மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

ஸ்வயம் மற்றும் ஸ்வயம் பிரபா பற்றிய ஆய்வுக் கூட்டத்திற்கு மத்திய மனித வள மேம்பாடு அமைச்சர் தில்லியில் தலைமை தாங்கினார்

Posted On: 20 APR 2020 7:23PM by PIB Chennai

தேசிய ஆன்லைன் கல்வித் தளமான ஸ்வயம் மற்றும் வீடுகளுக்கு நேரடியாக வரும் (DTH) 32 கல்வி தொலைக்காட்சி அலைவரிசைகளான ஸ்வயம் பிரபா ஆகியவை குறித்த விரிவான ஆய்வினை மத்திய மனித வள மேம்பாடு அமைச்சர், திரு. ரமேஷ் பொக்ரியால் 'நிஷாங்க்' இன்று தில்லியில் மேற்கொண்டார்.

இந்தத் திட்டங்களின் வளர்ச்சி குறித்த ஒரு சிறு விளக்கம் அப்போது அளிக்கப்பட்டது. ஸ்வயம் படிப்புகளுக்கும் ஸ்வயம் பிரபா காணொளிகளுக்குமான தேவை பொது முடக்க சமயத்தில் அதிகமாக உயர்ந்துள்ளது.

ஸ்வயம்

1902 படிப்புகள் தற்போது ஸ்வயத்தில் கிடைக்கின்றன. தொடக்கத்தில் இருந்து இவை 1.56 கோடி மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. தற்சமயம், அதில் உள்ள 574 படிப்புகளை 26 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பயில்கின்றனர். மொத்தத்தில், 1509 படிப்புகள் ஸ்வயத்தில் சுய கற்றலுக்காகக் கிடைக்கின்றன.

இதில் இருந்து இன்னும் பலன்களை அடைவதற்காக, 1900 ஸ்வயம் படிப்புகள் மற்றும் 60000 ஸ்வயம் பிரபா காணொளிகளை, 10 மாநில மொழிகளில் மொழி பெயர்த்து மாணவர்களுக்குக் கிடைக்கச் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மொத்த சேர்க்கை விகிதத்தை அதிகரிப்பதற்காக, ஆன்லைன் மற்றும் தொலைதூரக் கல்வி குறித்த விதிமுறைகளைத் தயார் செய்யுமாறு பல்கலைக்கழக மானியக் குழு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஸ்வயம் பிரபா

ஜிசாட்-15 செயற்கைக்கோளைப் பயன்படுத்தி உயர் தர கல்வி நிகழ்ச்சிகளை 24x7 ஒளிபரப்புவதற்காக வீடுகளுக்கு நேரடியாக வரும் (DTH) அர்ப்பணிக்கப்பட்ட 32 கல்வி தொலைக்காட்சி அலைவரிசைகளின் குழுமமே ஸ்வயம் பிரபா ஆகும். நாள் தோறும், குறைந்தபட்சம் 4 மணி நேரத்துக்காவது புதிய நிகழ்ச்சிகள் இருக்கும். மாணவர்கள் தங்களுக்கு உகந்த நேரத்தைத் தேர்வு செய்து கொள்ள அனுமதிப்பதற்காக, இவை ஒரு நாளைக்கு 5 முறைகள் மறு ஒளிபரப்பு செய்யப்படும்.



(Release ID: 1616768) Visitor Counter : 148