அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
கொவிட்-19 வைரஸைக் கண்டறிவதற்கான பரிசோதனைக் கருவிகளை சி.எஸ்.ஐ.ஆர்-சி.எஃப்.டி.ஆர்.ஐ வழங்கி உள்ளது
Posted On:
07 APR 2020 10:14AM by PIB Chennai
மைசூரில் கொரோனா தொற்றுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 28ஆக அதிகரித்து உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7 புதிய நோயாளிகள் இங்கு கண்டறியப்பட்டு உள்ளனர். இந்தத் தகவல் கர்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அண்மைக்கால ஊடகச் செய்திக்குறிப்பில் இருந்து தெரிய வருகிறது. இத்தகையச் சூழலில் மைசூரில் செயல்பட்டுவரும் சி.எஸ்.ஐ.ஆர்- மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (CSIR-CFTRI), தொற்றுள்ளதா என்று மாதிரிகளை பரிசோதிக்கத் தேவைப்படும் உபகரணங்களை மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கி கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் அவர்களுடன் கைகோர்த்துள்ளது.
கொவிட்-19 தொற்றானது தற்போது நிகழ்நேர பாலமெரேஸ் செயின் ரியாக்ஷன் (PCR) என்ற அதிநவீன மற்றும் துல்லியமான தொழில்நுட்பம் மூலம் கண்டறியப்பட்டு வருகிறது. நோயாளியிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் உள்ள வைரசின் ஆர்என்ஏ-வை (RNA) பிரித்தெடுக்கும் முறையில் இந்த பிசிஆர் பரிசோதனையானது செய்யப்படுகிறது. பிரித்தெடுக்கப்பட்ட ஆர்என்ஏ-வை பிசிஆர் இயந்திரமானது பெரிதாக்கிக் காட்டும். பிசிஆர் பரிசோதனையின் மிகச் சிறப்பான பலன் என்னவென்றால் இது ஒரு நபருக்கு நோய் அறிகுறிகள் வெளித்தெரிவதற்கு முன்பே அதாவது தொற்று ஏற்பட்ட தொடக்க காலத்திலேயே வைரஸைக் கண்டறிந்துவிடும் என்பதே ஆகும்.
சி.எஸ்.ஐ.ஆர்-சி.எஃப்.டி.ஆர்.ஐ நிறுவனமானது மாவட்ட நிர்வாகத்துக்கு தேவையான வேதிப்பொருட்களுடன் 2 பிசிஆர் இயந்திரங்களையும் ஒரு ஆர்என்ஏ பிரித்தெடுக்கும் இயந்திரத்தையும் வழங்கி உள்ளது. மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் மாதிரிகளை பரிசோதிப்பதற்கு இவை உதவியாக இருக்கும்.
மாவட்ட நிர்வாகத்திடம் பிசிஆர் இயந்திரங்கள் இரண்டும் ஏப்ரல் 5, 2020 அன்று வழங்கப்பட்டன. இந்த இயந்திரங்கள் ஒரு நாளைக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளை மூன்று மடங்கு அதிகரிக்க உதவும். ஆர்என்ஏ பிரித்தெடுப்பு இயந்திரம் இன்னும் ஒரு வார காலத்திற்குள் வந்து சேரும்.
*****
(Release ID: 1611946)
Visitor Counter : 185
Read this release in:
English
,
Gujarati
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Kannada