நிதி அமைச்சகம்
ஆத்ம நிர்பார் பாரத் அபியானின் (சுய-சார்பு இந்தியா) கீழ் ஏழு துறைகளில் அரசு சீர்த்திருத்தங்கள் மற்றும் செயல்பாடுகளை நிதி அமைச்சர் அறிவித்தார்.
Posted On:
17 MAY 2020 3:11PM by PIB Chennai
முக்கிய அம்சங்கள்:
* வேலைவாய்ப்பைப் பெருக்குவதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டில் ரூ 40,000 கோடி அதிகரிப்பு.
* வருங்கால பெருந்தொற்றுகளுக்கு இந்தியாவைத் தயார்படுத்தும் வகையில் பொது சுகாதாரத்தில் முதலீடுகள் அதிகரிப்பு மற்றும் இதர சுகாதாரச் சீர்திருத்தங்கள்.
* கொவிட்டுக்குப் பிறகு தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் நியாயமான கல்வி.
* திவால் மற்றும் நொடித்தல் குறியீடு சார்ந்த நடவடிக்கைகள் மூலம் தொழில் செய்வதை சுலபமாக்குவது மேலும் அதிகரிப்பு.
* நிறுவனங்கள் சட்டத்தின் வழுவுதல்களை குற்றமற்றதாக்குதல்.
* பெரு நிறுவனங்கள் தொழில் செய்வதை சுலபமாக்குதல்.
* புதிய, சுய-சார்பான இந்தியாவுக்காக பொதுத் துறை நிறுவனங்கள் கொள்கை.
* 2020-21க்கு மட்டும் மாநிலங்களின் கடன் வாங்கும் அளவை மூன்று சதவீதத்தில் இருந்து ஐந்து சதவீதமாக அதிகரித்தல், மாநில அளவிலான சீர்திருத்தங்களை ஊக்குவித்தல்
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்துக்கு சமமான ரூ 20 லட்சம் கோடி மதிப்பில் விரிவான சிறப்புப் பொருளாதாரத் தொகுப்பை பிரதமர் திரு. நரேந்திர மோடி 12 மே, 2020 அன்று அறிவித்தார். ஆத்ம நிர்பார் பாரத் அபியான் எனப்படும் சுய-சார்பான இந்தியா இயக்கத்துக்கு அவர் அறைகூவல் விடுத்தார். பொருளாதாரம், உள்கட்டமைப்பு, அமைப்பு, துடிப்பான மக்கள் மற்றும் தேவை ஆகிய சுய-சார்பான இந்தியாவின் ஐந்து தூண்களையும் அவர் குறிப்பிட்டார்.
ஆத்ம நிர்பார் பாரத் அபியானின் கீழ் கொவிட்-19ஐ எதிர்த்துப் போரடுவதற்கான நிவாரணத் தொகுப்பு குறித்து இன்று நடைபெற்ற ஐந்தாவது பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய மத்திய நிதி, பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர், திருமதி. நிர்மலா சீதாராமன், பிரதமர் திரு. நரேந்திர மோடி 12 மே, 2020 அன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் வகுத்த லட்சியங்களைப் பற்றி தனது முன்னுரையில் குறிப்பிட்டார். பிரதமர் பேசியதை நினைவு கூர்ந்த திருமதி. நிர்மலா சீதாராமன், ஒரு நாடாக நாம் முக்கியமானதொரு காலகட்டத்தில் இருக்கிறோம் என்று கூறினார். கொவிட்-19 பெருந்தொற்று ஒரு செய்தியையும், வாய்ப்பையும் வழங்கியுள்ளது. நாம் தற்போது சுய-சார்பான இந்தியாவைக் கட்டமைக்க வேண்டும்.
சுய-சார்பான இந்தியாவுக்கான சபதத்தை உண்மையாக்க, நிலம், தொழிலாளர், நிதி ஓட்டம் மற்றும் சட்டங்கள் ஆகிய அனைத்தும் சுய-சார்பான இந்தியா தொகுப்பில் இடம்பெற்றுள்ளதாக திருமதி. நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.நெருக்கடியும், சவாலும் சுய-சார்பான இந்தியாவைக் கட்டமைக்க ஒரு வாய்ப்பு ஆகும்.
தொடர் சீர்த்திருத்தங்களின் ஒரு பகுதியே இன்றைய அறிவிப்பு என்று நிதி அமைச்சர் கூறினார். பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டவுடன், நாம் பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வுத் திட்டத்தை அறிவித்தோம். ரூ 1.70 லட்சம் கோடி மதிப்புடைய பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, பெண்கள், ஏழ்மையில் இருக்கும் மூத்த குடிமக்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்டவர்களுக்காக இலவச உணவு தானிய விநியோகம் மற்றும் நிதி நிவாரணம் ஆகியவற்றை அரசு அறிவித்தது. இந்தத் தொகுப்பு சிறப்பாக செயல்படுத்தப்படுவது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. ரூ 52,608 கோடி மதிப்புடைய நிதி உதவியை பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் சுமார் 41 கோடி ஏழை மக்கள் பெற்றனர். பலன் மக்களை நேரடியாக சென்றடைவதற்காக பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வுத் திட்டம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதாக நிதி அமைச்சர் தெரிவித்தார். கடந்த சில வருடங்களாக எடுக்கப்பட்ட முயற்சிகளின் பலனாக எங்களால் இதைச் செய்ய முடிந்தது என்று அவர் மேலும் கூறினார்.
கூடுதலாக, 84 லட்சம் மெட்ரிக் டன்கள் உணவு தானியங்கள் மாநிலங்களால் எடுத்து செல்லப்பட்ட நிலையில், 3.5 லட்சம் மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான பருப்புகள் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டன. இதற்காக, இந்திய உணவுக் கழகம், தேசிய வேளாண்மை கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு, போக்குவரத்து சவால்களுக்கு மத்தியிலும் பருப்புகள் மற்றும் உணவு தானியங்களை அதிக அளவில் வழங்கியதற்காக மாநிலங்களையும் திருமதி. நிர்மலா சீதாராமன் பாராட்டினார்.
அரசு சீர்த்திருத்தங்கள் மற்றும் செயல்பாடுகளின் ஐந்தாம் மற்றும் கடைசித் தொகுப்பை அறிவித்த திருமதி. நிர்மலா சீதாராமன், வேலைவாய்ப்பை அளிப்பதற்கும், தொழில்களுக்கு ஆதரவளிப்பதற்கும், தொழில் செய்வதை சுலபமாக்குவதற்கும், மாநில அரசுகளுக்கும் மற்றும் கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளுக்கும் ஏழு நடவடிக்கைகளை விவரித்தார்.
1.வேலைவாய்ப்பைப் பெருக்குவதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டில் ரூ 40,000 கோடி அதிகரிப்பு.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டில் ரூ 40,000 கோடியை அரசு தற்போது அதிகரிக்கும். பருவமழைக் காலத்தில் ஊர் திரும்பும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உட்பட, அதிக வேலைக்கான தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் 300 கோடி மனித உழைப்பு நாள்களை உருவாக்க இது உதவும். நீர் சேமிப்பு வளங்கள் உட்பட நீடித்து நிலைக்கும் வாழ்வாதார வளங்களை அதிக அளவில் உருவாக்குவதால், அதிகரிக்கும் உற்பத்தியின் மூலம் ஊரக பொருளாதாரத்தை இது ஊக்குவிக்கும்.
2. சுகாதார சீர்திருத்தங்களும், நடவடிக்கைகளும்
அடித்தள சுகாதார நிறுவனங்களில் முதலீடுகள் செய்வதன் மூலமும், கிராமப்புற மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் சுகாதார மற்றும் நல மையங்களை அதிகரிப்பதன் மூலமும் சுகாதாரத்தின் மீதான பொது செலவினங்கள் அதிகரிக்கப்படும். தொற்று நோய் மருத்துவமனை வளாகங்கள் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்படும். அனைத்து மாவட்டங்கள், வட்டார அளவில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகங்கள் மூலம் ஆய்வக வலைப்பின்னல் மற்றும் கண்காணிப்பு வலுப்படுத்தப்படும். பெருந்தொற்றுகளைக் கையாள ஆய்வகங்களும், பொது சுகாதார மையங்களும் அமைக்கப்படும். மேலும், ஒருங்கிணைந்த சுகாதாரத்துக்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் மூலம் தேசிய நிறுவன தளம் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும். தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கத்தின் கீழ் தேசிய டிஜிட்டல் சுகாதார மாதிரி செயல்படுத்தப்படும்.
3. கொவிட்டுக்குப் பிறகு தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் நியாயமான கல்வி.
டிஜிட்டல்/இணைய வழிக் கல்விக்கான பலக்கூறு அனுமதியை வழங்கும் திட்டமான பிரதமரின் மின் கல்வி (PM eVIDYA) உடனடியாகத் தொடங்கப்படும். மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் குடும்பங்களுக்கான மன நல மற்றும் உணர்வுசார் நல்வாழ்வுக்கான உளவியல்-சமூக ஆதரவை வழங்கும் முயற்சியான மனோதர்பனும் உடனடியாகத் தொடங்கப்படும். பள்ளி, ஆரம்பக் குழந்தைப் பருவம் மற்றும் ஆசிரியர்களுக்கான புதிய தேசியப் பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் கட்டமைப்பும் அறிமுகப்படுத்தப்படும். 2025க்குள் அனைத்துக் குழந்தைகளும் ஐந்தாம் வகுப்பில் கற்றல் அளவுகள் மற்றும் வெளிப்படுத்தல்களை அடைவதை உறுதி செய்யும் தேசிய அடிப்படைக் கல்வி மற்றும் எண்ணறிவு இயக்கம் டிசம்பர் 2020க்குள் தொடங்கப்படும்.
4. திவால் மற்றும் நொடித்தல் குறியீடு சார்ந்த நடவடிக்கைகள் மூலம் தொழில் செய்வதை சுலபமாக்குவது மேலும் அதிகரிப்பு.
திவால் நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கான குறைந்தபட்ச அளவு ஒரு கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது (முன்னர் இது ஒரு லட்சமாக இருந்தது, இந்த நடவடிக்கை குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களைப் பாதுகாக்கும்). குறியீட்டின் 240ஏ பிரிவின் கீழ் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான சிறப்பு திவால் தீர்வுக் கட்டமைப்பு விரைவில் அறிவிக்கப்படும்.
பெரும்தொற்றின் நிலைமையைப் பொருத்து, புதிய திவால் நடவடிக்கைகள் ஒரு வருடம் வரை ஒத்தி வைக்கப்படும். திவால் நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு குறியீட்டில் உள்ள "திவால்" என்பதற்கான விளக்கத்தில் இருந்து கொவிட்-19 தொடர்பான கடனை விலக்கி வைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது.
5. நிறுவனங்கள் சட்டத்தின் வழுவுதல்களைக் குற்றமற்றதாக்குதல்
பெருநிறுவன சமூகக் கடமைகளைப் பற்றிய தகவல் அறிக்கையில் குறைபாடுகள், இயக்குநர்கள் குழு தகவல் அறிக்கையில் போதாமை, வழுவுதல்களைத் தாக்கல் செய்தல், ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டம் நடத்துவதில் தாமதம் போன்ற சிறிய தொழில்நுட்ப மற்றும் செயல்முறை வழுவுதல்களை நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் குற்றமற்றதாக்குதல். குற்றவியல் நீதிமன்றங்கள் மற்றும் தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்தின் சுமைகளை இந்த சட்டத் திருத்தங்கள் குறைக்கும். இசைந்துத் தீர்க்கக்கூடிய ஏழு குற்றங்கள் மொத்தமாக கைவிடப்பட்டன. ஐந்து வகையான குற்றங்கள், மாற்றுக் கட்டமைப்பின் கீழ் கையாளப்படும்.
6. பெரு நிறுவனங்களுக்குத் தொழில் செய்வதை சுலபமாக்குதல்
முக்கிய சீர்த்திருத்தங்கள் வருமாறு:
* இந்தியப் பொது நிறுவனங்களால் அனுமதிக்கப்படும் வெளிநாட்டு நிதிப் பரிபாலன எல்லைக்குள் செக்யூரிட்டிகளை நேரடியாகப் பட்டியலிடுதல்.
* பங்குப் பரிவர்த்தனை மையங்களில் Non-convertible debentures - NCDக்களில் பட்டியலிடும் தனியார் நிறுவனங்கள், பட்டியலிடப்பட்ட நிறுவனங்களாக எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.
* கம்பெனிகள் சட்டம், 2013-இல் கம்பெனிகள் சட்டம், 1956 Part IXA (உற்பத்தி நிறுவனங்கள்) அம்சம் சேர்ப்பு.
* தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் சிறப்பு அமர்வுகளைக் கூடுதலாக உருவாக்கும் அதிகாரம்.
* சிறிய நிறுவனங்கள், ஒரு நபர் நிறுவனங்கள், உற்பத்தி நிறுவனங்கள், புது நிறுவனங்களின் (ஸ்டார்ட் அப்) அனைத்து தவணைத் தவறுதல்களுக்கும் குறைவான அபராதங்கள்.
7. புதிய, சுய-சார்பான இந்தியாவுக்காக பொதுத்துறை நிறுவனங்கள் கொள்கை .
அரசு புதிய கொள்கை ஒன்றை அறிவிக்கும். இதில்:
* பொதுநலன் கருதி பொதுத்துறை நிறுவனங்கள் நடத்தும் முக்கியத்துவம் வாய்ந்த துறைகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்.
* முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில், குறைந்தபட்சம் ஒரு நிறுவனம், பொதுத்துறையின் கீழ் இருக்கும். ஆனால், தனியார் துறையினரும் அனுமதிக்கப்படுவார்கள்.
* மற்ற துறைகளில், பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும் (வாய்ப்புகள் போன்றவற்றின் அடிப்படையில் செயல்படுத்துவதற்கான காலம் இருக்கும்).
* தேவையில்லாத நிர்வாகச் செலவுகளைக் குறைக்கும் வகையில், முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் உள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை ஒன்று முதல் நான்கு வரை இருக்கும்; மற்றவை தனியார்மயமாக்கப்படும்/இணைக்கப்படும்/மற்ற நிறுவனங்களின் கீழ் கொண்டுவரப்படும்.
8. மாநில அரசுகளுக்கு ஆதரவு:
2020-21ஆம் ஆண்டுக்கு மட்டும், மாநிலங்களின் கடன் வாங்கும் அளவை மூன்று சதவீதத்தில் இருந்து ஐந்து சதவீதமாக அதிகரிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. ரூ 4.28 லட்சம் கோடி கூடுதல் நிதியை இது மாநிலங்களுக்கு வழங்கும். கடன் வாங்குதலில் ஒரு பகுதி குறிப்பிட்ட சீர்திருத்தங்களுடன் இணைக்கப்படும் (நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் உட்பட). "ஒரே தேசம், ஒரே குடும்ப அட்டையை" நாடு முழுவதும் அமல்படுத்துதல், தொழில் செய்வதை சுலபமாக்குதல், மின்சார விநியோகம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் வருவாய் ஆகிய நான்கு துறைகளில் சீர்திருத்த இணைப்பு இருக்கும்.
செலவினங்கள் துறையால் கீழ்கண்ட முறையில் ஒரு குறிப்பிட்டத் திட்டம் அறிவிக்கப்படும்:
* 0.50 சதவீதம் நிபந்தனைகளற்ற அதிகரிப்பு.
* 0.25 சதவீதத்தின் நான்கு பகுதிகளில் 1 சதவீதம், இதில் ஒவ்வொரு பகுதியும் தெளிவாகக் குறிப்பிடப்பட்ட, அளவிடக்கூடிய மற்றும் செயல்படுத்தக்கூடிய சீர்திருத்த நடவடிக்கைகளோடு இணைக்கப்பட்டிருக்கும்.
* நான்கு சீர்திருத்தத் துறைகளில் குறைந்தபட்சம் மூன்றிலாவது மைல்கற்கள் அடையப்பட்டிருந்தால் மேற்கொண்டு 50 சதவீதம்.
சுய-சார்பு இந்தியாவாக உருவாவதற்கு இது வரை அறிவிக்கப்பட்டுள்ள ஊக்கப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்த விரிவான விவரங்களை வெளியிட்டு நிதி அமைச்சர் தனது உரையை நிறைவு செய்தார்.
***
(Release ID: 1624748)
Visitor Counter : 4830
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam