விவசாயத்துறை அமைச்சகம்

தற்போதைய கோவிட்-19 நெருக்கடிக்குப் பிறகு வேளாண் ஏற்றுமதியை மீண்டும் புதுப்பிக்க கலந்துரையாடல்களை அரசு தொடங்கி உள்ளது

Posted On: 14 APR 2020 2:11PM by PIB Chennai

கோவிட்-19 நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தின் காரணமாக வேளாண் துறையில் ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து வேளாண் மற்றும் வேளாண்மை சார்ந்த ஏற்றுமதியாளர்களோடு அரசு கலந்துரையாடலைத் தொடங்கி உள்ளது.  மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமரின் அறிவுரையைத் தொடர்ந்து வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நல்வாழ்வுத் துறையின் செயலாளர் திரு சஞ்சய் அகர்வால் நேற்று காணொளி மூலம் கலந்துரையாடலை மேற்கொண்டார்.  வேளாண் மற்றும் வேளாண்மை சார்ந்த சரக்குகளின் ஏற்றுமதியாளர்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சனைகள் குறித்து நேரடியாத் தெரிந்து கொள்வதற்காக இந்த கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.  தற்போதைய கோவிட்-19 தொற்று நெருக்கடி தொடர்ந்தாலும்கூட ஏற்றுமதியாளர்களின் பிரச்சனைகளை விரைவில் தீர்த்து வைப்பது மற்றும் அரசின் முயற்சிகளுக்கு தேவையான நடவடிக்கைகளைத் தொடங்குவது குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.  இந்தக் கூட்டத்தில் ஏற்றுமதியாளர்கள் பழங்கள், காய்கறிகள், பாஸ்மதி அரிசி மற்றும் பிற அரிசி வகைகள், விதைகள், பூக்கள், தாவரங்கள், இயற்கை விவசாய விளைபொருட்கள், வேளாண் உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் உள்ளிட்ட வேளாண் சரக்குகளை உற்பத்தி செய்பவர்கள் / ஏற்றுமதி செய்பவர்களின் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகள்  கலந்து கொண்டனர்.

பங்கேற்பாளர்கள் பல்வேறு பொதுவான மற்றும் குறிப்பிட்ட பிரிவு தொடர்பான பிரச்சனைகளை சுட்டிக்காட்டினர். விவசாய வேலைகளுக்கான ஆட்கள் கிடைப்பது மற்றும் அவர்களின் பயணம், மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து சிக்கல், மண்டிகள் மூடப்பட்டதால் கச்சாப் பொருட்கள் கிடைப்பதில் உள்ள பற்றாக்குறை, தாவரத் தூய்மைக்கான சான்றிதழ், கூரியர் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால் சரக்கு அனுப்பும் ஆவணங்கள் கிடைப்பதில் உள்ள சிக்கல், சரக்கு அனுப்பும் சேவைகள் இல்லாத நிலைமை, துறைமுகங்கள் / சரக்கு ஏற்றி இறக்கும் தளங்கள் ஆகியவற்றை அணுகமுடியாது இருத்தல், ஏற்றுமதி / இறக்குமதிக்காக சரக்குகளுக்கு அனுமதி பெற முடியாத நிலை என பொதுவான பிரச்சனைகளை அனைத்துவகையான வேளாண் சரக்குகளின் ஏற்றுமதியாளர்களும் எடுத்துரைத்தனர்.

உணவு பதப்படுத்துதல், வாசனைத் திரவியங்கள், முந்திரி, இயந்திரம்,  உபகரணம் ஆகியவை தொடர்பான தொழில்களின் பிரதிநிதிகள் 25-30  சதவீத தொழிலாளர்களுடன் தொழிற்சாலைகளைத் திறக்க / செயல்பட அனுமதி பெற்றுத் தருமாறு கேட்டுக் கொண்டனர். அவ்வாறு அனுமதி பெற்றுத் தந்தால் தொழிற்சாலைகளை இயக்குவதில் முறையான சுகாதார ஆலோசனைகளைக் கடைபிடிப்பதாக அவர்கள் உறுதி அளித்தனர்.

உள்நாட்டு போக்குவரத்து பிரச்சனையை உள்துறை அமைச்சகம் கவனத்தில் கொண்டு தேவையான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.  தொடர்ச்சியாக / முறையாக தாவரத்தூய்மை சான்றிதழ்களை வழங்குவதற்கும் ஆன்லைன் சான்றிதழ்களை அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

துறைமுகம், கடல்வழி சரக்குச் சேவைகள், கூரியர் சேவைகள் தொடர்பான பிரச்சனைகள் கவனத்தில் கொள்ளப்பட்டு அவை தீர்த்து வைக்கப்படும் என்று திரு அகர்வால் தெரிவித்தார்.  தொழிற்சாலைகளைத் திறந்து இயக்குவதற்கும் வேளாண் தொழில் பிரிவுகள் சார்ந்த குறிப்பிட்ட பிரச்சனைகளும் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அவை முறையாகத் தீர்த்து வைக்கப்படும் என்று செயலாளர் உறுதி அளித்தார்.



(Release ID: 1614363) Visitor Counter : 170