பிரதமர் அலுவலகம்
கோவிட்- 19 தொற்றுக்கு எதிரான இந்தியாவின் போரில் நான்கு வாரங்களில் நான்காவது முறையாக நாட்டு மக்களுக்கு பிரதமர் உரையாற்றினார்
பொது முடக்கம் மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று அறிவித்தார்
அதிக அபாயமுள்ள இடங்களும், அதிக பாதிப்புள்ள இடங்களும் தொடர் கண்காணிப்பில் இருக்கும்
குறைந்த அபயமுள்ள இடங்களில் ஏப்ரல் 20ம் தேதி முதல் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்
முதியவர்களைப் பராமரிப்பது மற்றும் சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது உட்பட ஏழு விஷயங்களுக்கு பிரதமர் ஆதரவு கோரினார்
Posted On:
14 APR 2020 1:04PM by PIB Chennai
பொது முடக்கம் மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்படும் என பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அறிவித்தார். இதற்கு முந்தைய 21 நாள் பொது முடக்கம் ஏப்ரல் 14, 2020 அன்று முடிகிறது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர், பல மாநிலங்கள், வல்லுனர்கள் மற்றும் மக்களின் ஆலோசனைகளை மனதில் கொண்டு பொது முடக்கத்தை நீட்டிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
தொடர்ந்து கண்காணிப்போடு இருக்குமாறும் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும் அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார்.
சில குறிப்பிட்ட நடவடிக்கைகளுக்காக, குறைவான அபாயம் உள்ள இடங்கள் ஏப்ரல் 20ம் தேதி முதல் திறக்கப்படலாம் என பிரதமர் தெரிவித்தார்.
"பொது முடக்கம் ஏப்ரல் 20ம் தேதி வரை எவ்வாறு கடைபிடிக்கப்படுகிறது என ஒவ்வொரு நகரமும், ஒவ்வொரு காவல் நிலையமும், ஒவ்வொரு மாவட்டமும், ஒவ்வொரு மாநிலமும் மதிப்பிடப்படும். இந்த தேர்வில் வெற்றி பெறும் பகுதிகள், அதிக பாதிப்படைந்த பகுதி (ஹாட்ஸ்பாட்) வரையறைக்குள் இல்லை என்றாலோ மற்றும் அதிக பாதிப்படையும் வாய்ப்புகள் குறைவாக இருந்தாலோ, சில குறிப்பிட்ட நடவடிக்கைகளுக்காக, ஏப்ரல் 20ம் தேதி முதல் திறக்கப்படலாம்," என்று பிரதமர் தெரிவித்தார்.
"ஆனால், பொது முடக்க விதிகளை மீறினாலோ, அல்லது கொரோனா வைரஸ் பரவக்கூடிய சாத்தியம் இருந்தாலோ, அனுமதிகள் உடனடியாக விலக்கிக் கொள்ளப்படும்," என அவர் எச்சரித்தார்.
இதுபற்றிய விரிவான வழிமுறைகள் அரசால் நாளை வெளியிடப்படும்.
ஏழைகள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டே குறைந்த பாதிப்புள்ள இடங்களில் தடைகள் விலக்கிக் கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.
"தினக்கூலி வாங்குபவர்கள், தினமும் சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டு தேவைகளை நிறைவேற்றிக் கொள்பவர்கள், என்னுடைய குடும்பத்தினர் ஆவார்கள். அவர்களது வாழ்க்கையின் சிரமங்களை குறைப்பது என்னுடைய அதி முக்கிய முன்னுரிமைகளில் ஒன்று. பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வு திட்டத்தின் மூலம் அவர்களுக்கு உதவ தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்துள்ளது. புதிய வழிகாட்டுதல்களை உருவாக்கும் போதும் அவர்கள் நலன் கருத்தில் கொள்ளப்படும்," என்றார் அவர்.
பாபா சாகேப் பீம்ராவ் அம்பேத்கருக்கு அவரது பிறந்த நாளான இன்று அஞ்சலி செலுத்திய பிரதமர், "நீங்கள் எதிர்கொண்ட சிக்கல்களை நான் நன்கு அறிவேன்- சில பேருக்கு உணவு, சிலருக்கு ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு செல்லுதல், மேலும் சிலருக்கு வீடுகள் மற்றும் குடும்பங்களை விட்டு வெளியே தங்குதல். ஆனால், நமது நாட்டு நலனை கருத்தில் கொண்டு, ஒரு ஒழுக்கமான ராணுவ வீரரை போல நீங்கள் உங்களுடைய கடமைகளை செய்கிறீர்கள். நம் அரசியலமைப்பு பேசும் 'இந்திய மக்களாகிய நாம்', என்பதன் சக்தி இது தான்," என்றார்.
கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்ட முதல் நபர் நாட்டில் தோன்றும் முன்பே, இந்தியா மிகவும் சுறுசுறுப்பாக செயலில் இறங்கியதாக பிரதமர் தெரிவித்தார். சர்வதேச பயணிகளின் சோதனை, சர்வதேச பயணிகளை 14 நாள் கட்டாய தனிமைப்படுத்துதல், வணிக வளாகங்கள், கேளிக்கை கூடங்கள், உடற்பயிற்சி கூடங்கள் ஆகியவற்றை மூடுதல் ஆகியவை ஆரம்ப கட்டங்களிலேயே செயல்படுத்தப்பட்டதாக அவர் கூறினார். ஏப்ரல் 14ம் தேதி அன்று முடிவடைய இருந்த தேசிய பொது முடக்கத்துக்குள்ளும் இந்தியா மிகவும் செயல்திறனுடன் இறங்கியதாக பிரதமர் தெரிவித்தார்.
கோவிட்-19 தொற்று பாதிக்கப்பட்ட உலகின் பெரிய சக்தி வாய்ந்த நாடுகளோடு ஒப்பிடும் போது, இந்தியா மிகவும் சிறப்பாக கையாளும் நிலைமையில் இருக்கிறது என்று அவர் கூறினார்.
"ஒரு மாதத்துக்கு, ஒன்றரை மாதத்துக்கு முன்னர், பல நாடுகளில் கொரோனா தொற்று இந்தியாவுக்கு சமமாக இருந்தது. ஆனால் இன்று, அந்த நாடுகளின் கொரோனா தொற்று இந்தியாவை விட 25 முதல் 30 மடங்கு அதிகமாக உள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் அந்த நாடுகளில் பரிதாபமாக இறந்துள்ளனர். இந்தியா மட்டும் விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்காமல், முழுமையான, ஒருங்கிணைந்த அணுகுமுறையைக் கடைபிடிக்காமல் இருந்திருந்தால், இந்தியாவில் இன்றைய நிலைமை முற்றிலும் மாறுபட்டதாக இருந்திருக்கும்," என்று அவர் தெரிவித்தார்.
பொது முடக்கத்தில் இருந்து இந்தியா பயனடைந்திருக்கிறது என்று பிரதமர் கூறினார். எதிர்கொள்ளூம் பொருளாதார சிக்கல்களைத் தவிர, இது நிச்சயமாக தெளிவான பாதைதான். ஏனென்றால், இது நாட்டில் எண்ணற்ற உயிர்களை பாதுகாத்துள்ளது என்றார் அவர்.
"பொருளாதார நோக்கு நிலையில் இருந்து வேண்டுமானால், அதிக விலை கொடுத்திருப்பதாக தற்போது சந்தேகத்துக்கு இடமின்றி தோன்றுகிறது. ஆனால், இந்திய மக்களின் உயிரோடு அளவிடும் போது, இது ஒரு ஒப்பிடுதலே அல்ல. நமது அளவான வளங்களோடு இந்தியா தேர்ந்தெடுத்த பாதை இன்று ஒட்டுமொத்த உலகத்துக்கும் பேசும் பொருளாக மாறி இருக்கிறது," என்று அவர் கூறினார்.
போதுமான அளவுக்கு மருந்துகள், உணவு மற்றும் இதர அத்தியாவசிய பொருள்கள் கையிருப்பில் இருப்பதாக அவர் நாட்டுக்கு உறுதியளித்தார். சுகாதார உள்கட்டமைப்பும் மேலும் பலப்படுத்தப்படுவதாக பிரதமர் உறுதி கூறினார்.
"ஜனவரி மாதம் கொரோனோ வைரஸ் பரிசோதனைக்கு ஒரே ஒரு ஆய்வுக்கூடம் இருந்த நிலையில், தற்போது 220-க்கும் மேற்பட்ட ஆய்வுக்கூடங்கள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு 10,000 நோயாளிகளுக்கு 1500 முதல் 1600 படுக்கைகள் தேவை என்பது உலக நாடுகளின் அனுபவத்தில் தெரிந்து கொண்ட தகவல் ஆகும். இந்தியாவில், இப்போது ஒரு லட்சத்துக்கும் அதிகமான படுக்கைகளுக்கு நாம் ஏற்பாடு செய்யதுள்ளோம். இது மட்டுமல்லாமல், 600-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் கோவிட்- 19 தொற்று சிகிச்சைக்காக செயல்பட்டு வருகின்றன. நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த நிலையில், இந்த வசதிகள் மேலும் கூடுதல் வேகத்தில் அதிகரிக்கப்பட்டு வருகின்றன," என்று அவர் தெரிவித்தார்.
இந்த பெரும் தொற்றுக்கு எதிரான போரில், ஏழு விஷயங்களை பின்பற்றுமாறு மக்களை பிரதமர் கேட்டுக்கொண்டார்.
முதலாவது, முதியவர்களை, குறிப்பாக கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மீது தனிப்பட்ட கவனம் செலுத்துவது.
இரண்டாவது, பொது முடக்கத்தின் போது லட்சுமணக் கோட்டையும், தனி நபர் இடைவெளியையும் முற்றிலுமாகப் பின்பற்றுவது; தவறாமல், வீடுகளில் செய்யப்பட்ட முகக்கவசங்களை பயன்படுத்துங்கள்.
மூன்றாவது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுஷ் அமைச்சகம் பிறப்பித்துள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவது.
நான்காவது, கொரோனோ தொற்று பரவாமல் தடுக்க, ஆரோக்கிய சேது கைபேசி செயலியை பதிவிறக்கம் செய்வது. இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு மற்றவர்களையும் ஊக்குவியுங்கள்.
ஐந்தாவது, இயன்றவரையில், ஏழைக் குடும்பங்களுக்கு உதவுவது; குறிப்பாக, அவர்களது உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வது.
ஆறாவது, தொழில் நிறுவனங்கள் அல்லது வணிக நிறுவனங்களில் பணியாற்றுவோர் மீது கருணை காட்டுவது, அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும்படி விட்டு விடாதீர்கள்.
ஏழாவது, நமது மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல் துறையினர் ஆகிய நாட்டின் கொரோனோ வீரர்கள் மீது அதிக மரியாதை செலுத்துவது.
***
(Release ID: 1614421)
Visitor Counter : 317
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam