ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

பொது முடக்கத்தின் போது மருந்து கொள்முதல் செய்வதற்கு வசதியாக வாட்ஸ்அப் மற்றும் மின்னஞ்சல் மூலம் வரும் உத்தரவுகளை பிரதம மந்திரியின் மக்கள் மருந்தகங்கள் ஏற்றுக்கொள்கின்றன

Posted On: 05 MAY 2020 12:59PM by PIB Chennai

தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மத்திய வேதியியல் மற்றும் உர அமைச்சகத்தின் கீழ் உள்ள பிரதம மந்திரியின் மக்கள்  மருந்தகங்கள் வாட்ஸ்அப் மற்றும் மின்னஞ்சல் ஆகியவற்றின் மூலம் வரும் மருந்து தேவை தொடர்பான உத்தரவுகளை ஏற்றுக்கொள்கின்றன, மேலும், இணையம் மூலம் பதிவேற்றப்பட்ட மருந்துகளின் அடிப்படையில், மருந்துகள் நோயாளிகளின் வீட்டு வாசலுக்கே சென்று வழங்கப்படுகின்றன. இந்த புதிய நடவடிக்கை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நோயாளிகள் மருந்துகளை எளிதில் கொள்முதல் செய்வதற்கு உதவி செய்கிறது. பிரதம மந்திரியின் மக்கள் மருந்தகங்களின் இந்த முயற்சிக்கு மத்திய வேதியியல் மற்றும் உர அமைச்சர் திரு. டி.வி. சதானந்த கவுடா பாராட்டு தெரிவித்ததுடன், வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்கள் உள்ளிட்ட நவீன தகவல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்தி சிறந்த சேவைகளை வழங்குவதன் மூலம் பிரதம மந்திரியின் மக்கள் மருந்தகங்கள் அத்தியாவசிய மருந்துகள் தேவைப்படுவோருக்கு விரைவாக வழங்குகின்றன என தெரிவித்தார்.

பிரத மந்திரியின் மக்கள் மருந்தகங்கள்  இந்திய மருத்துவ துறையின்  கீழ் செயல்படுகின்றன. தற்போது நாட்டின் 726 மாவட்டங்களில் 6300 மக்கள் மருந்தகங்கள் செயல்படுகின்றன, இவை தரமான மருந்துகளை மலிவு விலையில் வழங்குவதை உறுதி செய்கின்றன. இந்த மருந்துகள் சராசரியாக 50 சதவீத முதல் 90 சதவீத வரை மலிவானவை. ஏப்ரல் மாதம் சுமார் ரூ 52 கோடி மதிப்புள்ள மருந்து நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளது.

பொது முடக்க காலத்தில் அத்தியாவசிய மருந்துகளின் விநியோகத்தை பராமரிப்பதற்காக, இந்திய மருந்தக பொதுத்துறை நிறுவனங்கள்  ஏப்ரல் மாதத்தில் அதிகமாக விற்பனையாகும் 178 மருந்துகளுக்கான கொள்முதல் ஆணைகளை  ரூ 186.52 கோடி அளவிற்கு ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



(Release ID: 1621163) Visitor Counter : 210