சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கோவிட்-19 குறித்த அண்மைச் செய்திகள்
Posted On:
11 APR 2020 6:22PM by PIB Chennai
நாட்டில் கோவிட்-19 நோய்த் தாக்குதலைத் தடுத்தல், கட்டுப்படுத்துதல் மற்றும் சிகிச்சை அளித்தலுக்கு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் ஒத்துழைப்புடன் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இவற்றை மிக உயர்நிலையில் உள்ள குழுவினர் அவ்வப்போது ஆய்வு செய்து கண்காணித்து வருகின்றனர்.
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்களுடன் காணொளிக் காட்சி மூலம் கலந்துரையாடிய போது, தற்போதைய நிலவரம் பற்றி ஆய்வு செய்தார். கோவிட்-19க்கு எதிரான நடவடிக்கைகளில் கூட்டாக செயல்படுவோம் என்று அனைவரும் உறுதியளித்தனர்.
தொடர்ச்சியான முயற்சிகள் மூலம், படிப்படியாக அணுகும் நடைமுறையின்படி, முக்கியமான பொருள்களுக்கு பற்றாக்குறை ஏதும் இல்லாமல் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்து வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் சுகாதார அலுவலர்களுக்கான தனிப்பட்ட முழு உடல் பாதுகாப்புக் கவச உடை, N-95 முகக்கவச உறைகள், மருத்துவப் பரிசோதனை உபகரணத் தொகுப்புகள், மருந்துகள் மற்றும் வென்டிலேட்டர்கள் போதிய அளவு கிடைக்கச் செய்வதும் இதில் அடங்கும். கோவிட் பாதித்த நோயாளிகளைக் கவனித்துக் கொள்ள, மத்திய, மாநில அரசுகள் அளவில் கோவிட்-19க்கென பிரத்யேகமான மருத்துவமனைகள் செயல்படும் நிலையை பலப்படுத்துவதையும் அரசு உறுதி செய்துள்ளது.
இப்போதுள்ள நிலையில் மத்திய, மாநில அரசுகளிடம் உள்ள வசதிகள் விவரம்:
- கோவிட் சிகிச்சைக்கான பிரத்யேக சிகிச்சை மையங்களின் எண்ணிக்கை: 586
- தனிமைப்படுத்தலுக்கான படுக்கை வசதிகள்: 1,04,613
- தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள்: 11,836
முன்கள சுகாதார அலுவலர்களின் திறன் மேம்பாட்டுக்காக, கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக, புதுடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை, இணையவழி பயிலரங்குகளைத் தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. இந்த இணையவழி பயிலரங்கு நடைபெறும் நேர விவரம் பின்வரும் இணையதளத்தில் அவ்வப்போது சேர்க்கப் படுகிறது: https://www.mohfw.gov.in
மேலும், சுவாச ஆரோக்கியத்துக்கான நோய் எதிர்ப்பாற்றலை மேம்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை ஆயுஷ் வெளியிட்டுள்ளது. மாவட்ட அளவில் தீர்வுக்கான அவசரத் திட்டங்களில், ஆயுஷ் முறையிலான தீர்வுகளையும் சேர்க்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இணையதளத்தில் உள்ளன.
கோவிட்-19 நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்த பல மாவட்ட நிர்வாகங்கள் புதுமைச் சிந்தனை முன்மாதிரித் திட்டங்களை அமல் செய்து வருகின்றன.
நேற்றில் இருந்து நாடு முழுக்க கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 1035 அதிகரித்துள்ளது. அந்த நோய்க்கான தீவிர சிகிச்சை தேவைப்படுவோர் எண்ணிக்கை 855 உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, மொத்த மரணங்களின் எண்ணிக்கை 239. மொத்தம் 642பேர் குணமாக்கப்பட்டுள்ளனர் / உடல்நலம் தேறி வீடு திரும்பியுள்ளனர். இப்போது வரையில் 7447 பேருக்கு இந்த நோய் உறுதி செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Release ID: 1613514)
Visitor Counter : 187