உள்துறை அமைச்சகம்

நிலைமையை ஆராய்ந்து, திறமையாகப் போரிட்டு கொவிட்-19 பரவலைத் தடுப்பதற்கு மாநில முயற்சிகளை மேம்படுத்த 6 அமைச்சரவைக் குழுக்களை மத்திய அரசு அமைத்தது

Posted On: 20 APR 2020 1:47PM by PIB Chennai

மேற்குவங்கம், மகாராஷ்டிராவுக்கு தலா இரண்டு, மத்திய பிரதேசம், ராஜஸ்தானுக்கு தலா ஒன்று என ஆறு அமைச்சரவைக் குழுக்களை (IMCT)  மத்திய அரசு அமைத்துள்ளது. பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, நிலைமையை அந்தந்தப் பகுதிகளிலேயே கண்டு ஆராய்ந்து, மாநில அரசுகளுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை அளித்து, மத்திய அரசுக்கு தங்களின் அறிக்கையை அளிக்குமாறு ஆறு அமைச்சரவைக் குழுக்கள் (IMCT) அமைக்கப்பட்டுள்ளன.

இந்தூர் (மத்தியப்பிரதேசம்), மும்பை மற்றும் புனே (மகாராஷ்டிரா), ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்) மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள ஹவுரா, மேதினிப்பூர் கிழக்கு, 24 பர்கனாஸ் வடக்கு, டார்ஜீலிங் கலிம்பொங்க் மற்றும் ஜல்பாய்குரி ஆகிய இடங்களில் நிலைமை மோசமாக உள்ளது. வழிகாட்டுதல்களின் படி பொது முடக்கக் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது தொடர்பான புகார்கள், அத்தியாவசியப் பொருள்களின் விநியோகம், தனி நபர் இடைவெளி, சுகாதார உள்கட்டமைப்பின் தயார்நிலை, சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பு, மற்றும் தொழிலாளர்கள், ஏழை மக்களுக்கான நிவாரண முகாம்களின் நிலை ஆகியவற்றின் மீது அமைச்சரவைக் குழுக்கள் கவனம் செலுத்தும்.

ஆபத்து அதிகமாக உள்ள மாவட்டங்கள், ஆபத்து அதிகமாகிக் கொண்டிருக்கும் இடங்கள் அல்லது அதிக பாதிப்புகள் உள்ள இடங்களில் விதிமீறல்கள் நடக்க அனுமதிக்கப்பட்டு, கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இருந்தால், அது அந்த மாவட்டங்களிலும் நாட்டின் பிற பகுதிகளிலும் உள்ள மக்களுக்கு மோசமான சுகாதார ஆபத்தில் போய் முடியும் என்பதை கவனத்தில் கொள்ளலாம். முக்கிய அபாயகரமான மாவட்டங்களில் அத்தகைய செயல்கள் நடப்பதை ஆய்வு செய்து, இந்த இடங்களில் நிலைமை மோசமாக இருப்பதை அறிந்த பிறகு, தன்னுடைய நிபுணத்துவத்தை அங்கே பயன்படுத்தவேண்டுமென்பது மத்திய அரசுக்கு தெளிவானது.

 

பேரிடர் மேலாண்மை சட்டம் 2005இன் 35(1), 35(2)(a), 35(2)(e) மற்றும் 35(2)(i) பிரிவுகளின் கீழ் தனக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்தக் குழுக்களை மத்திய அரசு அமைத்தது. பொது முடக்கத்தின் கடுமையான அமலாக்கம் மற்றும் இதர நடவடிக்கைகள் குறித்து பொது முடக்க நடவடிக்கைகளின் உத்தரவுகளிலும், விதிமுறைகள்/ஒருங்கிணைந்த திருத்திய விதிமுறைகளிலும் மீண்டும் மீண்டும் கூறப்பட்டிருந்தது; மாநில அரசுகளும் யூனியன் பிரதேசங்களும் விதிமுறைகளில் இருப்பதை விட கண்டிப்பான நடவடிக்கைகளை அமல்படுத்தலாமே தவிர பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005இன் கீழ் வெளியிடப்பட்டிருந்த விதிமுறைகளை அவர்கள் நீர்த்துப் போக செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ரிட் மனு (சிவில்) எண் 468/ 2020இன் மீதான தனது உத்தரவில் மாண்புமிகு உச்ச நீதிமன்றம் இவ்வாறு கூறியிருந்தது: "இந்த நாட்டின் அனைத்து மாநில அரசுகளும், பொது அலுவலர்களும் மற்றும் மக்களும், மத்திய அரசு பொது நன்மை கருதி வெளியிட்ட அறிவிக்கைகளையும், உத்தரவுகளையும் முழுமையாகக் கடைப்பிடிப்பார்கள் என நாங்கள் நம்புகிறோம், எதிர்பார்க்கிறோம்." உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய இந்த அவதானிப்பு குறித்து அனைத்து மாநில/யூனியன் பிரதேச அரசுகளுக்கு தெரியப்படுத்தப்பட்டது.

மேற்கண்ட அமைச்சரவைக் குழுக்கள், பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005இன் கீழ் வெளியிடப்பட்டிருந்த விதிமுறைகளின் படி பொது முடக்கக் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது மற்றும் பின்பற்றுவது தொடர்பான தங்களின் மதிப்பீட்டின் மீது கவனம் செலுத்தும்; மேலும், அத்தியாவசியப் பொருள்களின் விநியோகம், மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்லும் போது கடைப்பிடிக்கப்படும் தனி நபர் இடைவெளி, சுகாதார உள்கட்டமைப்பின் தயார்நிலை மற்றும் மாவட்டத்தின் மாதிரிப் புள்ளிவிவரங்கள், சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பு, பரிசோதனைக் கருவிகள், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், முகக்கவசங்கள் மற்றும் இதர பாதுகாப்பு உபகரணங்களின் இருப்பு மற்றும் தொழிலாளர்கள், ஏழை மக்களுக்கான நிவாரண முகாம்களின் நிலை ஆகியவற்றின் மீதும் அவை கவனம் செலுத்தும்.

அமைச்சரவைக் குழுக்கள் தங்கள் பயணங்களை விரைவில் தொடங்கும்.

******



(Release ID: 1616452) Visitor Counter : 350