நிதி அமைச்சகம்

புதிய வளர்ச்சி வங்கியின் விசேஷ இயக்குநர்கள் குழு கூட்டத்தில் காணொளி மூலம் திருமதி நிர்மலா சீதாராமன் பங்கேற்பு.

Posted On: 27 MAY 2020 5:55PM by PIB Chennai

புதிய வளர்ச்சி வங்கியின் விசேஷ இயக்குநர்கள் குழு கூட்டத்தில் காணொளி மூலம் இன்று மத்திய நிதி, கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.

வங்கியின் அடுத்த தலைவரைத் தேர்வு செய்தல், துணைத் தலைவர் மற்றும் முதன்மை ஆபத்து வாய்ப்பு நிர்வாக அதிகாரி நியமனம், உறுப்பினர் அந்தஸ்து நீட்டிப்பு ஆகியவை இன்றைய கூட்டத்திற்கான விவாதப் பொருள்களாக இருந்தன.

கட்டமைப்பு மேம்பாட்டுக்கு வங்கி நிதி அளித்ததால், இந்தியா உள்ளிட்ட உறுப்பு நாடுகளில் ஆக்கபூர்வமான தாக்கம் ஏற்பட்டதாக, தனது தொடக்க உரையில் நிதியமைச்சர் பாராட்டு தெரிவித்தார். குறுகிய காலத்தில் உறுப்பு நாடுகளின் 55 திட்டங்களுக்கு 16.6 பில்லியன் டாலர் மதிப்புக்கான பணிகளுக்கு அனுமதி கொடுத்திருப்பது, குறிப்பிடத்தக்க சாதனையாக உள்ளது என்றார் அவர். தனக்கென ஒரு சிறப்பு அந்தஸ்தை வெற்றிகரமாக வங்கி உருவாக்கிக் கொண்டிருப்பதாகவும், எம்.டி.பி.களுடன் இணைந்து பெருமையுடன் தோள் கொடுத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

2014இல் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் முன்வைத்த லட்சிய நோக்கங்களுக்கு, மிக குறுகிய காலத்தில் செயல்வடிவம் தந்தமைக்காக, பதவி விலகிச் செல்லும் தலைவர் திரு கே.வி. காமத்தின், அருமையான பங்களிப்பை நிதியமைச்சர் பாராட்டினார். கோவிட்-19 நோய்த் தாக்குதலுக்கு விரைவாகச் செயல்பட்டு, கோவிட்-19 அவசரகால செயல்திட்டக் கடன் வசதி ஒன்றை உருவாக்கியது, அவருடைய பங்களிப்புகளில் ஒன்றாக நினைவில் வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தலைவர் பதவிக்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரேசிலைச் சேர்ந்த திரு மார்க்கோஸ் டிரோய்ஜோ, துணைத் தலைவர் மற்றும் சி.ஆர்.ஓ.வாக நியமிக்கப்பட்டுள்ள இந்தியாவைச் சேர்ந்த திரு அனில் கிஷோரா ஆகியோருக்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.



(Release ID: 1627238) Visitor Counter : 269