பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

மத்திய நிர்வாக தீர்ப்பாய அமர்வுகளின் செயல்பாடு 03.5.2020 வரை ரத்து செய்யப்பட்டுள்ளன

Posted On: 21 APR 2020 3:00PM by PIB Chennai

ஊரடங்கு தொடர்பாக அரசு எடுக்கும் முடிவுகளைப் பொறுத்து மத்திய நிர்வாகத் தீர்ப்பாய அமர்வுகள் செயல்படுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி பரிசீலிக்கப்படும் என்று 14. 04. 2020 அன்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது என்பதை நினைவு கூலாம்.

 

குறிப்பிட்ட சில செயல்பாடுகளுக்காக ஊரடங்கின் சில நிபந்தனைகளைத் தளர்த்துவதாக அரசு அறிவித்துள்ளது. அது ஏழை மக்களுக்கு வாழ்வாதாரம் அளிப்பதற்கான நடவடிக்கையாக மட்டுமல்லாமல், அத்தியாவசியப் பொருள்கள் -- குறிப்பாக உணவு தானியங்கள் வழங்குதல்; அவற்றின் போக்குவரத்து உறுதி செய்யப்படுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டவை. பொதுவாக, பொதுமக்களுடன் எந்தவிதமான தனிநபர் தொடர்பும் இல்லாமல், வேறு எவருமே உள்ளே நுழையாத அளவிற்கு, மிகுந்த கட்டுப்பாட்டுடன் கூடிய முறையில் அலுவலகங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

உயர்நீதிமன்றங்கள் செயல்படவில்லை; விதிவிலக்கான வழக்குகள் காணொளிக் காட்சி மூலமாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன என்று இதுவரை பெறப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலும் கொரோனா தொற்று அதிகமாக உள்ள ஹாட்ஸ்பாட்களாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில்தான், நீதிமன்ற அமர்வுகள் (Benches) உள்ளன. இந்த நிலைமையில் வழக்குகளை பதிவு செய்வதோ, வழக்குகளை தொடர்வதோ கடினமாக இருக்கும் என்று வழக்குரைஞர் சங்கப் பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.

 

எனவே, மத்திய நிர்வாகத் தீர்ப்பாய அமர்வுகளின் செயல்பாடுகள், விசாரணைகள் ஆகியவை 03.05.2020 வரை ரத்து செய்யப்படுகின்றன. ஏற்கனவே விடுமுறை என அறிவிக்கப்பட்ட நாட்களிலும், விடுமுறை காலத்திலும் பணிபுரிவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி, அமர்வுகள் செயல்பட ஆரம்பித்த பிறகு பரிசீலிக்கப்படும்.


(Release ID: 1616746) Visitor Counter : 251