சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட் 19 குறித்த அண்மைச் செய்திகள்

Posted On: 21 APR 2020 5:47PM by PIB Chennai

ரத்த வங்கிகளில் போதிய ரத்த கையிருப்பை உறுதி செய்யுமாறு அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத் துறைகளுக்கும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் கடிதம் எழுதி உள்ளார். குறிப்பாக, தலசீமியா, அரிவாள் செல் சோகை மற்றும் ஹீமோபிலியா என்னும் குருதி உறையாமல் போகும் தன்மை ஆகிய ரத்த குறைபாடுகளால் தொடர் ரத்த மாற்றம் தேவைப்படுவோருக்காக அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஒவ்வொரு ரத்தப் பிரிவின் தற்போதைய கையிருப்பு குறித்தான நிகழ்நேர நிலையைக் கண்காணிக்க '-ரக்த்கோஷ்' என்னும் ஆன்லைன் தளைத்தை உபயோகப்படுத்துமாறும் அவர் கூறினார். கொவிட்-19 மேலாண்மைக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையின் ஒரு பகுதியாக, 24x7 கட்டுப்பாட்டு அறை ஒன்றை ரத்த சேவைகளுக்காக செஞ்சிலுவை சங்கம் தில்லியில் ஆரம்பித்துள்ளது. 011-23359379, 93199 82104, 93199 82105 என்பது அதன் எண்களாகும்.

இன்றைய தேதி வரை, 15 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன்  பிரதேசங்களில் 14995 ஆயுஷ் வல்லுநர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர், 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் உள்ள 68 மாவட்டங்களில் 3492 தேசிய மாணவர் படை மாணவர்கள் மற்றும் 553 தேசிய மாணவர் படை ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். 4700க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏற்கனவே பயிற்சியில் இணைந்துள்ள நிலையில், அவர்களும் பணியில் அமர்த்தப்பட தயாராகி விடுவார்கள். மேலும், 1,80,000 முன்னாள் ராணுவ வீரர்கள் ராணுவ வாரியங்களால் பணிக்கு அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். நாட்டில் உள்ள 550க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், 40,000க்கும் மேற்பட்ட இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் கொவிட்-19 தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் உள்ள நேரு யுவ கேந்திர சங்கத்தின் 27 லட்சம் தன்னார்வலர்கள், நாட்டு நலப்பணித் திட்டத்தின் தன்னார்வலர்கள் கொவிட்-19 தொடர்பான நடவடிக்கைகளில் உள்ளாட்சி அலுவலர்களுடன் சேர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

 

சில சுகாதாரப் பணியாளர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவதையடுத்தும், வேறு நோய்களுக்காக கொவிட்-19 சாராத பிற மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் பாதிக்கப்படுவதையடுத்தும் மருத்துவமனைகள் மூடப்படுவதை கருத்தில் கொண்டும், கொவிட்-19 சாராத மருத்துவ மையத்தில் பாதிப்புகள் கண்டறியப்பட்டால் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து சுகாதார அமைச்சகம் விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அவற்றை இங்கே காணலாம்:

https://www.mohfw.gov.in/pdf/GuidelinestobefollowedondetectionofsuspectorconfirmedCOVID19case.pdf

மருத்துவமனைகளில் எழும் இத்தகைய பிரச்சினைகளைக் கண்காணிக்கும் பொறுப்பு மருத்துவமனை தொற்றுக் கட்டுப்பாட்டுக் குழுவிடம் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து சுகாதார பணியாளர்களும் தொற்றுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு வழிமுறைகள் குறித்து அறிந்து கொள்வதை இந்தக் குழு உறுதி செய்யும். பின்பற்றப்பட வேண்டிய சில வழிமுறைகள் வருமாறு:

* பாதிக்கப்பட்ட நபர் குறித்து உள்ளூர் சுகாதார அதிகாரிகளுக்கு தகவல் அளித்து, நோயாளியை கொவிட்-19க்கான தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சைக்கு மாற்றவும்.

* அத்தகைய நோயாளிகளுக்கு முகக்கவசம் அணிவித்து, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றி, பிரத்யேக சுகாதாரப் பணியாளர் ஒருவர் தான் அணுக வேண்டும்.

* மருத்துவ நிலைமையின் படி, நிலையான முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றி நோயாளியை பிரத்யேக கொவிட் மையத்துக்கு மாற்ற வேண்டும்.

* மையம் முழுவதும் கிருமி ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

* நோயாளியின் அனைத்துத் தொடர்புகளும் தனிமைப்படுத்தப்பட்டு, நாள்கணக்கில் கண்காணிக்க வேண்டும்.

* அனைத்து நெருங்கிய தொடர்புகளுக்கும் ஹைட்ராக்சிக்ளோரோகுயின் 7 வாரங்களுக்கு அளிக்கப்பட வேண்டும், ஹைட்ராக்சிக்ளோரோகுயினின் பக்கவிளைவுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

23 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில், கடந்த 14 நாட்களில் ஒரு பாதிக்கப்பட்ட நபர் கூட தோன்றாத 61 கூடுதல் மாவட்டங்கள் தற்போது உள்ளன. மகாராஷ்டிராவில் உள்ள லத்தூர், ஒஸ்மானாபாத், ஹிங்கோலி,  வாஷிம் ஆகிய நான்கு மாவட்டங்கள் தற்போது இந்த பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.

நாட்டில் மொத்தமாக 18,601 உறுதிப்படுத்தப்பட்டுள்ள கொவிட்-19 பாதிப்புகள் உள்ளன. 3252 நபர்கள், அதாவது மொத்த பாதிப்பில் 17.48 சதவீதம் பேர் குணமாகி உள்ளனர்/குணமானதற்கு பின் வீட்டுக்கு அனுப்பட்டுள்ளனர். கொவிட்-19 காரணமாக இது வரை 590 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

***


(Release ID: 1617013) Visitor Counter : 228