மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, கல்லூரிகள் / கல்வி நிலையங்கள் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் கல்வி நலனை உறுதி செய்யுமாறு அகில இந்திய தொழில்நுட்பக் குழுமம் (AICTE) அறிவுறுத்தல்; முடக்கநிலை காலத்தில் மாணவர்களிடம் கட்டணம் கேட்கக் கூடாது என்றும் உத்தரவு

Posted On: 16 APR 2020 4:29PM by PIB Chennai

கோவிட்-19 பாதிப்பால் நாட்டில் இப்போது 2020 மே 3ஆம் தேதி வரையில் முடக்கநிலை அமல் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில் மாணவர்களின் நலன்களுக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமத்திற்கு (All India Council of Technical Education - AICTE) மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தி இருந்தது. அதன்படி, கல்லூரிகள் / கல்வி நிலையங்களுக்கு சில அறிவுறுத்தல்களை ஏ.ஐ.சி.டி.இ. அளித்துள்ளது. கோவிட்-19 பாதிப்பு சூழ்நிலையில் பாதுகாப்பை உறுதி செய்தல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்ஆகியவற்றில் ஈடுபடுவது தான் அனைத்து குடிமக்களின் அடிப்படைக் கடமையாக உள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது. அதேபோல கல்வி நிலையங்களின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், தங்கள் கல்லூரிகள் / கல்வி நிலையங்கள் தொடர்பானவர்களின் ஆரோக்கியம் மற்றும் அவர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் முக்கிய பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு, அனைத்துக் கல்லூரிகள் / கல்வி நிலையங்கள் கடுமையாகப் பின்பற்றுவதற்கு பின்வரும் வழிகாட்டுதல்கள் அளிக்கப்படுகின்றன:

முடக்கநிலை காலத்தில் மாணவர்கள் சேர்க்கைக்கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களைச் செலுத்த வேண்டும் என சில தன்னாட்சிக் கல்வி நிலையங்கள் வற்புறுத்தி வருவதாக ஏ.ஐ.சி.டி.இ.-க்குத் தகவல்கள் வந்துள்ளன. இப்போதைய முடக்கநிலை நீக்கப்பட்டு, இயல்புநிலை திரும்பும் வரையில் கட்டணம் செலுத்துமாறு கல்லூரிகள் / கல்வி நிலையங்கள் வற்புறுத்தக் கூடாது என்று தெளிவுபடுத்தப் படுகிறது.

கல்விப்பணியில் உள்ள அலுவலர்கள் மற்றும் இதர அலுவலர்களுக்கு முடக்கநிலை காலத்தில் பல்வேறு கல்வி நிலையங்கள் சம்பளம் வழங்கவில்லை என்றும் தெரிய வந்துள்ளது. சில கல்வி நிலையங்கள்  ஆசிரியர்கள் / அலுவலர்களை பணிநீக்கம் செய்திருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. ஆசிரியர்கள் / அலுவலர்களுக்கு முடக்கநிலை காலத்துக்கு சம்பளம் மற்றும் இதர நிலுவைத் தொகைகளை வழங்க வேண்டும் என்றும், முடக்கநிலை அமல் காலத்தில் யாரையாவது பணிநீக்கம் செய்திருந்தால் அவற்றைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் தெளிவுபடுத்தப்படுகிறது.

பல்வேறு சிந்தனை குழுக்கள் / தனிப்பட்ட நபர்கள் சமூக ஊடக தளங்களில் போலிச் செய்திகளைப் பரப்புவதால் தவறான தகவல்கள், புரளிகள் பரவுகின்றன. அதுபோன்ற போலித் தகவல்களை ஊக்குவிக்காமல் இருப்பது, அதுபற்றி அதிகாரிகளுக்குத் தகவல் தருவது தொடர்புடைய அனைவரின் முதன்மையான கடமையாக உள்ளது.

இப்போது அமலில் உள்ள முடக்கநிலை மற்றும் இன்டர்நெட் கட்டுப்பாடுகள் காரணமாக, 2020-21 ஆம் ஆண்டுக்கான பிரதமரின் சிறப்புக் கல்வி உதவித் தொகை திட்டம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. முடக்கநிலை நீக்கப்பட்டதும், முன்பு இருந்ததைப் போலவே இந்தத் திட்டம் தொடரப்படும் என்று தெளிவுபடுத்தப்படுகிறது.

முடக்கநிலை நீட்டிப்பு காலத்தில், நடப்புக் கல்விப் பருவத்திற்கான ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என்றும் தெளிவுபடுத்தப்படுகிறது.

முடக்கநிலை அமல் காரணமாக சில மாணவர்கள் கோடைப் பருவ, பணிச் சூழல் பயிற்சியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். வீட்டில் இருந்தபடியே அந்தப் பயிற்சியை எடுத்துக் கொள்ளலாம் என்று யோசனை தெரிவிக்கப்படுகிறது.

சில மாணவர்களால் இன்டர்நெட் சேவைகளைப் பெற முடியாத நிலையில், மற்ற கல்லூரிகள் / கல்வி நிலையங்களின் மாணவர்கள் தங்களிடம் உள்ள இன்டர்நெட் வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ள கல்லூரிகள் / கல்வி நிலையங்களுக்கு யோசனை தெரிவிக்கப்படுகிறது.

 



(Release ID: 1615094) Visitor Counter : 189