பிரதமர் அலுவலகம்

நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை

Posted On: 12 MAY 2020 10:14PM by PIB Chennai

நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக கொரோனா வைரஸுக்கு எதிராக உலக சமூகமே போராடி வருகிறது. இந்த காலகட்டத்தில், உலகம் முழுவதும் 42 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள், கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர். 2.75 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் கூட, மக்கள், தங்களுக்கு நெருக்கமானவர்களை இழந்துள்ளனர். அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே, ஒரு வைரஸ் உலகத்தையே அழித்துள்ளது. உலகத்தை சுற்றிலும் கோடிக்கணக்கான மக்கள் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். மதிப்புமிகுந்த உயிர்களைக் காப்பதற்காக உலகம் முழுவதிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதுபோன்ற ஒரு நெருக்கடியை நாம் பார்த்ததோ அல்லது கேள்விப்பட்டதோ இல்லை. இந்த நெருக்கடி சிந்தித்துப் பார்க்க முடியாதது மட்டுமன்றி, மனித சமூகம் இதுவரை சந்திக்காதது.

   
இருந்தாலும், எரிச்சலடைவதோ, தைரியத்தை இழப்பதோ அல்லது நொறுங்கிப் போவதோ மனித சமூகத்துக்கு ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. நாம் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும். இதனை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். இதுபோன்ற போர்களில் விதிகளைப் பின்பற்றி, நம்மை பாதுகாத்துக் கொண்டு, முன்னோக்கிச் செல்ல வேண்டும். இன்று, உலகமே நெருக்கடியில் இருக்கும் நிலையில், நாம் நமது தீர்மானத்தை உறுதிப்படுத்த வேண்டும். நமது உறுதியான தீர்மானம், இந்த நெருக்கடியிலிருந்து மீண்டுவர உதவும்.

நண்பர்களே, 21-ம் நூற்றாண்டு இந்தியாவுக்கானது என்று கடந்த நூற்றாண்டு முதலே நாம் கேள்விப்பட்டு வருகிறோம். கொரோனாவுக்கு முன்பு உலகம் எவ்வாறு இருந்தது, உலக அமைப்பு எவ்வாறு இருந்தது என்பதை நாம் விரிவாகப் பார்த்துள்ளோம். கொரோனா நெருக்கடிக்குப் பிறகும் கூட, உலகம் முழுவதிலும் ஏற்படும் மாற்றங்களை தொடர்ந்து நாம் பார்த்து வருகிறோம். இந்த இரண்டு காலகட்டத்தையும், இந்தியாவின் கண்ணோட்டத்தில் நாம் பார்த்தால், 21-ம் நூற்றாண்டு என்பது இந்தியாவுக்கான நூற்றாண்டு என்பது தெரியவரும். இது நமது கனவு அல்ல. மாறாக, நம் அனைவருக்குமான பொறுப்பு.  

ஆனால், இதன் பாதை எவ்வாறு இருக்கும்?

“சுயசார்புடைய இந்தியா” என்பதுதான் ஒரே வழி என்று உலகின் தற்போதைய நிலை, நமக்கு கற்றுக் கொடுக்கிறது. நமது புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நாட்டுக்கான பாதை என்பது தன்னிறைவு பெற்ற இந்தியா.

நண்பர்களே,

நாடு என்ற முறையில் இன்று நாம் மிகவும் முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம். இதுபோன்ற மிகப்பெரும் பேரிடர், இந்தியாவுக்கான சமிக்ஞை. இது செய்தியையும், வாய்ப்பையும் கொண்டுவந்துள்ளது. இதனை என்னுடைய கண்ணோட்டத்தில் ஓர் உதாரணத்துடன் பகிர்ந்துகொள்கிறேன். கொரோனா நெருக்கடி தொடங்கியபோது, இந்தியாவில் தனிநபர் பாதுகாப்பு கவசங்கள் ஒன்று கூட தயாரிக்கப்படவில்லை. என்-95 வகை முகக்கவசங்கள், மிகவும் குறைந்த அளவிலேயே தயாரிக்கப்பட்டன. இன்று நாள்தோறும் 2 லட்சம் தனிநபர் பாதுகாப்பு கவசங்கள் மற்றும் 2 லட்சம் என்-95 முகக்கவசங்கள் தயாரிக்கும் நிலைக்கு வந்துள்ளோம். இதனை நாம் செய்ய முடிந்ததற்கு காரணம், இந்த நெருக்கடியை ஒரு வாய்ப்பாக இந்தியா மாற்றியதுதான்.

நெருக்கடியை வாய்ப்பாக மாற்றிக் கொள்வது என்ற இந்தியாவின் இலக்கு, சுயசார்பு இந்தியா என்ற நமது தீர்மானம் சிறந்தது என்பதை நிரூபிக்கும்.

நண்பர்களே,

சுயசார்பு என்ற வார்த்தையின் அர்த்தம் இன்று, உலக சூழ்நிலையில் மாறியுள்ளது. மனிதர்களை அடிப்படையாகக் கொண்ட உலகமயமாக்கலா, பொருளாதாரத்தை மையமாகக் கொண்ட உலகமயமாக்கலா என்ற விவாதம் நடைபெற்று வருகிறது. இந்தியாவின் அடிப்படை சிந்தனை, உலகுக்கு நம்பிக்கை கீற்றுகளை வழங்குகிறது. இந்தியாவின் கலாச்சாரமும், பாரம்பரியமும் சுயசார்பு குறித்து பேசுகின்றன. அதன் ஆன்மா என்பது உலகம் ஒரே குடும்பம் என்பதாக உள்ளது.

சுயசார்பு என்று வரும்போது, சுயநலத்தை அடிப்படையாகக் கொண்ட செயல்பாடுகளை இந்தியா வலியுறுத்துவதில்லை. உலகின் மகிழ்ச்சி, ஒத்துழைப்பு, அமைதி ஆகியவற்றுடன் இந்தியாவின் சுயசார்பு ஆழமாக வேரூன்றியுள்ளது.

இது உலகில் உள்ள அனைத்து உயிரினங்களின் நலன் மீது நம்பிக்கை கொண்ட கலாச்சாரம். ஒட்டுமொத்த உலகமும் ஒரே குடும்பம் என்று கருதுகிறது. இதன் முகவுரை  பூமியை தனது தாயாக கருதும் கலாச்சாரம். மேலும், இந்தியா, தன்னிறைவு பெறும்போது, வளமான உலகுக்கான வாய்ப்புகளை உறுதிப்படுத்தும். இந்தியாவின் வளர்ச்சி என்பது எப்போதுமே, உலகின் வளர்ச்சியுடன் ஒருங்கிணைந்து உள்ளது.

இந்தியாவின் இலக்குகளும், செயல்பாடுகளும் உலக நலனில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. திறந்தவெளி மலக்கழிப்பிடம் இல்லாத நிலையை இந்தியா எட்டும்போது, உலகின் மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. காசநோய், ஊட்டச்சத்து குறைபாடு, போலியோ போன்றவற்றில் இந்தியாவின் நடவடிக்கைகள், உலகில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

புவி வெப்பமயமாதலுக்கு எதிரான இந்தியாவின் பரிசாக சர்வதேச சூரிய கூட்டமைப்பு அமைந்துள்ளது. சர்வதேச யோகா தின முயற்சிகள், மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கான இந்தியாவின் பரிசு. உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் மக்களுக்கு இந்திய மருந்துகள், புதிய வாழ்க்கையை கொடுத்துள்ளன.

இந்த நடவடிக்கைகள் இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்துள்ளன. இது ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்பட வைத்துள்ளது. மனித சமூகத்தின் நலனுக்காக மிகவும் சிறப்பான செயல்களை  இந்தியாவால் வழங்க முடியும், சிறப்பாக செயல்பட முடியும் என்று உலகம் நம்பத் தொடங்கியுள்ளது.

இதில் எழும் கேள்வி எப்படி? என்பதுதான்

இந்த கேள்விக்கான பதில் – சுயசார்புடன் கூடிய இந்தியாவுக்கான 130 கோடி மக்களின் ஒருங்கிணைந்த தீர்மானம்

நண்பர்களே,

நம்மிடம் பெருமைப்படும் வகையில், பல நூற்றாண்டு வரலாறு உள்ளது. இந்தியா வளமாக இருந்தபோதெல்லாம், இது தங்க முட்டையிடும் வாத்து என்று அழைக்கப்பட்டது. இந்தியா வளமடைந்தபோது, எப்போதுமே உலகின் நலனுக்காக தலைநிமிர்ந்து நடைபோட்டுள்ளது.

பின்னர் காலம் மாறியது. அடிமைச்சங்கிலியில் நாடு சிக்கிக் கொண்டது. வளர்ச்சிக்காக போராடினோம். இன்று இந்தியா தனது வளர்ச்சியில் வேகமாக நடைபோட்டு வருகிறது. இன்னும் உலக நலன் என்ற இலக்கில் உறுதியுடன் திகழ்கிறது. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில், ஒய் டு கே பிரச்சினை வந்தபோது, இந்த நெருக்கடியிலிருந்து உலகையே இந்தியாவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் மீட்டதை நினைவில் கொள்ளுங்கள். இன்று நம்மிடம் வளங்கள் உள்ளன, நம்மிடம் சக்தி உள்ளது, உலகின் தலைசிறந்த திறமையாளர்களைப்  பெற்றுள்ளோம்.

சிறந்த பொருட்களை நாம் தயாரிப்போம். நமது தரத்தை மேலும் மேம்படுத்துவோம். விநியோக கட்டமைப்பை மேலும் நவீனமாக்குவோம். நம்மால் இதனை செய்ய முடியும், நிச்சயம் செய்வோம்.

நண்பர்களே,

கட்ச் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை நான் பார்த்துள்ளேன். எந்தப் பகுதியில் பார்த்தாலும் சேதங்களே தோன்றின. அனைத்துமே அழிந்துவிட்டன. இறப்பு என்ற படுக்கையை அணிந்துகொண்டு, கட்ச் பகுதி தூங்கிவிட்டதோ என்று தோன்றியது. அப்போது, நிலைமை மாறும் என்று யாரும் யூகித்திருக்க மாட்டார்கள். இருந்தாலும், கட்ச் பகுதி மக்கள் எழுந்து நின்றார்கள், கட்ச் பகுதி நகரத் தொடங்கியது, நகர்ந்தது. இதுவே நாம் இந்தியர்கள் என்ற மனஉறுதி மற்றும் தீர்மானம்.

நாம் தீர்மானமாக இருந்தால், நமது இலக்குகளை நம்மால் அடைய முடியும். எந்தப் பாதையும் சிரமமாக இருக்காது. இன்று உறுதியுடன் இருந்தால், வழிபிறக்கும். இதுவே இந்தியாவை சுயசார்பு கொண்டதாக மாற்றும். இந்தியாவால் தன்னிறைவு பெற்றதாக மாற முடியும் என்ற நமது ஒருங்கிணைந்த தீர்மானம் வலுவாக உள்ளது.

நண்பர்களே, சுயசார்பு கொண்ட இந்தியா என்ற இந்த அற்புதமான கட்டமைப்பு, ஐந்து தூண்களால் நிலைத்து நிற்கும்.

முதலாவது தூண் பொருளாதாரம், ஒரு பொருளாதாரத்தால் படிப்படியான மாற்றத்தைவிட, மிகப்பெரும் மாற்றத்தை கொண்டுவர முடியும்.

இரண்டாவது தூண் கட்டமைப்பு, நவீன இந்தியாவின் அடையாளமாக கட்டமைப்பு மாறியுள்ளது.

மூன்றாவது தூண் நமது அமைப்புமுறை. தொழில்நுட்பத்தால் இயங்கும் அமைப்புமுறையால், 21-ம் நூற்றாண்டின் கனவை நிறைவேற்ற முடியும்; கடந்த நூற்றாண்டின் கொள்கைகள் அடிப்படையில் அமைப்புமுறை இருக்கக் கூடாது.

நான்காவது தூண் நமது மக்கள்தொகை. நமது துடிப்பான மக்கள்தொகையே, உலகின் மிகப்பெரும் ஜனநாயகமான இந்தியாவின் பலமாக உள்ளது. சுயசார்புடன் கூடிய இந்தியாவுக்கான நமது சக்தியின் ஆதாரமாக உள்ளது.

ஐந்தாவது தூண் தேவை. நமது பொருளாதாரத்தில் உள்ள தேவை மற்றும் விநியோக கட்டமைப்பின் சுழற்சியே நமது பலம். இதன் முழு திறனையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். நாட்டில் தேவையை அதிகரிப்பதுடன், அதனை எதிர்கொள்ளவும், நமது விநியோக சங்கிலியில் தொடர்புடைய ஒவ்வொருவரையும் மேம்படுத்த வேண்டும். நமது விநியோக முறை மண்ணின் மனம் மற்றும் நமது தொழிலாளர்களின் வியர்வையால் கட்டமைக்கப்பட்டது. நமது விநியோக சங்கிலியை வலுப்படுத்துவோம்.

நண்பர்களே, கொரோனா நெருக்கடிக்கு மத்தியில், புதிய தீர்மானத்துடன் ஒரு சிறப்பு பொருளாதார தொகுப்பை நான் இன்று அறிவிக்கிறேன். இந்த பொருளாதார தொகுப்பு, சுயசார்பு இந்தியா பிரச்சாரம்  முக்கிய இணைப்பாக விளங்கும்.

நண்பர்களே, கொரோனா நெருக்கடியிலிருந்து மீட்பதற்காக அண்மைக்காலமாக அரசு வெளியிட்ட பொருளாதார அறிவிப்புகள், ரிசர்வ் வங்கியின் முடிவுகள் ஆகும். இதனையும் சேர்த்து, இன்று அறிவித்துள்ள பொருளாதார தொகுப்பின் மதிப்பு சுமார் ரூ.20 லட்சம் கோடி இருக்கும். இந்தத் தொகுப்பு நிதி, இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% ஆகும். இந்த ரூ.20 லட்சம் கோடி மூலம், நாட்டின் பல்வேறு தரப்பு மக்களும், பொருளாதார அமைப்பில் தொடர்புடையவர்களும் ஆதரவையும், பலத்தையும் பெறுவார்கள். 2020-ம் ஆண்டில் நாட்டின் வளர்ச்சிப் பயணத்திற்கு புதிய ஊக்குவிப்பை இந்தத் தொகுப்பு வழங்கும். மேலும், சுயசார்பு இந்தியா பிரச்சாரத்துக்கு புதிய கோணத்தை அளிக்கும். சுயசார்பு இந்தியா தீர்மானத்தை உறுதிப்படுத்தும் வகையில், இந்தத் தொகுப்பில், நிலம், தொழிலாளர், ரொக்க கையிருப்பு, சட்டங்கள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த பொருளாதார தொகுப்பு, லட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கும் நமது குடிசைத் தொழில், வீட்டுத் தொழில், சிறு தொழில்கள், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் ஆகியவற்றுக்கானது. இது சுயசார்பு இந்தியா என்ற நமது தீர்மானத்துக்கு வலுவான அடித்தளமாக இருக்கும். நாட்டு மக்களுக்காக எந்தவொரு சூழ்நிலையிலும், எந்தவொரு பருவத்திலும் இரவு - பகலாக உழைத்துவரும் நாட்டின் தொழிலாளர்கள், விவசாயிகளுக்காக பொருளாதார தொகுப்பு கொண்டு வரப்பட்டுள்ளது. இதேபோல, வரியை நேர்மையாக செலுத்தி, நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பை வழங்கும் நடுத்தர மக்களுக்கானது. இந்தியாவின் பொருளாதார திறனை ஊக்குவிக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்ட இந்திய தொழில் துறையினருக்காக இந்த பொருளாதார திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. “சுயசார்பு கொண்ட இந்தியா பிரச்சாரத்தால்” ஊக்குவிக்கப்பட்ட இந்தப் பொருளாதார தொகுப்பு குறித்த விரிவான தகவல்களை உங்களுக்கு நாளை முதல் அடுத்த சில நாட்களில் நிதியமைச்சர் வெளியிடுவார்.

நண்பர்களே, சுயசார்பு இந்தியாவை உருவாக்க உறுதியான சீர்திருத்தங்களை கொண்டுவருவது என்ற தீர்மானத்தை முன்னோக்கி எடுத்துச் செல்வது தற்போது அவசியமாகிறது. கடந்த  ஆறு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் மூலம், இந்த நெருக்கடியான காலத்திலும் கூட இன்று, இந்தியாவின் அமைப்பு முறை மிகவும் திறன் வாய்ந்ததாக இருப்பதை நீங்கள் கண்டுள்ளீர்கள். இல்லாவிட்டால், இந்திய அரசு வழங்கும் பணம், ஏழை விவசாயிகளுக்கு நேரடியாக சென்று சேரும் என்று யார் சிந்தித்திருப்பார்கள்! ஆனால், இது நடந்துள்ளது. அனைத்து அரசு அலுவலகங்களும் மூடப்பட்டபோதிலும், போக்குவரத்து வழிகள் நிறுத்தப்பட்டபோதிலும் இது நடந்துள்ளது. மக்கள் நிதி-ஆதார்-மொபைல் என்ற மூன்று சக்திகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தத்தின் பலனை நாம் பார்த்து வருகிறோம். தற்போது சீர்திருத்தங்களின் தன்மையை விரிவாக்கம் செய்ய வேண்டும், புதிய உச்சத்தை அளிக்க வேண்டும். இந்த சீர்திருத்தங்கள், விவசாயம் தொடர்பான ஒட்டுமொத்த விநியோக முறையில் இருக்கும். இதன்மூலம், விவசாயிகள்  மேம்படுத்தப்படுவதோடு, எதிர்காலத்தில் கொரோனா போன்ற எந்தவொரு நெருக்கடி ஏற்பட்டாலும், விவசாயத்துக்கு குறைந்தபட்ச பாதிப்பே இருக்கும். இந்த சீர்திருத்தங்கள், சீரான வரி அமைப்பு, எளிதான மற்றும் தெளிவான சட்டத்தின் ஆட்சி, சிறந்த கட்டமைப்பு, திறமையான மற்றும் போட்டியிடும் வகையிலான மனித வளங்கள் மற்றும் வலுவான நிதி அமைப்பை கட்டமைப்பது ஆகியவற்றைக் கொண்டதாக இருக்கும். இந்த சீர்திருத்தங்கள், வர்த்தகத்தை ஊக்குவிக்கும், முதலீட்டை ஈர்க்கும் மற்றும் இந்தியாவில் தயாரிப்போம் என்ற நமது தீர்மானத்தை வலுப்படுத்தும்.

நண்பர்களே, மனபலம் மற்றும் தன்னம்பிக்கையின் மூலமே சுயசார்பு என்பது சாத்தியமாகும். உலகளாவிய விநியோக அமைப்பில் கடும் போட்டியை எதிர்கொள்ள தேசத்தை சுயசார்பு தயார்படுத்தும். இன்று உலகளாவிய விநியோக அமைப்பில் மிகப்பெரும் பங்களிப்பை இந்தியா வழங்க வேண்டியது தற்போதைய தேவையாக உள்ளது. இதனை நிறைவேற்றும் வகையில், பொருளாதார தொகுப்பில் பல்வேறு வழிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது நமது அனைத்து துறைகளின் திறனை அதிகரிப்பதுடன், தரத்தையும் உறுதிப்படுத்தும்.

நண்பர்களே, இந்த நெருக்கடி மிகவும் பெரியது, மிகப்பெரும் அமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. இருந்தாலும், இந்த சூழ்நிலையில், நமது ஏழை சகோதரர்கள் மற்றும் சகோதரிகளின் தீர்மானத்தையும், கட்டுப்பாட்டையும் நாடு பார்த்துள்ளது. குறிப்பாக, தெருவோர வியாபாரிகள், வீதி வீதியாக சென்று விற்பவர்கள், தொழிலாளர்கள், வீடுகளில் பணியாற்றுவோர் ஆகியோர் இந்த சமயத்தில் கடும் துன்பங்களை அனுபவித்துக் கொண்டு, ஏராளமான தியாகத்தை செய்துள்ளனர். அவர்கள் இல்லாததை யார் உணராமல் இருப்பார்கள்? அவர்களை வலுவானவர்களாக மாற்றுவது தற்போதைய நமது கடமை. அவர்களின் நிதித் தேவையை நிறைவேற்ற மிகப்பெரும் முடிவுகளை எடுக்க வேண்டும். இதனை மனதில் கொண்டு, ஏழைகள், தொழிலாளர்கள், இடம்பெயர்ந்த தொழிலாளர்கள், கால்நடை வளர்ப்போர், மீனவர்கள், அமைப்புசார்ந்த அல்லது அமைப்புசாரா துறையினர் என ஒவ்வொரு பிரிவினருக்கும் பொருளாதார தொகுப்பில் சில முக்கியமான முடிவுகள் அறிவிக்கப்படும்.

நண்பர்களே, உள்ளூர் உற்பத்தி, உள்ளூர் சந்தை மற்றும் உள்ளூர் விநியோக அமைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை கொரோனா நெருக்கடி நமக்கு எடுத்துரைத்துள்ளது. இந்த நெருக்கடியான நேரத்தில், இந்த உள்ளூர் சந்தை நமது தேவையை நிறைவேற்றியுள்ளது. நம்மைப் பாதுகாத்துள்ளது. உள்ளூர் என்பது வெறும் தேவை மட்டுமல்ல, இது நமது பொறுப்பும் கூட. நமது வாழ்க்கையின் மந்திரமாக உள்ளூர் அமைப்பை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை காலம் நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது. சர்வதேச பிராண்டுகளாக நீங்கள் இன்று கருதும் பொருட்கள், சில நேரத்தில் மிகவும் உள்ளூர் பொருட்களாக இருந்தன. ஆனால், அதனை மக்கள் பயன்படுத்தத் தொடங்கிய பின்னர்,  ஊக்குவிக்கத் தொடங்கிய பின்னர், பிராண்டு என்ற அங்கீகாரம் வழங்கிய பின்னர், அதனை நினைத்து பெருமைப்பட்டீர்கள், அப்போது உள்ளூர் பொருட்கள் சர்வதேச பொருட்களாக மாறின. எனவே, இன்று முதல் ஒவ்வொரு இந்தியரும் தங்களது உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுக்க வேண்டும். உள்ளூர் பொருட்களை வாங்குவதோடு மட்டுமன்றி, அதனை பெருமையுடன் ஊக்குவிக்க வேண்டும். நமது தேசத்தால் இதனை செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன். உங்களது செயல்பாடுகள், ஒவ்வொரு நேரமும் உங்கள் மீதான எனது மரியாதையை அதிகரிக்கச் செய்கிறது. நான் ஒரு விஷயத்தை பெருமையுடன் நினைவுகூர்கிறேன். காதிப் பொருட்களை நாட்டு மக்கள் அனைவரும் வாங்க வேண்டும் என்று உங்களை நான் கேட்டுக் கொண்டேன். இது நமது கைத்தறி நெசவாளர்களுக்கு மிகுந்த பயனளிக்கும் என்று நான் கூறினேன். இன்று, மிகவும் குறுகிய காலத்தில், காதி மற்றும் கைத்தறி பொருட்கள் மீதான தேவையும், விற்பனையும் மிகப்பெரும் அளவில் அதிகரித்துள்ளது. அது மட்டுமல்லாது, மிகப்பெரும் பிராண்டாக நீங்கள் மாற்றியுள்ளீர்கள். இது மிகவும் சிறிய முயற்சியாக இருந்தது. ஆனால், அதன் முடிவுகள் மிகவும் சிறப்பாக உள்ளது.

நண்பர்களே, நீண்ட காலத்துக்கு நமது வாழ்க்கையின் ஒரு அங்கமாக கொரோனா இருக்கும் என்று வல்லுநர்களும், விஞ்ஞானிகளும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், அதேநேரத்தில், கொரோனாவைச் சுற்றியே நமது வாழ்க்கை இருக்க நாம் அனுமதிக்கக் கூடாது. நாம் முகக்கவசங்களை அணிய வேண்டும். ஒவ்வொருவருக்கும் 3 அடி இடைவெளியை பின்பற்றிக் கொண்டு, நமது இலக்குகளை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும். எனவே, நான்காவது கட்ட பொது முடக்கம், முற்றிலும் மறுவடிவம் பெற்றிருப்பதுடன், புதிய விதிகளுடன் இருக்கும். மாநிலங்களிடம் நாங்கள் பெற்ற பரிந்துரைகளின் அடிப்படையில், 4-வது கட்ட பொது முடக்கம் தொடர்பான தகவல்கள் உங்களுக்கு மே 18-க்கு முன்னதாக தெரிவிக்கப்படும். விதிகளைப் பின்பற்றி, கொரோனாவுடன் போராடி, நாம் முன்னேறிச் செல்வோம் என்று நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.

நண்பர்களே, நமது கலாச்சாரத்தில் சர்வம், ஆத்மா, கட்டுப்பாடு, சுகம் என்று கூறப்பட்டுள்ளது. உதாரணமாக, நமது கட்டுப்பாட்டில் இருப்பது மகிழ்ச்சிதான். சுயசார்பு என்பது மகிழ்ச்சி, திருப்தி மற்றும் மேம்பாட்டுக்கு வழிவகை செய்கிறது. சுயசார்பு இந்தியா என்ற தீர்மானமே 21-ம் நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாக மாற்றும் நம் பொறுப்பை நிறைவேற்றச் செய்யும். இந்த பொறுப்பே, 130 கோடி குடிமக்களின் வாழ்க்கை சக்தியிலிருந்து சக்தியைப் பெறும். இது சுயசார்பு இந்தியா என்பதே ஒவ்வொரு இந்தியர்களின் புதிய சபதமாகவும், திருவிழாவாகவும் இருக்கும். தற்போது புதிய தீர்மானம் மற்றும் உறுதிப்பாட்டுடன் நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும். கடமை, விடாமுயற்சியின் உச்சம், திறன்கள் ஆகியவற்றுடன் நெறிமுறைகள் இணைந்திருக்கும்போது, சுயசார்பு கொண்டதாக இந்தியா மாறுவதை யாரால் தடுக்க முடியும்? இந்தியாவை சுயசார்பு கொண்டதாக நம்மால் உருவாக்க முடியும். இந்தியாவை சுயசார்புடையதாக நாம் மாற்றுவோம். இந்த தீர்மானம் மற்றும் நம்பிக்கையுடன் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்…

VRRK/KP



(Release ID: 1623521) Visitor Counter : 521