பிரதமர் அலுவலகம்

உம்பன் புயல் தாக்கியதையடுத்து ஏற்பட்ட நிலை குறித்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்.

Posted On: 22 MAY 2020 2:54PM by PIB Chennai

மீண்டும் ஒருமுறை இந்தியாவின் கடற்கரையை, குறிப்பாக கிழக்குப் பிராந்தியத்தை ஒரு புயல் தாக்கியுள்ளது. இது நமது மேற்குவங்கத்தின் சகோதர, சகோதரிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கு, உடைமைகளுக்குப் பெருத்த சேதத்துக்கு காரணமாக அது அமைந்து விட்டது.

புயல் நிலவரம் குறித்து அறிவதற்காக, சம்பந்தப்பட்ட ஒவ்வொருவருடனும் நான் தொடர்பில் இருந்தேன். மத்திய அரசும், மாநில அரசுடன் இடைவிடாத தொடர்பில் இருந்தது. மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து கடினமாகப் பாடுபட்டு, புயலால் ஏற்பட்ட பாதிப்பைக் குறைக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தன. இருந்தபோதிலும், நம்மால் சுமார் 80 பேரின் உயிர்களைக் காப்பாற்ற முடியவில்லை. நாம் அனைவரும் அதற்காக மிகுந்த கவலை கொண்டுள்ளோம். மத்திய அரசு, மாநில அரசு மற்றும் நாம் அனைவரும், தங்களின் அன்புக்குப் பாத்திரமானவர்களின் உயிர்களை இழந்து தவிக்கும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், இந்தத் துயரமான நேரத்தில் அவர்களுக்குப் பக்கபலமாக நாம் அனைவரும் இருப்போம் என்று உறுதியளிக்கிறோம்.

விவசாயம், மின்துறை, தொலைத்தொடர்பு ஆகியவை பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. புயலால் உடைமைகளுக்குப் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு உள்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயம், தொழில்துறை என அனைவரும் பெரும் இழப்பை அடைந்துள்ளனர்.

மாநில ஆளுநர் மற்றும் முதலமைச்சருடன் இன்று பாதிக்கப்பட்ட பகுதிகள் அனைத்தையும் விமானம் மூலம் பார்வையிட்டு நான் ஆய்வு மேற்கொண்டேன். முதல்கட்ட சேத மதிப்பீடு பற்றிய விவரங்களை  முதலமைச்சரும், மாநில அரசும் என்னிடம் அளித்துள்ளனர். புயலால் ஏற்பட்ட சேதத்தை விரிவாக ஆய்வு செய்து மதிப்பிடுவதற்காக கூடிய. விரைவில் மத்தியக்குழுவை அனுப்ப முடிவு செய்துள்ளோம். விவசாயம், மின்துறை, தொலைத்தொடர்புத்துறை, வீடுகள் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் ஏற்பட்ட சேதம் குறித்து இந்தக் குழு ஆய்வு செய்யும்.

உடனடியாக ஒரு குழு மத்திய அரசிடம் இருந்து  வந்து, பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளையும் ஆய்வு செய்யும். அதன்படி, மறுவாழ்வு, சீரமைப்பு, மறுகட்டுமானப் பணிகளை நாம் ஒருங்கிணைந்து மேற்கொள்வோம். இந்த வேதனையான தருணத்தில், விரிவான திட்டத் தயாரிப்பு மூலம், வங்கத்துக்கு நாங்கள் முழு ஆதரவு வழங்குவோம். இதன் மூலம் வங்கம் கூடிய விரைவில் புத்துயிர் பெற வாய்ப்பு ஏற்படும். கூடிய விரைவில் வங்கம் வேகமாக நடைபோட வேண்டும். இதற்காக, மத்திய அரசு மாநில அரசுடன் தோளோடு தோள் சேர்ந்து பணியாற்றும். மேற்கு வங்க மாநிலத்துக்குப் பக்கபலமாக நின்று, ஒவ்வொரு கொள்கையையும், ஒழுங்குமுறையையும் முழுமையாகச் செயல்படுத்துவதற்கான தேவைகளை மத்திய அரசு பூர்த்தி செய்யும். 

நெருக்கடியான இந்த காலகட்டத்தில் மாநில அரசுக்கு உதவ, முதல் கட்டமாக ஆயிரம் கோடி ரூபாயை வழங்க மத்திய அரசு ஏற்பாடு செய்யும். அதேநேரம், புயலில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து நாம் வழங்குவோம்.

உலகம் முழுவதும் பெரும் நெருக்கடியில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவும் கொரோனா தொற்றுக்கு எதிராக உறுதியான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. கொரோனா தொற்று, புயலுக்கு எதிரான போராட்டத்தில் வெல்லும் மந்திரம் ஒன்றுக்கொன்று முழுமையாக எதிரானதாகும்.


கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்ட மந்திரம், வீட்டிலிருந்து வெளியேறாதீர்கள், எங்கே இருக்கின்றீர்களோ அங்கேயே இருங்கள் , தேவை ஏற்படும் வரை வெளியே வரவேண்டாம் என்பதாகும். ஆனால், புயல் மந்திரம், இயன்றவரை பாதுகாப்பான இடத்தில் இருங்கள், பாதுகாப்பான இடத்துக்கு மாறுங்கள், வீடுகளை விட்டுவிட்டு, வெளியேறுங்கள் என்பதாகும். இந்த இரண்டு விதமான போராட்டங்களை மேற்கு வங்கம் ஒரே நேரத்தில் சமாளிக்க வேண்டியுள்ளது.

இருந்தபோதிலும், மம்தாஜி தலைமையிலான மாநில அரசு இயன்றவரை சிறப்பாக செயல்பட்டுள்ளது.  மத்திய அரசும் அவர்களுடன் சேர்ந்து தேவையான முன்னேற்பாடுகள், புயலைச் சமாளிக்க முன்கூட்டியே எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவற்றை எடுத்துள்ளது. மேலும் இனி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

இன்று, நாடு முழுவதும் பெருமைப்படக்கூடிய ராஜா ராம் மோகன்ராயின் பிறந்த நாளாகும். இந்த நேரத்தில், புனிதமான மேற்குவங்க மண்ணில் இருப்பதை எண்ணி, நான் மிகுந்த பெருமிதம் கொள்கிறேன். ஆனால், இன்று நாம் மிகுந்த வேதனையையும், நெருக்கடியையும் சந்தித்து வருகிறோம். எனவே, ராஜா ராம் மோகன்ராயின் அருள் நமக்குக் கிடைக்க வேண்டும் என்று மட்டுமே என்னால் கூறமுடியும். அவரது வாழ்த்துக்கள் மூலம், நாம் ஒன்று சேர்ந்து அமர்ந்து, அவரது  சமூக மாற்றக் கனவுகளை நனவாக்க உறுதி பூணுவோம். வருங்காலத் தலைமுறையின் மேம்பாடு, சிறந்த எதிர்காலம் ஆகியவற்றுக்கான சமூக சீர்திருத்தங்களைக் கொண்டுவரும்  திசையில் நாம் பயணிப்போம். அதுவே, ராஜா ராம் மோகன்ராய்க்கு நாம் செலுத்தும் சிறந்த மரியாதையாகும்.

இந்த நெருக்கடியான சூழலில், நாடு முழுவதும் உங்களுக்கு உறுதுணையாக நிற்கிறது என்று மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளுக்கு நான் உறுதி அளிக்கிறேன். ஒவ்வொரு பணியிலும், மத்திய அரசு உங்களோடு தோளோடு தோள் சேர்ந்து பாடுபடும். இந்த சிக்கலான நிலையில் நான் உங்களைச் சந்திக்க வந்துள்ளேன். கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக, என்னால் அனைத்து மக்களையும் சந்திக்க இயலவில்லை. இது எனது மனதில் வருத்தமாக உள்ளது. இங்கிருந்து நான் இன்று ஒடிசாவுக்கு சென்று, விமானத்தில் பாதிப்புகளைப் பார்வையிட உள்ளேன். நான் அந்த மாநில முதலமைச்சருடனும், மாநில அரசுடனும் பேச உள்ளேன்.

மேற்கு வங்கத்தின் இந்த சோதனையான காலத்தில் நான் உங்களுடன் இருப்பேன் என்று மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் வெகு விரைவில் இந்த நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதற்கு ஏற்ற வகையில், நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன்.

நன்றிகள் பல.



(Release ID: 1626755) Visitor Counter : 198