சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கோவிட்-19 குறித்த அண்மைச் செய்திகள்

Posted On: 16 APR 2020 6:18PM by PIB Chennai

கோவிட்-19 நோய்த் தாக்குதலைத் தடுத்தல், கட்டுப்படுத்துதல் மற்றும் நோயாளிகளைக் கையாள்வதில் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் கூட்டு முயற்சியுடன் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவை மிக உயர்நிலையில் மறுஆய்வு செய்யப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.

நாட்டில் கோவிட்-19 கட்டுப்படுத்துதல் தொடர்பாக, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் நேற்று உலக சுகாதார அமைப்பின் சுகாதார அலுவலர்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் களநிலை அதிகாரிகளுடன் காணொளிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இணை அமைச்சர் திரு. அஸ்வினிகுமார் சௌபே உள்ளிட்டோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

தொகுப்புகள் அளவில் மற்றும் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் நுண் திட்டங்களை உருவாக்குவதற்கு மாவட்ட அளவில் மாநிலங்கள் / யூனியன் பிரதேச அதிகாரிகளுடன்  தொழில்நுட்ப ஒருங்கிணைப்பில் உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் செயலாற்றி வருவது குறித்து டாக்டர் ஹர்ஷ் வர்த்தனிடம் தெரிவிக்கப்பட்டது. மாவட்டங்களில் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்வதற்கான அணுகுமுறைகளை உருவாக்குவதிலும் அவர்கள் உதவி வருவதாக அமைச்சருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போதைய கண்காணிப்பு நடைமுறைகளை பலப்படுத்துதல் மற்றும் கருத்தறிதல் அடிப்படையில் நோய் பரவும் சூழ்நிலைகள், மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யும் நடைமுறைகளைப் பலப்படுத்துவதற்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தினருடன் உலக சுகாதார அமைப்பின் போலியோ கண்காணிப்புக் கட்டமைப்பு அணியினர் இணைந்து பணியாற்றுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டது.

முடக்கநிலை காலத்தில் பாதுகாப்பான குடிநீரைக் குடிப்பது தொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் பொது ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது. குடிநீர் வழங்கல் நிலையை மேம்படுத்த வேண்டும் என்றும், நிவாரண முகாம்கள் மற்றும் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் குடிநீர் வழங்க சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. உரிய வகையில் குளோரின் மாத்திரைகள், பிளீச்சிங் பவுடர் மற்றும் ஹைட்ரோகுளோரைட் கரைசல் ஆகியவற்றைப் பயன்படுத்துமாறும் கூறப்பட்டுள்ளது.

நோய்த்தொற்று காலத்தில், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு எழும் அத்தியாவசிய மருத்துவ சேவை கோரிக்கைகளை பூர்த்தி செய்வது தொடர்பாக அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு விரிவான வழிகாட்டுதல்களை சுகாதாரம் மற்றும் குடும்ப அமைச்சகம் அனுப்பியுள்ளது.

இன்றைய நிலவரத்தின்படி நாட்டில் 12,380 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவிட் பாதிப்பால் 414 பேர் மரணம் அடைந்துள்ளனர். 1489 பேர் குணமடைந்துள்ளனர் / குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் கோவிட் -19 பாதிப்பு ஏற்பட்டவர்களில் மரண விகிதம் 3.3 சதவீதமாக உள்ளது. இதுவரையில் குணமானவர்களின் அளவு 12.02 சதவீதமாக உள்ளது.

இப்போதைய நிலையில், 325 மாவட்டங்களில் எந்தப் பாதிப்பும் பதிவாகவில்லை. புதுவை மாஹேயில் கடந்த 28 நாட்களாக, யாருக்கும் நோய் பாதிப்பு பதிவாகவில்லை.



(Release ID: 1615112) Visitor Counter : 295