பிரதமர் அலுவலகம்

மின் துறை செயல்பாடுகள் குறித்து பிரதமர் திரு மோடி ஆய்வு

Posted On: 01 MAY 2020 5:52PM by PIB Chennai

மின் துறையினருடன் இன்று விரிவான ஆய்வு மேற்கொண்ட பிரதமர் திரு நரேந்திர மோடி, கோவிட் -19 பாதிப்பு சூழ்நிலையில் அந்தத் துறையில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்தும் ஆய்வு செய்தார். நீடித்த செயல்பாடு, சவால்களை சமாளிக்கும் திறன், துறையின் செயல் திறன் அதிகரிப்பு ஆகியவற்றுக்காக நீண்டகால நோக்கிலான சீர்திருத்த முயற்சிகள் பற்றி அவர் கேட்டறிந்தார்.

தொழில் தொடங்கும் சூழ்நிலையை எளிதாக்குவது; புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களின் மூலம் மின் உற்பத்தியை மேம்படுத்துதல்; நிலக்கரி வழங்கலில் எளிதான சூழ்நிலை; அரசு - தனியார் கூட்டு முயற்சிகளின் பங்களிப்புகள்; மின் துறையில் முதலீட்டை மேம்படுத்துவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

பொருளாதார வளர்ச்சிக்குப் புதிய வேகம் தருவதில் மின் துறையின் பங்கை பிரதமர் கோடிட்டுக் காட்டினார். தனியார் முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஒப்பந்தங்களை செம்மையான முறையில் செயல்படுத்துவதன் அவசியம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப் பட்டது.

நுகர்வோரை மையமாகக் கொண்டு செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், எல்லா நாட்களிலும், 24 மணி நேரமும் நம்பகமான, தரமான மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மின் விநியோக நிறுவனங்களின் செயல் திறன்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள், கட்டண விகிதங்களைத் திருத்தி அமைத்தல், உரிய காலத்தில் மானியங்களை வழங்குதல், நிர்வாகத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட அம்சங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் உள் துறை அமைச்சர், நிதி அமைச்சர், மின்சாரம், தொழில் திறன், என்.ஆர்.இ. துறை இணை அமைச்சர், நிதித் துறை இணை அமைச்சர் ஆகியோரும், மத்திய அரசின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


(Release ID: 1620115)