உள்துறை அமைச்சகம்

கொவிட் 19 ஐ எதிர்த்துப் போரிட அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955ன்படி முழு அடைப்பின் போது அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதிசெய்ய மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது

Posted On: 08 APR 2020 11:20AM by PIB Chennai
நாட்டில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கல் சுமுகமாக பராமரிக்கப்படுவதற்கென அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய அவசர நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாநில அரசுச் செயலர்களுக்கும் மத்திய உள்துறைச் செயலர் திரு அஜய் குமார் பல்லா கடிதம் எழுதியிருக்கிறார். அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955ன்படி அவர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இருப்பு வரம்பை நிர்ணயித்தல் , அதிகப்பட்ச விலை நிர்ணயம், உற்பத்தியை உயர்த்துதல், மொத்த விற்பனையாளர்களின் கணக்குகளை ஆய்வு செய்தல் மற்றும் இது போன்றவை இந்த நடவடிக்கைகளில் அடங்கும். பல்வேறு காரணங்களால், குறிப்பாக தொழிலாளர் பற்றாக்குறை போன்ற காரணங்களால் உற்பத்தி இழப்பு ஏற்பட்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது. இந்தச் சூழலில் பதுக்கல், கருப்புச் சந்தை, கொள்ளை லாப விற்பனை, எதிர்ப்பார்ப்பு வர்த்தகம் ஆகியவற்றுக்கான சாத்தியக் கூறுகளால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும். எனவே. பொது மக்களுக்கு நியாயமான விலையில் இந்தப் பொருட்கள் கிடைக்கச் செய்ய மாநிலங்கள் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக, பேரிடர் நிர்வாக சட்டத்தின் கீழ், உள்துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவின்படி, உணவுப் பொருட்கள், மருந்துகள், மருத்துவக் கருவிகள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் தொடர்பான உற்பத்தி, போக்குவரத்து மற்றும் வழங்கல் சங்கிலிச் செயல்பாடுகள் போன்றவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

(Release ID: 1612279) Visitor Counter : 316