பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

கோவிட்-19 வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து அரசின் முன்னாள் உயர்மட்ட அதிகாரிகளுடன் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் விரிவான ஆலோசனை.

Posted On: 25 APR 2020 6:37PM by PIB Chennai

கோவிட்-19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான இந்தியாவின் நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கை விலக்கிக் கொள்வதற்கான வழிவகைகளைக் கண்டறிவது குறித்து அரசின் முன்னாள் உயர்மட்ட அதிகாரிகளுடன் வடகிழக்குப் பிராந்திய மேம்பாடு, பிரதமர் அலுவலக விவகாரங்கள், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித்திட்டங்கள் துறைகளுக்கான மத்திய இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் விரிவான ஆலோசனை நடத்தினார்.

வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த அரசு இதுவரை மேற்கொண்டுள்ள சிறப்பான நடவடிக்கைகள் குறித்து டாக்டர் ஜிதேந்திர சிங் விளக்கினார். வைரசைக் கட்டுப்படுத்துவதற்கான உரிய நடவடிக்கைகள் மூலம், பல்வேறு வளர்ந்த நாடுகளைவிடவும், இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.

காணொளிக்காட்சி மூலம் நடைபெற்ற இந்த ஆலோசனையில், ஊரடங்கை படிப்படியாக விலக்கிக்கொள்வது, நிர்வாகத்தில் அதிக அளவில் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது போன்ற விவகாரங்கள் குறித்து அதிகாரிகள் எடுத்துரைத்தனர். உதாரணமாக, மின்னணு அலுவலகம், வைட்டமின்-சி மாத்திரைகளை எடுத்துக் கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கச் செய்வதன் முக்கியத்துவம், பொருளாதாரத்தை மீட்க நிதி ஊக்குவிப்பு நடவடிக்கைகள், ஏழைகளுக்கான நிதிப்பாதுகாப்பு, கல்வி ஆண்டை பயன்படுத்திக் கொள்வதற்காக அதிக அளவில் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் தேர்வுகளை அறிமுகப்படுத்துவது, இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்குச் செல்வதற்கு வழிவகை செய்தல், தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிப்பது, இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ், உள்நாட்டிலேயே பரிசோதனைக் கருவிகளைத் தயாரிப்பது ஆகிய நடவடிக்கைகளை முன்னாள் அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.

இந்த விவகாரத்தில் பயனுள்ள ஆலோசனைகளை வழங்கிய முன்னாள் உயர் அதிகாரிகளுக்கு டாக்டர் ஜிதேந்திர சிங் நன்றி தெரிவித்தார். மேலும், கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையில் அனைத்து தரப்பினரிடமிருந்தும் சிறப்பான கருத்துக்களைப் பெறுவதற்காக இதுபோன்ற ஆலோசனைகள் தொடரும் என்றும் ஜிதேந்திர சிங் கூறினார்.



(Release ID: 1618372) Visitor Counter : 180