விவசாயத்துறை அமைச்சகம்

ஊரடங்கு காலத்தில் விவசாயப் பணிகள் தொடர்வதற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் காணொளிக் காட்சி மூலம் வேளாண் துறை அமைச்சர் ஆலோசனை

Posted On: 07 APR 2020 8:12PM by PIB Chennai
ஊரடங்கு காலத்தில் விவசாயப் பணிகள் தொடர்வதற்கு செய்யப்படுள்ள ஏற்பாடுகள் குறித்து மூத்த அதிகாரிகளுடன் காணொளிக் காட்சி மூலம் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர் இன்று ஆய்வு நடத்தினார். வேளாண்மை மற்றும் அது தொடர்பான துறைகளுக்கு அளித்துள்ள விலக்குகளை கடுமையாகப் பின்பற்றுமாறு திரு.தோமர் கேட்டுக் கொண்டார். பல்வேறு விலக்குகள் மற்றும் சலுகைகளைத் தொடர்ந்து கண்காணிக்க கட்டுப்பாட்டு அறைகளை அமைக்குமாறு அமைச்சர் உத்தரவிட்டார். வேளாண்மை மற்றும் அது தொடர்பான துறைகளுக்கு அளிக்கப்பட்டுள்ள விலக்குகள் மற்றும் சலுகைகளை அமல்படுத்தும் போது, தனி நபர் இடைவெளி தொடர்பான விதிகள் முறையாக பின்பற்றப்படுவதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருள்களை தங்களது விளை நிலத்தின் அருகிலேயே விற்பனை செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அதோடு, மாநிலங்களுக்கு உள்ளேயும், மாநிலங்களுக்கு இடையேயும் விவசாயப்பொருள்கள் தடையில்லாமல் கொண்டு செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார். கோவிட்-19 வைரஸ் தொற்றை சிறப்பாகக் கட்டுப்படுத்துவதற்கு மண்டிகளில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டியது அவசியமாகிறது. இதற்காக விவசாயிகளின் விற்பனையை வலுப்படுத்துவதற்காக தேசிய வேளாண் சந்தை (e-nam) அமைப்பில் புதிய சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம், விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருள்களை விற்பதற்காக மொத்த விற்பனை மண்டிகளுக்கு நேரில் வரவேண்டிய தேவை குறைகிறது. ரூ.3 லட்சம் வரையான குறுகியகாலப் பயிர்க்கடன்களுக்கு மார்ச் 1, 2020 முதல் மே 31 வரை செலுத்த வேண்டிய தவணைக்கான காலத்தை மே 31, 2020 வரை அரசு நீட்டித்துள்ளது. நீட்டிக்கப்பட்ட காலக்கெடு வரை விவசாயிகள் 4 சதவீத வட்டியுடன் எந்தவித அபராதமும் இன்றி தவணைத் தொகையைத் திரும்பச் செலுத்தலாம்.

(Release ID: 1612166) Visitor Counter : 150