சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

சர்வதேச செவிலியர் தினம் அனுசரிக்கப்பட்டது.

"செவிலியர்கள் மற்றும் இதர சுகாதாரப் பணியாளர்கள் இல்லாமல், பெருந் தொற்றுகளுக்கு எதிரான போரை நம்மால் வெல்ல முடியாது": டாக்டர் ஹர்ஷ் வர்தன்.

Posted On: 12 MAY 2020 3:13PM by PIB Chennai

இந்த வருடம் புளோரன்ஸ் நைட்டிங்கேலின் 200-ஆவது பிறந்த நாளைக் குறிக்கும் சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு, காணொளிக் காட்சி மூலம் நடந்தக் கொண்டாட்டங்களுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர், டாக்டர் ஹர்ஷ் வர்தன் இன்று தலைமை தாங்கினார். 'செவிலியர் மற்றும் துணை செவிலியர்களுக்கான ஆண்டு' என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்து இருப்பதால் இந்த வருடம் இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது. பல இலட்சக்கணக்கான செவிலியர்கள் ஆன்லைன் மூலம் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

 

செவிலியர் தொழிலில் இருப்பவர்களின் பணியையும், தன்னலமில்லாத அர்ப்பணிப்பையும் பாராட்டிய டாக்டர் ஹர்ஷ் வர்தன், அவர்களை சுகாதார விநியோக அமைப்பின் வலிமையான மற்றும் முக்கியமான தூண்கள் என்றார். "உங்கள் பணி மற்றும் நேர்மையின் ஆழத்தை வார்த்தைகளால் போதுமான அளவு வெளிப்படுத்த முடியாது, உங்கள் அர்ப்பணிப்பு அத்தகையது. உங்களின் அன்புக்கும், அர்ப்பணிப்புக்கும், குணப்படுத்தும் தொடுதலுக்கும், ஒரு பொழுது எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், நோயாளிகளை எப்போதுமே முன்னிலைப் படுத்தும் தன்மைக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி," என்றார். தற்போதைய பெருந்தொற்று நேரத்தில் என்றும் தொடரும் அவர்களுடைய மிகச்சிறந்த பணிக்கு அமைச்சர் நன்றி தெரிவித்தார். "செவிலியர்கள் மற்றும் இதர சுகாதாரப் பணியாளர்கள் இல்லாமல், பெருந்தொற்றுகளுக்கு எதிரான போரை நம்மால் வெல்ல முடியாது; நிலையான வளர்ச்சி இலக்குகளையோ அல்லது உலகளாவிய சுகாதாரத் தழுவலையோ நம்மால் எட்டி இருக்க முடியாது," என்று அவர் தெரிவித்தார்.

 

கொவிட் சமயத்தில் மிகப்பெரிய சவாலுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கும் செவிலியர்களின் தைரியத்தை டாக்டர் ஹர்ஷ்வர்தன் பாராட்டினார். "சமீபத்தில் இறந்த அஞ்சா நெஞ்சர்களான திருமதி. ஜோதி வித்தல் ரக்ஷா, செவிலியர் பணி, பூனே; திருமதி. அனிதா கோவிந்த்ராவ் ராத்தோட், துணைத் தலைமைச் செவிலியர், புனே, மற்றும் திருவாளர் மார்க்ரெட், செவிலியர் அலுவலர், இஎஸ்ஐ மருத்துவமனை, ஜில்மில் ஆகியோரை நான் இன்று நினைத்துப் பார்க்கிறேன். அவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நோயோடு நாம் தொடர்ந்து போராடுவோம், நமது எண்ணங்களை உயர்வாக வைத்துக்கொள்வோம், மற்றும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தும், பயிற்சிகளை மேற்கொண்டும், நெறிமுறைகளை பின்பற்றியும், நம்மை பாதுகாத்துக் கொள்வோம் என்று நான் உங்களுடன் நின்று உறுதி ஏற்கிறேன்," என்று அவர் கூறினார்.

 

முன்னணியில் நின்று போராடும் சுகாதாரப் பணியாளர்களைப் பாதுகாக்கும் விதத்தில், சுகாதாரப் பணியாளர்களுக்கு எதிராக எந்த வன்முறையும் நடக்காமல் இருக்க சட்டத்திருத்தம் ஒன்று அமல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அத்தகைய வன்முறைகளை தண்டனைக்குரியதாகவும், பிணையில் வெளியில் வர முடியாததாகவும் ஆக்கி, சுகாதாரப் பணியாளர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளுக்கும், நோய் சம்பந்தமாக சுகாதாரப் பணியாளருக்கு ஒரு வேளை நேரடித் தொடர்பு இருக்கும் பட்சத்தில் சொத்துகளுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கும் நஷ்ட ஈடு வழங்க ஆவண செய்வதற்கு அந்த சட்டத்திருத்தம் வழி வகுக்கிறது.

 

அத்தகைய வன்முறை செயல்களைத் தூண்டி விட்டாலோ அல்லது அவற்றில் ஈடுபட்டாலோ மூன்று மாதத்திலிருந்து ஐந்து வருடங்கள் வரை சிறைத் தண்டனையும், ரூபாய் 50 ஆயிரத்திலிருந்து 2 இலட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். படுகாயம் ஏற்படுத்தினால், 6 மாதங்கள் முதல் 7 வருடங்கள் வரை சிறைத்தண்டனையும், ரூபாய் ஒரு இலட்சம் முதல் 5 இலட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். கூடுதலாக, சொத்துக்களுக்கு ஏற்படுத்திய பாதிப்புக்கு, சொத்தின் சந்தை விலையை விட இருமடங்கு நஷ்ட ஈட்டை பாதிப்படைந்தவர்களுக்கு தரவேண்டும்

 

மேலும், கொவிட்-19 நோயாளிகளுடன் நேரடித் தொடர்பு வைத்திருக்கக் கூடிய மற்றும் இதனால் பாதிப்படையக்கூடிய ஆபத்தில் இருக்கும் சமூக சுகாதாரப் பணியாளர்கள் உட்பட 22.12 இலட்சம் பொது சுகாதாரச் சேவை அளிப்பவர்களுக்கு, 90 நாட்களுக்கு ரூ. 50 இலட்சம் காப்பீட்டை வழங்கும் 'பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வுத் தொகுப்பு: கொவிட்-19-உடன் போரிடும் சுகாதாரப் பணியாளர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்துக்கு' அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கொவிட்-19 தொற்றினால் ஏற்படும் எதிர்பாராத உயிரிழப்புகளையும் இது உள்ளடக்கும்.

***
 


(Release ID: 1623288) Visitor Counter : 328