சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 குறித்த அண்மைச் செய்திகள்

Posted On: 23 APR 2020 5:46PM by PIB Chennai

கொவிட்-19 பெரும் தொற்று நிலைமையைக் கருத்தில் கொண்டு, தொற்று நோய்கள் சட்டம், 1897- திருத்தும் அவசர சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது. தொற்று நோய்கள் சட்டம் (அவரச சட்டம்) 2020 என்னும் இந்த அவரசச் சட்டம், "எந்த நபரும் சுகாதாரச் சேவைப் பணியாளர்களுக்கு எதிராக எந்த வன்முறை செயலிலும் ஈடுபடக் கூடாது அல்லது தொற்று நோயின் போது எந்த சொத்துக்கும் எந்தவிதமான சேதமோ பாதிப்போ ஏற்படுத்தக்கூடாது", என்று சொல்கிறது. வன்முறை செயல்களை நடவடிக்கை எடுக்கத்தக்க மற்றும் பிணையில் வெளிவர முடியாத குற்றங்களாக இந்த அவசர சட்டம் ஆக்குகிறது. இத்தகைய வன்முறை செயல்களில் ஈடுபட்டாலோ அல்லது அவற்றை தூண்டிவிட்டாலோ, ரூ. 50,000 முதல் ரூ. 2,00,000 வரையிலான அபராதத்தோடு, மூன்று மாதங்கள் முதல் ஐந்து வருடங்கள் வரை சிறை தண்டனை கிடைக்கும். பலத்த காயத்தை ஏற்படுத்தும் பட்சத்தில், சிறை தண்டனை ஆறு மாத காலத்திலிருந்து ஏழு வருடங்கள் வரையும், அபராதம் ரூ. 1,00,000 முதல் ரூ. 5,00,000 வரை இருக்கும். கூடுதலாக, பாதிக்கப்பட்ட நபருக்கு குற்றவாளி இழப்பீடும், சொத்துக்கு ஏற்பட்ட சேதத்தின் அல்லது நஷ்டத்தின் நியாயமான சந்தை விலையை விட இரு மடங்கும் (நீதிமன்றத்தால் முடிவு செய்யப்படலாம்) செலுத்த வேண்டும்.

இன்று வரை, கடந்த 28 நாட்களாக அல்லது அதற்கும் மேலாக, புதிதாக ஒரு கொரோனா பாதிப்பு கூட 12 மாவட்டங்களில் இல்லை. எட்டு புதிய மாவட்டங்கள் 21 ஏப்ரல், 2020 முதல் இதில் இணைந்துள்ளன. அவை: சித்ரதுர்கா (கர்நாடகா), பிலாஸ்பூர் (சத்தீஸ்கார்), இம்பால் மேற்கு (மணிப்பூர்), ஐஸ்வால் மேற்கு (மிஜோராம்), பத்ராதரி கொத்தகூடம் (தெலங்கானா), பிலிபிட் (உத்திர பிரதேசம்), எஸ் பி எஸ் நகர் (பஞ்சாப்) மற்றும் தெற்கு கோவா (கோவா).

மேலும், 23 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 78 மாவட்டங்கள் கடந்த 14 நாட்களில் எந்த புதிய பாதிப்பு குறித்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

இது வரை, 19.89 சதவீத குணமாகும் விகிதத்தோடு, 4,257 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று முதல், 1409 புதிய பாதிப்புகள் பதியப்பட்டுள்ளன. மேலும், கொவிட்-19 பாதிப்பு அடைந்துள்ளவர்களாக இந்தியாவில் இது வரை 21,393 பேர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.

***
 


(Release ID: 1617563) Visitor Counter : 236