குடியரசுத் தலைவர் செயலகம்
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்களுடன் கொவிட்-19 குறித்த செயல்பாடுகள் பற்றி குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் கலந்தாடல்
Posted On:
03 APR 2020 4:55PM by PIB Chennai
கொவிட் -19 நோய்த் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில் அசாத்தியமான துணிச்சல், ஒழுங்கு மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்தியதன் மூலம் நாட்டு மக்கள் ஓர் உதாரணத்தை உருவாக்கியுள்ளதாக குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். ஆனந்த் விஹாரில் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் கூட்டமாகக் கூடியது, நிஜாமுதீனில் தப்லிக்கி ஜமாத் கூட்டம் என டெல்லியில் நடந்த இரு நிகழ்வுகளுமே இந்த முயற்சிகளுக்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்திவிட்டன என்று அவர் கவலை தெரிவித்துள்ளார்.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்களுடன், குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் ஆகியோர் கலந்தாடல் செய்து, கொவிட் 19 நோய்த் தொற்றை சமாளிப்பது குறித்து மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு எந்த வகைகளில் பங்களிப்பு செய்யலாம் என்று விவாதித்தனர். நாடு தழுவிய முடக்கநிலை காலத்தில் எந்தவொரு தனிநபரும் பட்டினி கிடக்கக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று குடியரசுத் தலைவர் வலியுறுத்தினார்.
15 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள், தங்கள் பகுதிகளில் உள்ள நிலவரம் குறித்து மார்ச் 27 ஆம் தேதி கலந்தாடலின் போது குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் ஆகியோரிடம் தகவல்களைத் தெரிவித்துள்ளனர். இன்றைக்கு மீதியுள்ள 21 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள், நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் கொவிட்-19க்கு எதிரான நடவடிக்கைகள் பற்றி குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவரிடம் தகவல்களைத் தெரிவித்தனர். கண்ணுக்குத் தெரியாக எதிரிக்கு எதிரான போராட்டத்தில் எந்தவிதமான அலட்சியமோ அல்லது தயக்கமோ இல்லை என்பதில் அனைவரும் ஒருமித்த கருத்தாக தெரிவித்தனர். இந்த விஷயத்தைப் பொருத்த வரையில், டாக்டர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர் மீது நாட்டின் சில பகுதிகளில் தாக்குதல் நடப்பது குறித்து குடியரசுத் தலைவர் கவலை தெரிவித்தார். கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கையில் மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், வருகிற ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு அனைத்து குடிமக்களும் வீடுகளில் மின்விளக்குகளை அணைத்துவிட்டு, செல்போன் பிளாஷ்லைட்கள், டார்ச்சுகளில் வெளிச்சம் ஏற்படுத்துவது அல்லது விளக்குகள் ஏற்றுவது என்ற பிரதமரின் அழைப்பை முழுமனதுடன் ஏற்பதாக அவர் தெரிவித்தார். இருந்தபோதிலும், தங்களுடைய கட்டுப்பாட்டை இழந்துவிடக் கூடாது என்றும், சமூக இடைவெளியை பராமரித்தல் நிலையை மக்கள் உறுதியாகக் கடைபிடிக்க வேண்டும் என்றும் குடியரசுத் தலைவர் வலியுறுத்தினார்.
மார்ச் 27 ஆம் தேதி காணொலிக் காட்சி மூலம் நடந்த கலந்தாடலில் ஆக்கபூர்வமான விஷயங்கள் பகிரப்பட்டதாக குடியரசுத் தலைவர் தனது தொடக்க உரையில் குறிப்பிட்டார். அப்போது ஏராளமான பயனுள்ள யோசனைகள் முன்வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். பல்வேறு மாநிலங்களில் பாராட்டுக்குரிய முன்முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன, அவை குறித்து முந்தைய கலந்தாடலில் குறிப்பிடப்பட்டன என்று அவர் நினைவுகூர்ந்தார். ஓய்வுபெற்ற டாக்டர்கள் மற்றும் மருத்துவ மாணவர்களைப் பதிவு செய்தது, உளவியல் நிபுணர்களின் சேவையை பயன்படுத்திக் கொள்வது, தன்னார்வலர்களாக செயல்பட இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தது தினசரி ஆய்வுக் கூட்டங்கள் மூலம் நிலைமையைக் கண்காணிப்பது, பட்டினிக்கு எதிரான ஹெல்ப்லைன்கள் உருவாக்கியது, வீடுகளுக்கே உணவு மற்றும் பொருட்களை வழங்குதலை ஊக்குவிக்கும் முயற்சிகள், நிவாரணப் பணிகள் மற்றும் தனிமைப்படுத்தல் பகுதி வசதிகளுக்காக விளையாட்டு அரங்குகளைப் பயன்படுத்துவது, விழிப்புணர்வைப் பரப்புவதில் பல்கலைக்கழகங்களைப் பயன்படுத்துவது போன்ற முந்தைய கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட தகவல்களை குடியரசுத் தலைவர் தனது தொடக்க உரையில் நினைவுகூர்ந்தார்.
வீடில்லாதவர்கள், வேலையில்லாதவர்கள் மற்றும் சமூகத்தில் நலிவடைந்த பிரிவினர், இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றிக் குறிப்பிட்ட குடியரசுத் தலைவர், அவர்களுடைய தேவைகள் குறித்து நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
நாட்டு குடிமக்களின் பொறுமை மற்றும் ஒத்துழைப்பு குறித்து குடியரசுத் தலைவர் பாராட்டு தெரிவித்தார்.
இந்தக் கலந்தாடலை நடத்திய குடியரசு துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு, ஏழைகளின் துன்பங்களைக் களைவதில் இந்திய செஞ்சிலுவைச் சங்க தன்னார்வலர்கள், சமூக அமைப்புகளின் தன்னார்வலர்கள் மற்றும் தனியார் துறையினரின் சேவைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். சமூகத்தில் எளிதில் பாதிப்புக்கு இலக்காகும் மக்களுக்கு, குறிப்பாக விவசாயிகளுக்கு, பல மாநிலங்களில் முடக்கநிலை காலம் அறுவடை பருவத்துடன் இணைந்து வந்திருப்பதால் விவசாயிகளுக்கு ஆதரவான செயல்பாடுகளுக்காக சமூகத்தின் பல்வேறு தரப்பிலான தலைவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள், நிர்வாக அதிகாரிகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். மக்களின் துன்பங்களைக் களைவதற்கு மத்திய, மாநில அரசுகள் போதிய நடவடிக்கைகள் எடுத்து வருகிற போதிலும், இந்த நெருக்கடியான காலகட்டத்தில் ஏழைகளுக்கும், அதிகம் பாதிப்புக்கு இலக்காகும் மக்களுக்கும் மேல்தட்டு வர்க்கத்தினர் உதவி செய்ய முன்வந்து ஆதரவு அளிப்பது மனித மாண்புகளை வெளிப்படுத்தும் செயலாக அமையும் என்பதை குடியரசு துணைத் தலைவர் சுட்டிக்காட்டினார்.
****
(Release ID: 1610737)
Visitor Counter : 210
Read this release in:
English
,
Kannada
,
Urdu
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam