பாதுகாப்பு அமைச்சகம்

கோவிட்-19 நோயை எதிர்கொள்வதற்கு இராணுவப்படைகளின் தயார்நிலை மற்றும் நோய்க்கு எதிரான நடவடிக்கைகள் பற்றி மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் பரிசீலனை

Posted On: 24 APR 2020 3:55PM by PIB Chennai

கோவிட்-19 நோய்க்கு எதிரான போராட்டத்திற்கு இராணுவப்படைகள் தயார் நிலையில் உள்ளனவா என்றும், கோவிட்-19 நோய்க்கு எதிரான நடவடிக்கைகள் குறித்தும், ராணுவப்படைத் தளபதிகளுடன் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் இன்று காணொளி மாநாடு மூலம் பரிசீலித்தார்.

பாதுகாப்பு அமைச்சருடன் ராணுவ விவகாரங்கள் துறைச் செயலாளரும், முப்படைத் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், ராணுவப் படைப் பிரிவுத் தலைமைத் தளபதி எம்.எம்.ராவனெ, கடற்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் விமானப்படைத் தலைவர் ஏர் சீப் மார்ஷல் ஆர் கே எஸ் படவ்ரியா, பாதுகாப்புத்துறைச் செயலாளர் டாக்டர்.ராஜேஷ் குமார் பாதுகாப்பு நிதிச் செயலர் திருமதி. கார்கி கவுல் ஆகியோர் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.

கோவிட்-19 நோய்க்கு எதிரான போராட்டத்திற்காக மேற்கொள்ளப்பட்ட தயாரிப்பு நடவடிக்கைகளில் பங்காற்றியதற்கும், உள்ளாட்சி சிவில் நிர்வாகங்களுக்கு உதவி அளிக்கும் ராணுவப் படையினரின் பங்கு குறித்தும் பாதுகாப்பு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.

கோவிட்-19 நோய்க்கு எதிரான போராட்டத்தில், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ராணுவப்படைகள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பதாகவும், இவ்வாறு கோவிட்-19 நோய்க்கு எதிரான போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டிருக்கும் போது, இந்த நிலைமையை வேறு யாரும் தவறான முறையில் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்து விடக்கூடாது என்றும் திரு ராஜ்நாத் சிங் கூறினார்.

நிதி ஆதாரங்களைச் செலவிடுகையில், கோவிட்-19 நோய் பாதிப்பின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சுமைகளைக் கருத்தில் கொண்டு, எதையும் வீணாக்காமல் செலவழிக்கத் தேவையான நடவடிக்கைகளை ராணுவப்படைகள் எடுக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

ராணுவப்படையினர் அனைவரும் இணைந்து பணியாற்றுவதன் அவசியத்தை வலியுறுத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர், முழு ஊரடங்கு விலக்கப்பட்ட பிறகு, பொருளாதாரத்தை மீண்டும் நிலை நிறுத்துவதற்கு, எவ்வாறு ராணுவம் உதவமுடியும் என்றும், என்னென்ன பணிகளை விரைவில் செய்து முடிக்கலாம் என்று அடையாளம் கண்டு, அவற்றை முன்னுரிமைப்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

ராணுவப்படையினருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுவிடாமல் இருப்பதற்காக மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், உள்ளாட்சி சிவில் நிர்வாகத்திற்கு ராணுவம் எவ்விதமாக உதவி வருகிறது என்றும் முப்படை தளபதிகளும் பாதுகாப்பு அமைச்சருக்கு எடுத்துக் கூறினார்கள்.

கோவிட்-19 நோய் பரவல் காலத்தின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன; பல்வேறு உடன்படிக்கைகளில் தேவையான திருத்தங்களைக் கொண்டு வருவது; மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் இதர முகமைகள் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலின் படி பல்வேறு பயிற்சிகளை (drills) மேற்கொள்வது; அந்தந்தப் பகுதிகளில் உள்ள முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பத்தினரைக் கவனித்துக் கொள்வது போன்ற பணிகளையும் இராணுவம் மேற்கொண்டு வருகிறது.


(Release ID: 1617894) Visitor Counter : 242