ரெயில்வே அமைச்சகம்

படிப்படியாக தெரிந்தெடுக்கப்பட்ட பயணிகள் ரயில் சேவைகள் - இந்திய ரயில்வே தொடங்க உள்ளது

Posted On: 10 MAY 2020 8:26PM by PIB Chennai

இந்திய ரயில்வே படிப்படியாக மீண்டும் மே 12ம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவைகளை தொடங்க திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக 15 ஜோடி ரயில்கள் (30 திரும்ப வரும் பயணங்கள்) இயக்கப்பட உள்ளன. இந்த ரயில்கள், சிறப்பு ரயில்களாக புதுதில்லி ரயில் நிலையத்தில் இருந்து திப்ருகார், அகர்தலா, ஹவுரா, பாட்னா, பிலாஸ்பூர், ராஞ்சி, புவனேஷ்வர், செகந்திராபாத், பெங்களூரூ, சென்னை, திருவனந்தபுரம், மட்காவுன், மும்பை சென்ட்ரல், அகமதாபாத் மற்றும் ஜம்முதாவி ஆகியவற்றை இணைக்கும் வகையில் இயக்கப்பட உள்ளன.

 

அதன்பின்னர், கிடைக்கும் பெட்டிகள் அடிப்படையில் இந்திய ரயில்வே மேலும் கூடுதல் சிறப்பு ரயில்களை புதிய பாதைகளில் இயக்கும். ஏனெனில், 20,000 பெட்டிகள் கோவிட்-19 சிகிச்சை மையங்களாக மாற்றுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு மாநிலங்களில் சிக்கி உள்ளவர்களை அழைத்து செல்வதற்காக தினமும் 300 ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இயக்குவதற்காக பெட்டிகள் முன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

 

புதிதாக இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு மே 11ம் தேதி மாலை 4 மணிக்கு தொடங்கும். இதற்கு ஐஆர்சிடிசி இணையதளத்தில் (https://www.irctc.co.in/) மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். ரயில் நிலையங்களில் இருக்கும் டிக்கெட் கவுன்ட்டர்கள் தொடர்ந்து மூடப்பட்டே இருக்கும். அங்கு வேறு எந்த டிக்கெட்டும் (பிளாட்பாரம் டிக்கெட் உள்பட) விற்பனை செய்யப்பட மாட்டாது. முன்பதிவு செய்யப்பட்ட முறையான டிக்கெட்டை வைத்திருக்கும் பயணிகள் மட்டுமே  ரயில் நிலையங்களில் அனுமதிக்கப்படுவார்கள். அதேபோன்று அனைத்து பயணிகளும் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் உடல்வெப்பநிலை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு எந்த அறிகுறியும் இல்லாதவர்கள் மட்டுமே பயணத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும், ரயில் புறப்பாடு உள்ளிட்ட கூடுதல் தகவல்கள் தேவைக்கு ஏற்ப தனியாக வெளியிடப்படும்.


(Release ID: 1623003)