ஊரக வளர்ச்சி அமைச்சகம்

நாட்டில் கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதில் தேசிய ஊரக வாழ்வாதார திட்டத்தின் சுய உதவிக் குழு பெண்கள் சமூக வீரர்களாக உருவெடுத்துள்ளனர்

Posted On: 12 APR 2020 3:40PM by PIB Chennai

நாடெங்கிலும் உள்ள சுமார் 63 லட்சம் சுய உதவிக் குழுக்களின், தோராயமான 690 லட்சம் பெண் உறுப்பினர்களே, தீன் தயாள் அந்தோதயா யோஜனா எனப்படும் தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டத்தின் பலம் ஆவார்கள். கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதில் தங்களால் முடிந்த அனைத்து விதங்களிலும் பங்களித்து, சுய உதவிக் குழு உறுப்பினர்கள் சமூக வீரர்களாக உருவெடுத்துள்ளார்கள். கொவிட்-19 க்கு எதிரான பாதுகாப்பில் முகக் கவசங்கள் முன்னணியில் உள்ள நிலையில், அவற்றைத் தயாரிக்கும் பணியில் சுய உதவிக்குழுக்கள் உடனே ஈடுபட்டன. சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம், மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தல்களின் படியும், மாநிலங்களிலுள்ள சுகாதாரத் துறைகளின் வழிமுறைகளின் படியும், 2-3 மடிப்புகளுடன் கூடிய நெய்த மற்றும் நெய்யாத அறுவைசிகிச்சை முகக் கவசங்களை, சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கின்றன. இந்த முகக்கவசங்கள், சுகாதாரத்துறை, உள்ளாட்சி அமைப்புகள், உள்ளாட்சி நிர்வாகம், களத்தில் முன் நிற்கும் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கு வழங்கப்படுவதோடு, வெளிச்சந்தையிலும் விற்கப்படுகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள கிராமப்புற வீடுகளுக்கும் இவை இலவசமாக வழங்கப்படுகின்றன. மேலாடை, அங்கிகள் மற்றும் முக பாதுகாப்புக் கவசம் உட்பட தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களையும் சுய உதவி குழுக்கள் தயாரிக்கத் தொடங்கியுள்ளன.

27 மாநிலங்களின் ஊரக வாழ்வாதாரத் திட்டங்கள் அளித்த தகவல்களின் படி, சுய உதவிக்குழு உறுப்பினர்களால் சுமார் 1.96 லட்சம் முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன (8 ஏப்ரல் 2020 வரை). முகக்கவசங்கள் தயாரிப்பில் தற்போது சுமார் 78,373 சுய உதவிக்குழு உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் முதலில் ஈடுபட்ட ஜார்கண்ட் சுய உதவிக்குழுக்கள், 78,000 முகக்கவசங்களை மார்ச் 22, 2020 முதல் தயாரித்துள்ளனர். பல்வேறு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும், மானியத்துடன் செயல்படும் மருந்து கடைகளிலும், வாங்கக்கூடிய விலையிலான  ரூபாய் 10க்கு இந்த முகக்கவசங்கள் விற்கப்படுகின்றன.

மேலாடைகள், அங்கிகள் மற்றும் முக பாதுகாப்புக்கவசம் உட்பட தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களையும் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள சுய உதவிக்குழுக்களால் இதுவரை சுமார் 5,000 தனிநபர் பாதுகாப்பு உபகரணப் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

கிருமி நாசினிகள் மற்றும் கைகழுவும் பொருள்கள் கிராமப்பகுதிகளில் கிடைப்பதை உறுதி செய்ய, தீன் தயாள் அந்தோதயா யோஜனாதேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டத்தின் ஆதரவு பெறும் குறுநிறுவனங்கள் ஆகியவை அவற்றைத் தயாரிக்கும் பணியை மேற்கொண்டுள்ளன. 9 மாநிலங்களில் உள்ள 900 சுய உதவிக்குழு நிறுவனங்கள், 1.15 லட்சம் லிட்டர் கிருமிநாசினியைத் தயாரித்துள்ளன. இதில் தமிழ்நாடு, மத்திய பிரதேசம் மற்றும் ஆந்திரப்பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் மட்டும் தலா 25 ஆயிரம் லிட்டருக்கு மேல் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆந்திரபிரதேசம், இமாச்சல பிரதேசம், ஜார்கண்ட், கேரளா, மணிப்பூர், மத்திய பிரதேசம், நாகாலாந்து, தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் உள்ள 900 சுய உதவிக்குழு நிறுவனங்கள், அதிகரித்துள்ள தேவையை ஈடு செய்வதற்காக கிருமிநாசினிகளைத் தயாரித்து வருகின்றன.

***(Release ID: 1613664) Visitor Counter : 120