சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கோவிட்-19 குறித்த அண்மைச் செய்திகள்

Posted On: 28 APR 2020 6:32PM by PIB Chennai

உயிரி-தொழில்நுட்பத் துறையின் சார்பிலும், அதன் தன்னாட்சி பெற்ற 18 அமைப்புகள் சார்பிலும், பொதுத் துறை நிறுவனங்கள் சார்பிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆராய்ச்சிப் பணிகள் குறித்து இயக்குநர்கள் மற்றும் துறைத் தலைவர்களுடன் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் இன்று காணொளி மூலம் ஆய்வு நடத்தினார். நோய் எதிர்ப்பு அணுக்களைக் கண்டறியும் உபகரணத் தொகுப்புகளைக் கண்டறிதல், பி.சி.ஆர். அடிப்படையிலான நோய்க்குறி கண்டறியும் உபகரணத் தொகுப்புகள் உருவாக்குதல், கோவிட்-19க்கான தடுப்பூசிகள் உருவாக்குதல் ஆகியவற்றை `மேக் இன் இந்தியா' என்ற இந்தியாவிலேயே தயாரித்தல் திட்டத்தின் கீழ் செய்வதற்கான பணிகளை துரிதப்படுத்துமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

மிகவும் லேசான அறிகுறிகள் உள்ள அல்லது அறிகுறிகளுக்கு முந்தைய நிலையில் உள்ள நோயாளிகளை வீடுகளிலேயே தனிமைப்படுத்தி வைப்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது. வீடுகளிலேயே தனிமைப்படுத்தல் நிலையில் இருப்பதற்கான வசதி உள்ளவர்கள், அவ்வாறே இருப்பதற்கான வாய்ப்பைத் தேர்வு செய்யலாம். கோவிட்-19 நோய்த் தாக்குதல் இருப்பதாக சந்தேகத்துக்கு உரியவர்கள் அல்லது நோய்த் தாக்குதல் உறுதி செய்யப்பட்டவர்களைக் கையாள்வது தொடர்பாக 2020 ஏப்ரல் 7 ஆம் தேதி மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டுதல்களுடன் சேர்த்து இவற்றையும் கடைபிடிக்க வேண்டும். இந்த வழிகாட்டுதல்களைப் பின்வரும் இணையதள சுட்டியில் காணலாம்.

https://www.mohfw.gov.in/pdf/GuidelinesforHomeIsolationofverymildpresymptomaticCOVID19cases.pdf

கோவிட்-19 பாதிப்புக்கு அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் இப்போதைக்கு எதுவும் இல்லை என்றும், பிளாஸ்மா சிகிச்சையும் அதில் அடங்கும் என்றும் ஏற்கெனவே இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் (ICMR) தெளிவுபடுத்தியுள்ளது. பிளாஸ்மா சிகிச்சை முறையும் பரிசோதனைக்குரிய சிகிச்சை முறைகளில் ஒன்றாக உள்ளது. இருந்தபோதிலும், இதை ஒரு சிகிச்சை முறையாகப் பயன்படுத்தலாமா என்பதற்கான ஆதாரம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. இதன் செயல் திறனை மதிப்பீடு செய்ய இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் சார்பில் தேசிய அளவில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டுள்ளது. அந்த ஆய்வு முடிந்து, அறிவியல்பூர்வ ஆதாரம் கிடைக்கும் வரையில், ஆராய்ச்சி மற்றும் சோதனை அடிப்படையிலான தேவைகளைத் தவிர மற்ற வகையில் இந்த நடைமுறையைப் பயன்படுத்தக் கூடாது என்று தெளிவுபடுத்தப் பட்டுள்ளது. உண்மையில், பிளாஸ்மா சிகிச்சை அளிப்பது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சிக்கல்களையும் ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. ஆய்வு தொடர்பான விஷயங்களைத் தவிர, பிளாஸ்மா சிகிச்சையை பயன்படுத்துவதற்கான விரிவான வழிகாட்டுதல்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் ஏற்கெனவே வெளியிட்டுள்ளது.

இன்றைய நிலவரத்தின்படி ஏற்கெனவே நோய்த் தாக்குதல் இருந்து, கடந்த 28 நாட்களாக புதிய பாதிப்பு ஏதும் இல்லாத நிலையில் 17 மாவட்டங்கள் இருந்தன. நேற்றில் இருந்து இந்தப் பட்டியலில் புதிகாக இரண்டு மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. பட்டியலில் இருந்து ஒரு மாவட்டம் நீக்கப்பட்டுள்ளது. எனவே புதிய பாதிப்பு இல்லாத மாவட்டங்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. மேற்குவங்கத்தில் காலிம்போங், கேரளாவில் வயநாடு மாவட்டங்கள் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ள நிலையில், பிகாரின் லாக்கிஸ்சரய் மாவட்டம் பட்டியலில் இருந்து வெளியேறியுள்ளது.

இப்போதைய நிலவரத்தின்படி நோய்த் தாக்குதல் ஏற்பட்டவர்களில் 6,868 பேர் குணமாகியுள்ளனர். இது 23.3 சதவீதமாகும். நாட்டில் 29,435 பேருக்கு கோவிட்-19 தாக்குதல் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.


(Release ID: 1619065) Visitor Counter : 294