சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கோவிட்-19 தொற்று குறித்த அமைச்சர்கள் குழுவின் 15-வது கூட்டம்; தற்போதைய நிலவரம், மேலாண்மைக்கான முன்னேற்பாடுகள் நடவடிக்கைகள் பற்றி ஆய்வு
Posted On:
15 MAY 2020 3:29PM by PIB Chennai
கோவிட்-19 தொற்று குறித்த உயர் மட்ட அமைச்சர்கள் குழுவின் 15-வது கூட்டம் புதுதில்லி நிர்மாண் பவனில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர். ஹர்ஷவர்தன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் திரு. ஹர்தீப் சிங் பூரி, வெளியுறவு அமைச்சர் டாக்டர். ஜெய்சங்கர், உள்துறை இணையமைச்சர் திரு. நித்யானந்த ராய், கப்பல் துறை மற்றும் ரசாயனம், உரத்துறை இணையமைச்சர் திரு. மான்சுக் மாண்டவியா, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திரு. அஷ்வினி குமார் சவுபே ஆகியோருடன் பாதுகாப்பு படை தலைமை தளபதி திரு பிபின் ராவத் கலந்து கொண்டார்.
இந்தியா உள்பட உலகம் முழுவதிலும், கோவிட்-19 தொற்று பரவல், பாதிக்கப்பட்டவர்களின் தற்போதைய நிலை குறித்த விளக்கக் காட்சி கூட்டத்தில் விரிவாக வெளியிடப்பட்டது. உலக அளவில் மொத்தம் 42,48,389 பேர் கோவிட்-19 தொற்று நோய்க்கு ஆளாகியுள்ளனர். அதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,94,046. இறப்பு விகிதம் 6.92%. அதேசமயம் இந்தியாவில் தொற்று நோயால் 81,970 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,649 பேர் உயிரிழந்துள்ளனர். இறப்பு விகிதம் 3.23% மட்டுமே. இதுவரை, மொத்தம் 27,920 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தைப் பார்க்கும் போது 1,685 பேர் குணமடைந்துள்ளனர். இதையும் சேர்த்து, குணமடைந்தவர்களின் விகிதம் 34.06% ஆக உள்ளது. பொது முடக்கத்தின் பயனாக, அது தொடங்கிய வாரத்தில் 3.4 நாட்களாக இருந்த நோய்த்தொற்று இரு மடங்கானது. இது கடந்த வாரம் 12.9 நாட்களாக முன்னேற்றம் கண்டுள்ளது குறிப்பிடப்பட்டது.
கோவிட்-19 தொற்று பரவாமல் கட்டுப்படுத்தல் மற்றும் மேலாண்மை அம்சங்களுடன், மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் குழு மிக ஆழமாக விவாதித்தது. இந்தியாவில் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 79% பேர் 30 நகர்ப்புறப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அமைச்சர்கள் குழுவிடம் தெரிவிக்கப்பட்டது. அதிக எண்ணிக்கையில் நோய்த் தொற்று உறுதி செய்யபட்ட மற்றும் அதிகம் பேர் உயிரிழந்த மாநிலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய கோவிட்-19 மேலாண்மை உத்திகள் பற்றி கவனம் செலுத்துவது அவசியம் என அமைச்சர்கள் குழு விவாதித்தது. சிகிச்சை மற்றும் இறப்பு மேலாண்மை விஷயத்தில், உரிய நேர நோய் கண்டுபிடிப்பு மற்றும் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிவது சிறந்த வழி என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களால் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்தும் அமைச்சர்கள் குழு விவாதித்தது.
--------------------
(Release ID: 1624375)
Visitor Counter : 210