அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கொவிட்-19ஐ திறமையாகக் கட்டுப்படுத்த நோய் தணிக்கும் தீர்வுகளை உருவாக்குமாறு அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்ற விஞ்ஞானிகளை டாக்டர் ஹர்ஷ் வர்தன் வலியுறுத்தினார்

Posted On: 12 APR 2020 7:17PM by PIB Chennai

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பெரும் பரவலைத் தடுக்க அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் (CSIR) மற்றும் அதன் அங்கமான 38 ஆய்வகங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகளை, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத் தலைமை இயக்குநர் டாக்டர் ஷேகர் சி மண்டே மற்றும் அனைத்து CSIR ஆய்வக இயக்குநர்களுடன் காணொளிக் காட்சி மூலம் இன்று ஆய்வு நடத்தினார்.

"இந்தியா தனது அறிவியல் சமூகம் மீது பெரும் எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளது. தேவையான இந்த சமயத்தில் களத்துக்கு வந்து, அதன் பணியை சிறப்பாக இந்த சமூகம் செய்யும் என நான் உறுதியாக நம்புகிறேன்," என்று CSIR விஞ்ஞானிகளிடம் டாக்டர் ஹர்ஷ் வர்தன் வலியுறுத்திக் கூறினார். கொவிட் நோயாளிகளின் கசவு நீர்மச் சோதனை (Swab test) மாதிரிகளை ஆய்வு செய்வதில் CSIR ஆய்வகங்கள் ஈடுபட்டு இருப்பதற்கு பாராட்டு தெரிவித்தார்.

"எதிர்ப்பு நடவடிக்கையையும் நோயால் பாதிக்கப்படக்கூடிய மக்களையும் கண்டறிவதில் மரபணு வரிசைப்படுத்துதல் மிகவும் முக்கியம்," என்று டாக்டர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார். "26 வருடங்களுக்கு முந்தைய போலியோ ஒழிப்பு இயக்கத்தின் போது நடைபெற்ற மரபணு வரிசைப்படுத்துதல் முயற்சிகள் எனக்கு நினைவுக்கு வருகின்றன. போலியோ இயக்கத்தின் இறுதி கட்டத்தில், தீவிர தசை இயக்கக் குறைபாடு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நபர்களைக் கண்டறிய நாடெங்கிலும் கடுமையான கண்காணிப்பு செய்யப்பட்டது. அப்போது கூட, போலியோ வைரஸின் பயண வரலாற்றை கண்டுபிடிக்க மரபணு வரிசைப்படுத்துதல் பயன்படுத்தப்பட்டது. இது போலியோ ஒழிப்புக்கு உதவியது," என்றார் அவர்.

வெண்டிலேட்டர்கள் மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டல் கருவிகளின் தேவைக்கான வேலைகளில் CSIR-NAL  கூட்டமைப்பு, BHEL மற்றும் BEL அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டதற்கும், 3D அச்சிடப்பட்ட முகப் பாதுகாப்புக் கருவிகள், முகக்கவசங்கள், அங்கிகள் மற்றும் இதர பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை உருவாக்கியதற்கும் அவர் பாராட்டு தெரிவித்தார். " இவை அனைத்தும் அடுத்த சில வாரங்களில் நமக்கு கைகொடுக்கும்" என்றார் அமைச்சர்.

 

அதே சமயம், குறுகிய கால அவகாசத்தை கருத்தில் கொண்டு கொவிட்-19 தணிக்கும் தீர்வுகளை CSIR விஞ்ஞானிகள் உருவாக்க வேண்டும் என்று அவர் எச்சரித்தார்.



(Release ID: 1613829) Visitor Counter : 158