட்டத்தில், சூழ்நிலையின் அடிப்படையில் முடிவுசெய்யப்படும்.

தனிநபர்கள் மற்றும் சரக்குகள் செல்வதற்கு அனுமதி

  • மாநிலத்துக்கு உள்ளேயும், மாநிலங்களுக்கு இடையேயும் சரக்குகளை கொண்டு செல்லவும், தனிநபர்கள் செல்லவும் தடையில்லை. இது போன்ற நடவடிக்கைகளுக்கு தனியாக அனுமதி/ ஒப்புதல்/ மின்னணு பாஸ் பெற வேண்டியதில்லை.
  • இருந்தாலும், பொது சுகாதாரம் மற்றும் அதன் சூழ்நிலை மதிப்பீடுகள் காரணமாக தனிநபர்கள் நடமாடுவதை ஒழுங்குபடுத்த மாநிலம்/யூனியன் பிரதேசம் விரும்பினால், கட்டுப்பாடுகள் குறித்து முன்கூட்டியே விரிவான விளம்பரம் செய்யவேண்டும். அது தொடர்பான வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

இரவு நேர ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும். அனைத்து அத்தியாவசியமற்ற சேவைகளுக்காகவும் பொதுமக்கள் செல்ல தடைவிதிக்கப்படுகிறது. எனினும், மாற்றியமைக்கப்பட்ட நேரத்தின்படி, ஊரடங்கு இரவு 9 மணிமுதல் காலை 5 மணிவரை அமலில் இருக்கும்.

சமூக இடைவெளி பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் கோவிட்-19 மேலாண்மைக்கான தேசிய அறிவுறுத்தல்களை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே எந்தெந்த நடவடிக்கைகளை அனுமதிப்பது என்பது குறித்து மாநிலங்கள் முடிவு செய்யலாம்.

கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே சூழ்நிலையின் மதிப்பீடு அடிப்படையில், சில நடவடிக்கைகளுக்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தடைவிதிக்கலாம். அல்லது தேவையான கட்டுப்பாடுகளை விதிக்கலாம்.

பாதிப்புக்கு வாய்ப்பு உள்ள நபர்களுக்கான பாதுகாப்பு

பாதிப்புக்கு வாய்ப்புள்ள நபர்கள், அதாவது, 65 வயதுக்கு மேற்பட்ட நபர்கள், மற்ற தீவிர நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஆகியோர் அத்தியாவசியத் தேவைகள் மற்றும் மருத்துவத் தேவைகளுக்கு மட்டும் செல்லலாம். மற்ற நேரங்களில் வீடுகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

ஆரோக்கியசேது செயலியைப் பயன்படுத்துதல்

கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களை விரைந்து அடையாளம் காண்பதற்கு அல்லது நோய்த்தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து இருப்பதைக் கண்டறிவதற்காக இந்திய அரசால் உருவாக்கப்பட்ட சக்திவாய்ந்த கருவியாக ஆரோக்கியசேது கைபேசி செயலி திகழ்கிறது. இது தனிநபர்கள் மற்றும் சமூகத்துக்கு பாதுகாப்பு அரணாக செயல்படுகிறது. பாதுகாப்பை உறுதிப்படுத்துவதை கவனத்தில் கொண்டு, இந்தச் செயலியைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்குமாறு பல்வேறு தரப்பினரும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Click here to see the MHA Guidelines(Release ID: 1628151) Visitor Counter : 147