சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கோவிட்-19 குறித்த அண்மைச் செய்திகள்.


குணம் அடைவோர் விகிதம் 42.4 சதவீதமாக உயர்வு.

நேற்று 1,16,041 மாதிரிகள் பரிசோதனை.

Posted On: 27 MAY 2020 5:03PM by PIB Chennai

முடக்கநிலை அமல் காரணமாக பல ஆதாயங்கள் கிடைத்துள்ளன. நோய் பரவும் வேகம் குறைந்திருப்பது, இவற்றில் முதன்மையானதாக உள்ளது. பெருமளவிலான நோய்த் தாக்குதல் எண்ணிக்கையும், மரணங்களும் இதன் மூலம் தவிர்க்கப் பட்டுள்ளதாக புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதேசமயத்தில், முடக்கநிலை காலத்தில் சுகாதாரக் கட்டமைப்புகள் மேம்பாடு; ஆன்லைன் பயிற்சித் திட்டங்கள் மற்றும் இணையவழி கருத்தரங்குகள் மூலம் மனிதவள திறன் மேம்பாடு; பரிசோதனை வசதி அதிகரிப்பு; மருத்துவ சாதனங்கள் வழங்கும் நிலை, சாதனம், ஆக்சிஜன் கிடைப்பது அதிகரிப்பு; பொருத்தமான வழிகாட்டுதல்கள் வழங்குதல், தரநிலைகள் தயாரித்தல், சுற்றறிக்கையாக அளித்தல், அவற்றை ஏற்று, நடைமுறைப்படுத்துதல் அதிகரிப்பு; நோய் அறியும் பரிசோதனைகள், ரசாயன மருந்துப் பரிசோதனை, தடுப்பூசி ஆராய்ச்சிகள் மேம்பாடு; கூடுதல் தடமறிதல் மூலம் கண்காணிப்பு நடைமுறைகளைப் பலப்படுத்துதல், வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்தல், ஆரோக்கியசேது செயலியின் உதவியுடன் கண்காணித்தல் மேம்பாடு ஆகியவை எட்டப்பட்டுள்ளன.

கோவிட்-19 மேலாண்மைக்குத் தேவையான சுகாதாரக் கட்டமைப்புகள் முடக்கநிலை காலத்தில் வேகமாக உருவாக்கப்பட்டன. 2020 மே 27ஆம் தேதி நிலவரத்தின்படி 930 பிரத்யேக கோவிட் மருத்துவமனைகளில் 1,58,747 தனிமைப்படுத்தல் படுக்கைகள், 20,355 தீவிர சிகிச்சைப்பிரிவுப் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை அளிக்க  69,076  படுக்கை வசதிகள் உள்ளன. 2,362 பிரத்யேக கோவிட் சிகிச்சை மையங்களில் 1,32,593 தனிமைப்படுத்தல் படுக்கைகள்; 10,903 தீவிர சிகிச்சைப்பிரிவுப் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை அளிக்க 45,562  படுக்கை வசதிகள் உள்ளன. 10,341 தனிமைப்படுத்தல் மையங்கள் மற்றும் 7,195 கோவிட் கண்காணிப்பு மையங்களில் கோவிட் நோய்த் தாக்குதலைக் குணப்படுத்த 6,52,830 படுக்கைகள் உள்ளன.  மேலும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய நிறுவனங்களுக்கு மத்திய அரசு 113.58 லட்சம் என்-95 முகக்கவச உறைகள், 89.84 லட்சம் தனிப்பட்ட முழு உடல் பாதுகாப்புக் கவச உடைகளை (பி.பி.இ.) வழங்கியுள்ளது. 435 அரசு ஆய்வகங்கள் மற்றும் 189 தனியார் ஆய்வகங்கள் (மொத்தம் 624 ஆய்வகங்கள்) மூலம் மருத்துவப் பரிசோதனைத் திறன்கள் அதிகரிக்கப் பட்டுள்ளன. கோவிட்-19 நோய்த் தாக்குதலைக் கண்டறிய இதுவரையில்  32,42,160 மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 1,16,041 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.

நாட்டில் இதுவரையில் 1,51,767 பேருக்கு நோய்த் தாக்குதல் கண்டறியப் பட்டுள்ளது. இதில் 64,426 பேர் குணமடைந்துள்ளனர். குணம் அடைந்தவர்கள் விகிதம் 42.4 சதவீதமாக உள்ளது. மரண விகிதம் 2.86 சதவீதமாக உள்ளது. உலக அளவில் இது 6.36 சதவீதமாக உள்ளது.

கோவிட்-19 நோய்த் தாக்குதல் காலத்தில் கருத்தரித்தல் சிகிச்சை, பேறுகாலச் சிகிச்சை, பிரசவித்த தாய்மார்களுக்கு, குழந்தைகளுக்கு சிகிச்சை, வளர் இளம்பருவ ஆரோக்கியம் + ஊட்டச்சத்துச் சேவைகளை வழங்குவது தொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வழிகாட்டுதல் குறிப்பாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் விவரங்களை பின்வரும் இணையதள சுட்டியில் காணலாம்:

https://www.mohfw.gov.in/pdf/GuidanceNoteonProvisionofessentialRMNCAHNServices24052020.pdf

 

கண்கள் பாதுகாப்புக்கான கண்ணாடிகளை மறு உபயோகத்துக்குத் தயார் செய்தல் தொடர்பாகவும் ஓர் அறிவுறுத்தலை இந்த அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரங்களை பின்வரும் இணையதள சுட்டியில் காணலாம்:

https://www.mohfw.gov.in/pdf/Advisoryonreprocessingandreuseofeyeprotectiongoggles.pdf



(Release ID: 1627257) Visitor Counter : 304