பாதுகாப்பு அமைச்சகம்

கொரோனா வீரர்களுக்கு இந்தியா தலைவணங்குகிறது

Posted On: 02 MAY 2020 6:09PM by PIB Chennai

கொரோனாவைக் கட்டுப்படுத்தும் தேசிய முயற்சிக்கு இந்திய விமானப் படை, உள்நாட்டு அளவிலும், வெளிநாட்டு அளவிலும் மனிதர்களையும் பொருட்களையும் ஏற்றிச் செல்வதன் மூலம் பங்களித்து வருகிறது. மருத்துவர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள் போன்ற ஏராளமானவர்களையும், கோவிட் தொற்று  பரிசோதனைக் கூடங்களை அமைப்பதற்கான உபகரணங்களையும் ஏற்றிச் செல்வதுடன், 600 டன்னுக்கும் அதிகமாக மருத்துவப் பொருட்களையும் கொண்டு சென்றுள்ளது. இந்திய விமானப்படை பணியாளர்கள் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தொடர்ந்து பங்களிப்பார்கள். இந்தியாவின் துணிச்சல் மிக்க கொரோனா சேவகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இந்திய விமானப்படை தனது துணை சேவைகளுடன், தனித்துவமான முறையில் அவர்களுக்கு வணக்கம் தெரிவிக்கத் திட்டமிட்டுள்ளது. கொடிய கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் முன்பு எப்போதும் கண்டிராத, இந்த அசாதாரண நேரத்தில், தன்னலம் கருதாது, இடையறாமல் பாடுபட்டு வரும் தீரமிக்க கொரோனா வீரர்களுக்கு வணக்கம் செலுத்த இந்திய விமானப்படை விமானங்களைப் பறக்கவிட்டு தலை வணங்க திட்டமிட்டுள்ளது.

மே 3-ம் தேதி, இந்திய விமானப் படையின் ஏராளமான விமானங்களை தில்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் பறக்க விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பறக்கும் நடவடிக்கை, இந்திய விமானப் படையின் பயிற்சி நடவடிக்கையுடன் சேர்ந்து நடைபெறும். கோவிட்-19 தடுப்பு தொடர்பாக பொருட்களைக் கொண்டு செல்வதில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஹெலிகாப்டர்கள், போக்குவரத்து விமானங்களை இயக்கும் வாய்ப்பாகவும் இது அமையும்.  

 தில்லியில் கொரோனா சேவகர்களுக்கு நன்றி செலுத்தும் இந்த வான்வழி வணக்க நிகழ்ச்சி காலை 10 மணி முதல் 10.30 மணி வரை நடைபெறும். சுகோய்-30 எம்கேஐ, எம்ஐஜி-29, ஜாகுவார் ஆகியவற்றைக் கொண்ட படை விமானங்கள் ராஜ்பாத் மீது பறக்கும். இந்த விமானங்கள் தில்லியை வட்டப்பாதையில் சுற்றி வரும். இதனை தில்லிவாசிகள் தங்கள் வீடுகளின் கூரைகளில் இருந்தவாறு கண்டு மகிழலாம்.

----------

 


(Release ID: 1620596)