சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

32-வது காமன்வெல்த் சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தில் காணொளிக் காட்சி மூலம் டாக்டர் ஹர்ஷவர்தன் பங்கேற்பு

Posted On: 14 MAY 2020 6:36PM by PIB Chennai

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் புதுதில்லியில் வியாழனன்று, 32-வது காமன்வெல்த் நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தில் காணொளி மூலம் கலந்து கொண்டார். கொவிட்-19க்கு எதிராக ஒருங்கிணைந்த காமன்வெல்த் செயல்பாடு என்பது கூட்டத்தின் கருப்பொருளாகும்.

இந்த சர்வதேசக் கூட்டத்தில் மத்திய சுகாதார அமைச்சர் அளித்த அறிக்கையின் சாரம் வருமாறு;

‘’கொவிட்-19க்கு எதிரான காமன்வெல்த் நாடுகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கை குறித்த கூட்டத்தின்  தொடக்கமாக, கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், கவலையையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பதில் மிகப்பெரிய பங்களிப்பை நல்கி வரும் எண்ணற்ற முன்களச் சுகாதாரச் சேவையாளர்கள் மற்றும் குடிமை அமைப்புகளின் மகத்தான சேவைகள் பாராட்டத்தக்கவையாகும்.

நுழைவு முனையங்களில் கண்காணிப்பு, வெளிநாடுகளில் இருந்த நம் நாட்டினரை அழைத்து வந்தது, நோய்க் கண்காணிப்புக் கட்டமைப்பு மூலம் சமுதாயக் கண்காணிப்பு, சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல்சுகாதாரப் பணியாளர்களுக்கு பயிற்சி மற்றும் திறன் உருவாக்குதல், அபாயத் தகவல் மற்றும் சமூக ஈடுபாடு உள்பட இந்தியா அதன் மேலாண்மை முயற்சிகளின் பகுதியாக அனைத்து தேவையான நடவடிக்கைகளையும் உரிய நேரத்தில் செய்துள்ளது.

பொருளாதார மீளுருவாக்கம் மற்றும் பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு உதவும் வகையில், எங்கள் பிரதமர் 265 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக பொருளாதாரச் சலுகைகளை அறிவித்துள்ளார். குறிப்பாக நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த இயன்ற பகுதிகளில் நாங்கள் கட்டுப்பாடுகளைப் படிப்படியாகத் தளர்த்தி வருகிறோம்.

கொவிட்-19 சவாலை முறியடிக்க உலக அளவிலான ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை என முதலில் வலியுறுத்திய நாடு இந்தியாஎங்கள் பிராந்தியத்தில், சார்க் தலைவர்களின் கூட்டத்தை மார்ச் மாத நடுப்பகுதியில் கூட்டி, ‘’ தனியாக வளராமல், ஒன்று சேர்தல், குழப்பமற்ற ஒத்துழைப்பு, பீதியற்ற தயார் நிலை’’ தேவை என்பதை வலியுறுத்தினோம். இந்த நெருக்கடியான சூழலில் இந்தியாவின் முயற்சிகளுக்கு இவை சான்றாகும்.

இந்த நெருக்கடியான நேரத்தில், ஹைட்ராக்சி குளோரோகுயின் போன்ற அத்தியாவசிய மருந்துகளைத் தேவைப்பட்ட சுமார் 100 நாடுகளுக்கு இந்தியா வழங்கியதுடன், ஒத்துழைப்பையும் ஆதரவையும் அளித்துள்ளது

இந்திய அரசின் ஆதரவுடன், இந்திய விஞ்ஞானிகள் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிப்பு முயற்சிகளுடன் நில்லாமல், நோய் கண்டறியும் குறைந்த விலை உபகரணங்கள், பல்வேறு உயிர்காக்கும் உபகரணங்களை உருவாக்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

பரஸ்பர ஆதரவு மற்றும் நமது சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வது அவசியமாகும். கொவிட்டுக்கு பிந்தைய காலகட்டத்தில் புதிய அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்ள புதுமையான வழிமுறை வாய்ப்புகளைக் கண்டறிய வேண்டும்’’.

 

****



(Release ID: 1624079) Visitor Counter : 196