வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

கொவிட் பிரச்சினைக்குப் பிந்தைய காலத்தில் உருவாகும் வாய்ப்புகளை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்வதற்குத் தயாராகும் வகையில் ஏற்றுமதியாளர்கள் பெரிய அளவில் திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று திரு. பியூஷ் கோயல் வேண்டுகோள்; நாம் உலக அளவில் பொறுப்பான குடிமக்கள் என்று அவர் குறிப்பிட்டார்

Posted On: 08 APR 2020 7:46PM by PIB Chennai

நாட்டில் உள்ள பல்வேறு ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில்களுடன் மத்திய தொழில், வணிக அமைச்சகம் இன்று காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடல் நடத்தியது. கொவிட் - 19 பாதிப்பு, அதன் தொடர்ச்சியான முடக்கநிலையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் களநிலவரத்தை மதிப்பீடு செய்ய அந்தக் கூட்டம் நடந்தது. கொவிட் பிரச்சினைக்குப் பிந்தைய காலத்தில் உருவாகும் வாய்ப்புகளை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்வதற்குத் தயாராகும் வகையில் ஏற்றுமதியாளர்கள் பெரிய அளவில் திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று துறையின் அமைச்சர் திரு. பியூஷ் கோயல் வேண்டுகோள் விடுத்தார். நமது தரத்தை உயர்த்தி. திறன் அளவை அதிகரித்து, தரமான பொருளாதார வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்கி, விலையில் போட்டிநிலையை உருவாக்கினால், நாம் வளர்ச்சி பெற்று, கொவிட் பிரச்சினைக்குப் பிந்தைய உலகில் வாய்ப்புகளை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று அவர் கூறினார். ``ஒரு நாடு பெரிய அளவில் முயற்சிகள் மேற்கொண்டு, சந்தையில் ஆதிக்கம் செலுத்த முனையும்போது - தானாகவே நாம் தரத்தில் கவனம் செலுத்துவோம், உற்பத்தி விலை குறையும், உற்பத்தி அதிகரிக்கும், செயல் திறன் அதிகரிக்கும் என்பது என்னுடைய சொந்த நம்பிக்கையாக உள்ளது'' என்று அவர் கூறினார்.

ஏதாவது காரணத்தால் தடங்கலாகியுள்ள அவசரமான மற்றும் முக்கியமான ஏற்றுமதி ஆர்டர்கள் கூடிய சீக்கிரத்தில் கைக்கு கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் உத்தரவாதம் அளித்தார். ``ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களது சிந்தனையில் மாற்றம் செய்வதற்கு இதை விட சரியான தருணம் வராது. உங்களுக்கு பலமான துறையில் கவனம் செலுத்துங்கள். நம்முடைய பலம் எது என அறிந்து திட்டமிட வேண்டும்.. உலக அளவில் நமது பங்களிப்பு மிகவும் குறைவாகத்தான் உள்ளது. இதுபோன்ற துறைகளில் நாம் தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ளலாம்'' என்று அவர் கூறினார்.

 

****



(Release ID: 1612601) Visitor Counter : 149