சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கோவிட்-19 குறித்த அண்மைச் செய்திகள்

Posted On: 24 APR 2020 5:32PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று நாடு முழுக்க உள்ள கிராமப் பஞ்சாயத்து அலுவலர்களுடன் காணொளிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். முடக்கநிலை அமலைப் பராமரிப்பதில் தங்கள் முயற்சிகள் மற்றும் அனுபவங்களை கிராமப் பஞ்சாயத்து அலுவலர்கள் பகிர்ந்து கொண்டனர். நெருக்கடியான காலத்தில் உண்மையான பாடங்களை நாம் கற்றுக் கொள்ள முடியும் என்று கூறிய பிரதமர், சுயசார்பு என்ற மிகப் பெரிய பாடத்தை இப்போது நாம் கற்றுக் கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்தார். கட்டமைப்பு வசதிகளைப் பலப்படுத்திக் கொள்ள பஞ்சாயத்துகள் நடவடிக்கைகள் எடுப்பதுடன், சிறப்பான விழிப்புநிலையைப் பராமரிக்கும் பொருட்டு, நோய் பாதிப்புக்கு ஆளாகும் மற்றும் அவர்களுடன் தொடர்புள்ளவர்களை நல்ல முறையில் தடமறிதல் செய்வதற்கு ``ஆரோக்கிய சேது'' செயலியைப்  பதிவிறக்கம் செய்யும்படி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அனைத்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர்கள் மற்றும் அத் துறையின் செயலாளர்களுடன் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் இன்று காணொளிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். கோவிட்-19 சூழ்நிலையைக் கையாளுதலில் எடுத்த நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத் தேவைகளை சமாளிக்க ஆயத்தநிலை குறித்து அவர் ஆய்வு செய்தார். இதுவரை மாநிலங்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட அவர், அதிக அளவில் நோய்த் தாக்குதல் கண்டறியப்படும் அல்லது நோயாளிகள் எண்ணிக்கை வேகமாக இரட்டிப்பாகும் மாவட்டங்கள் குறித்தும்,  மரண விகிதம்  அதிகமாக இருக்கும் மாவட்டங்கள் குறித்தும்  கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கண்காணிப்பு, வீடு வீடாகச் சென்று நோய் பாதிப்பைக் கண்டறிதல், ஆரம்ப நிலையிலேயே நோய் பாதிப்பைக் கண்டறிந்து உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிப்பதன் மூலம் நோயாளிகளுக்கு உரிய காலத்தில் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வது ஆகியவை மூலம் மரணங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதில் மாநிலங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் வலியுறுத்தினார். டாக்டர்கள் மற்றும் முன்கள சுகாதாரத் துறைப் பணியாளர்கள், கோவிட்-19 பாதிப்பு உள்ள அல்லது பாதிப்பு ஏற்பட்டு குணமான நோயாளிகளை தயக்கத்துடன் அணுகுதல் மற்றும் பாரபட்சமாக நடத்துதல் போன்றவை இல்லாமல் இருப்பதற்காக மேற்கொள்ளப் பட்டுள்ள நடவடிக்கைகளை சுகாதார அமைச்சர்கள் நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

முன்னதாக உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) உறுப்பு நாடுகளின் சுகாதார அமைச்சர்களுடன் காணொளிக் காட்சி மூலம் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் கலந்துரையாடினார். கோவிட்-19 நோய்க் கட்டுப்பாட்டில் இந்தியா இதுவரை கடந்து வந்த பாதை குறித்த தகவல்களை அவர்களுடன் அமைச்சர் பகிர்ந்து கொண்டார். சமுதாயப் பங்கேற்பு மற்றும் நோய்க் கட்டுப்பாட்டு முயற்சிகள் என்ற இரட்டைக் கோட்பாடுகளின் அடிப்படையில் இந்தியாவின் முயற்சிகள் அமைந்திருப்பதாக அமைச்சர் கூறினார்.

இன்றைய நிலவரத்தின்படி, நாட்டில் முன்னர் கொரோனா வைரஸ் தாக்குதல் கண்டறியப்பட்ட 15 மாவட்டங்களில், கடந்த 28 நாட்களாகப் புதிய நோயாளிகள் யாரும் கண்டறியப்படவில்லை. அவற்றுடன் மேலும் புதிய மாவட்டங்கள் - சத்தீஸ்கரில் துர்க் மற்றும் ராஜ்நந்த்கான், மத்தியப் பிரதேசத்தில் சிவபுரி – ஆகியவை இதில் இணைந்துள்ளன.

மேலும் 23 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் 80 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களில், புதிதாக யாருக்கும் நோய் கண்டறியப்படவில்லை.

பயிற்சி பெற்ற நிபுணர்கள் அளிக்கும்  சுகாதாரம் மற்றும் பொது மக்களுக்கான தகவல்களும், குடிமக்களின் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில்களை அறியவும் @CovidIndiaSeva என்ற ட்விட்டர் இணைப்பு வசதியளிக்கிறது. உடனுக்குடன் இதன் மூலம் தகவல்களை அறிய முடிகிறது.

இப்போதைய நிலவரத்தின்படி 4,748 பேர் குணமடைந்துள்ளனர். நோய் பாதித்தவர்களில் குணமடையும் சராசரி 20.57 சதவீதமாக உள்ளது. நேற்றில் இருந்து, மேலும் 1684 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப் பட்டுள்ளது. இதுவரையில் மொத்தம் 23,077 பேருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டு, 718 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.


(Release ID: 1617897)