நித்தி ஆயோக்

`இப்போதைக்கு சமூக இடைவெளிதான் பயன்தரக் கூடிய தடுப்பு மருந்து': சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன்.

Posted On: 30 APR 2020 5:07PM by PIB Chennai

தன்னார்வலர்கள் மற்றும் மக்கள் நல அமைப்புகளுடன் காணொலி மூலம் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் நேரடி கலந்துரையாடலுக்கு நிதிஆயோக் அமைப்பு இன்று ஏற்பாடு செய்திருந்தது. நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல்பாட்டு அதிகாரி திரு. அமிதாப் காந்த் இந்தக் கலந்துரையாடலை வழிநடத்தினார்.

நிதி ஆயோக்கின் தர்பான் முனையத்தில் பதிவு செய்துள்ள தன்னார்வ அமைப்புகள் இதில் பங்கேற்றன. பில் மற்றும் மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளையின் சார்பில் ஹரி மேனன், ஹெல்ப் ஏஜ் இந்தியா சார்பில் மாத்யூ செரியன், டாட்டா டிரஸ்ட்கள் சார்பில் எச்.எஸ்.டி. சீனிவாஸ், பிரமல் ஸ்வாஸ்த்யா சார்பில் அஸ்வின் தேஷ்முக், சி.ஒய்.எஸ்.டி. சார்பில் ஜெகதானந்தா, பிரயாஸ் சார்பில் அமோத் காந்த், செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் யாஹியா அலிபி, சேவா சார்பில் சாயா பவசர், மான் தேஷி அறக்கட்டளை சார்பில் பிரபாத் சின்ஹா, சுலப் இன்டர்நேஷனல் சார்பில் லலித் குமார், லால் பாத்லேப்ஸ் சார்பில் அரவிந்த் லால், இந்தியப் பொது சுகாதார அறக்கட்டளை சார்பில் கே. ஸ்ரீநாத் ரெட்டி, கேர்  இந்தியா சார்பில் மனோஜ் கோபாலகிருஷ்ணன், உழைக்கும் மகளிர் அமைப்பு சார்பில் நந்தினி ஆசாத், அக்சய பாத்திரம் சார்பில் விஜய் சர்மா ஆகியோரும் வேறு பல அமைப்பினரும் இதில் கலந்து கொண்டனர்.

கோவிட்-19க்கு எதிரான நடவடிக்கைகளில் தன்னார்வ அமைப்புகள் மற்றும் மக்கள் நல அமைப்புகள் தன்னலமற்ற சேவைகள் செய்து வருகின்றன என்று அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பாராட்டு தெரிவித்தார். முடக்கநிலை தொடர்வதில் அவர்களுடைய உதவி தொடர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இந்தியக் குடிமக்கள் நலனை உறுதி செய்வதில் அவர்கள் மேற்கொண்டுள்ள தொடர்ச்சியான முயற்சிகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

சீனாவில் புதிய கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதாகத் தகவல் வந்த சில நாட்களிலேயே இந்தியா உடனடியாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்தது என்று டாக்டர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார். மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கிய மத்திய அரசு, சமுதாய அளவில் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது, விமான நிலையங்கள், துறைமுகங்கள், எல்லைப் பகுதிகளில் நுழைவோருக்கு உடல் வெப்பத்தை அறியும் பரிசோதனைகள் நடத்தியது என்று உடனடியாக பணிகளைத் தொடங்கியதாக அமைச்சர் கூறினார்.

`உங்கள் கைகளை அடிக்கடி கழுவுதல், எல்லா நேரங்களிலும் முகக்கவச உறை அணிவதால் உங்களுக்கும், உங்களின் பிரியமானவர்களுக்கும் நோய்த் தொற்று வராமல் தடுக்க முடியும். இவை தான் எளிதான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள். வீட்டில் உள்ள முதியோரின் நலனில் அக்கறை காட்டுங்கள். ஏனெனில் அவர்களைத்தான் இந்த நோய் அதிகமாகப் பாதிக்கும். வீட்டிலேயே இருங்கள், வீட்டில் இருந்தபடியே பணியாற்றுங்கள். இந்த நோய்க்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரையில், தேசிய முடக்கநிலையுடன் கூடிய தனி நபர் இடைவெளி பராமரித்தல் தான் நமக்குப் பயன்தரக் கூடிய தடுப்பு மருந்தாக இருக்கும்' என்று அமைச்சர் தெரிவித்தார்.

 



(Release ID: 1619726) Visitor Counter : 151