தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
மத்திய அரசு ஊழியர்களின் படிகளில் பிடித்தம் எதுவும் கிடையாது - போலிச் செய்திகளை அம்பலப்படுத்தியது பி ஐ பி
प्रविष्टि तिथि:
27 APR 2020 9:22PM by PIB Chennai
மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் அக விலைப்படி வீட்டு வாடகைப்படி போன்ற படிகளில் (அலவன்ஸ்கள்) எதையும் பிடித்தம் செய்யப் போவதில்லை என்று பத்திரிகைத் தகவல் மையத்தின் உண்மை கண்டறியும் பிரிவு தெளிவுபடுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக, மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் படிகளை பிடித்தம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக வெளியான தகவல்கள் குறித்து, உண்மை நிலையைக் கண்டறிந்த இந்தக் குழு, அதுபோன்ற திட்டம் எதுவும் இல்லை என ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
கோவிட்-19 நோய்த் தாக்குதலைக் கண்டறிய துரிதப் பரிசோதனை தொகுப்புகள் குறைந்த விலைக்கு கிடைக்கும் நிலையில், கூடுதல் விலை கொடுத்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) வாங்கியுள்ளது என்று முகநூலில் பரவும் புகார்கள் தவறானவை என்றும் இந்தப் பிரிவு கண்டறிந்துள்ளது. எந்த வரம்புக்குள் விலைகள் இருக்கலாம் என்று ஐசிஎம்ஆர் பரிந்துரைத்தது என்றும், நிறுவனங்கள் விரும்பினால் குறைந்த விலையில் வழங்கலாம் என்றும் ஐசிஎம்ஆர் தரப்பில் விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் போலிச் செய்திகள் பரவுதலைத் தடுப்பது மற்றும் உச்சநீதிமன்றத்தின் கருத்துகளைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் வைரலாக இருக்கும் புரளிகள் குறித்து விசாரித்தறிய பிரத்யேகமான ஒரு பிரிவை பத்திரிகைத் தகவல் மையம் உருவாக்கியுள்ளது. இதில் கண்டறியப்படும் தகவல்கள் “பிஐபி ஃபேக்ட்செக்” என்ற பெயரில் ட்விட்டரில் பதிவுகள் வெளியிடப்படுகின்றன. சமூக ஊடக தளங்களில் பரபரப்பாக பேசப்படும் தகவல்களை இந்தப் பிரிவு தொடர்ந்து கண்காணித்து, அவற்றின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்கிறது. அத்துடன், ட்விட்டரில் பிஐபி இந்தியா என்ற பெயரிலும், பல்வேறு பிராந்திய பதிவுகளிலும், அதிகாரப்பூர்வ மற்றும் நம்பகமான தகவல்கள் #பிஐபிஃபேக்ட்செக் என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி பதிவிடப் படுகின்றன.
(रिलीज़ आईडी: 1618879)
आगंतुक पटल : 204